திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய “பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்”, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தொகுத்த “காந்தியை சாய்த்த கோட்சேவின் குண்டுகள்”, தஞ்சை பசு கௌதமன் தொகுத்த “ஏஜிகேவின் நினைவுகளும். நிகழ்வுகளும்”, புதுச்சேரி இராவணன் பதிப்பகம் தொகுத்த “பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் (போர்களத்தின் வெற்றிகள்)” ஆகிய நூல்களின் அறிமுக விழா ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 12 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ப.இரத்தினசாமி தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.

book release 600

விழாவிற்கு வந்த அனைவரையும் பொள்ளாச்சி விஜயராகவன் வரவேற்று உரையாற்றினார். தலைமைக் குழு உறுப்பினர்கள் திருப்பூர் துரைசாமி, கோபி இராம இளங்கோவன், தமிழ் உணர்வாளர், பகீரதன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள். பின்னர், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் குருவரெட்டியூர் நாத்திக ஜோதி, நாமக்கல் மாவட்ட செயலாளர் திருச்செங்கோடு மா.வைரவேல், கோவை புறநகர மாவட்ட தலைவர் மேட்டுப் பாளையம் ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .

தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மருத்துவ உதவி புரிந்த மருத்துவர்களுக்கு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்போரில் காயம்பட்டு தமிழகம் வந்த போராளிகளுக்கு ஈரோடு மாவட்டத்திலிருந்து மனித நேயமிக்க தமிழ் இன உணர்வு மிகுந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அப்படி சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் தமிழ் இன உணர்வாளர்களுக்கும் அவர்களின் தொண்டினை நினைவுகூரும் வகையில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

மருத்துவர் காளி கவுண்டன், மருத்துவர் நடேசன், மருத்துவர் ஜீவானந்தம், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும் ஒரு வருடம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருந்த திராவிடர் கழகத்தை சார்ந்த ஆ. மாரப்பனார், காயம்பட்ட புலிகளுக்கு இரத்தங்கள் சேகரித்து கொடுத்த ஈரோடு சாந்தி இரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் சக்திவேல், கழகத்தலைவர் கொளத்தூர் மணியுடன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 4 மாதங்கள் சிறையில் இருந்த தமிழ் உணர்வாளர் மா.சீனிவாசன், ரிப்போர்ட்டர் இராஜேந்திரன், மருத்துவர் சக்திவேல், வெள்ள கோவில் மருத்துவர் கார்மேகம் மற்றும் அவரது துணைவியாருக்கும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இறுதியாக நூல்களை அறிமுகப்படுத்திய திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் தூத்துக்குடி பால் பிரபாகரன், எழுத்தாளர் தஞ்சை பசு கௌதமன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் உரையாற்றிய பின் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியனின் மகன் தமிழ்பிரியன் சென்னை யில் உள்ள மத்திய அரசின் தோல் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்வில், ‘தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு’ குறித்து எழுதிய கட்டுரை முதலிடம் பெற்றது. இதனை பாராட்டி கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழ்பிரியனுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார். இறுதியாக ஈரோடு மாநகர துணைத்தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

விழாவில், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் சென்னிமலை செல்லப்பன், நாமக்கல் மாவட்ட தலைவர் குமாரபாளையம் சுவாமிநாதன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திங்களூர் அர்சுனன், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில்ராசு, ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளர்கள் சென்னிமலை செல்வராசு, மரவப்பாளையம் ப.குமார், ஈரோடு மாநகர செயலாளர் சிவானந்தம், மேட்டூர் கிட்டு, தலைமைக்குழு உறுப்பினர் மேட்டூர் சக்திவேல், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

செய்தி மன்னை இரா.காளிதாசு.

Pin It