இந்திய அரசின் அதிகார மையமாக நிர்வாகத்துறை, நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறை ஆகிய அனைத்திலும் தங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளவர்கள் பார்ப்பனியக் கோட்பாடுகளை மூச்சுக்காற்றாகக் கொண்ட உயர் சாதிச் சிறுபான்மைக் குழுவினர்கள். வெறும் மேட்டிமைத் தனத்தையே தங்கள் அறிவாளுமையாகப் பீற்றிக்கொள்ளும் சமூகப் பொறுப்புணர்வற்றவர்கள் அவர்கள். சமூக நீதி என்றால் என்னவென்றே அறியாதவர்கள். உயர்வு தாழ்வு பேசும் பிறவிக் கோட்பாட்டைத் தகர்க்கத் திராணியற்ற வெகுமக்களின் பாமரத்தனத்தில் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். சாதிப் பகுப்பு முறையால் தாழ்ந்தும், தாழ்த்தப்பட்டும், பிற்பட்டும், பற்படுத்தப்பட்டும், புறக்கணிப்புக்குள்ளான வெகுமக்களை மேம்படுத்தும் ஒரு நடைமுறை உச்சியாகக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

அது ஆங்கிலேயர் காலத்திலிருந்தே அடிப்படை உரிமையாக்கப் பட்டுள்ள ஒன்று. ஆனால் அதை இன்றுவரை முறையாக நிறைவேற்ற முடியவில்லை. காரணம் அதிகார மையம் அதை விடாப்பிடியாக கலைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தில்லியில் பெரும் போராட்டத்தை நடத்தினர் “மேல்சாதி” மாணவர்கள். அந்த போராட்டத்தை தூண்டிவிட்டவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குனர் டாக்டர் வேணுகோபால். உச்சநீதிமன்றமும் அவருக்குப் பக்கத்துணையாக நின்றது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக இவர்கள் சொல்லும் காரணம் “தரம் தாழ்ந்துவிடும்”, “திறமை புறக்கணிக்கப்படும்”, “அறிவுநிலை மகனப்பட்டுவிடும்” என்பவைதாம். இந்த அபத்த வாதங்களை புத்திசாலிகள் என்று தங்களை முன்னிறுத்திக் கொள்கிறவர்கள் காதுகொடுத்து கேட்பது மட்டுமின்றி நம்பவும் செய்கிறார்கள்.

நடைமுறையில் இதை ஒருபோதும் அவர்கள் தங்கள் நடத்தை மூலம் நிரூபித்ததில்லை. மிகச் சரிவரப் பிற்பற்றாவிட்டாலும் எல்லா குற்றம் குறைகளோடும் இடஒதுக்கீட்டை பின்பற்றிவரும் தமிழ்நாட்டு நிர்வாகத் திறமை பிற எந்த மாநிலத்திற்கும் பின்தங்கியதல்ல என்னும் புலப்பாட்டை ஓர் உதாரணமாகக்கூட அவர்கள் கண்டுகொள்வதில்லை. “தகுதி, தரம், திறமை” என்று பேசுகிறவர்களின் வெட்கக்கேடான முறைகேடுகளையும், திறமைக் குறைவுகளையும், மனக்கறைகளையும், சாதித் திமிரையும் வேண்டுமென்றே ஊடகமும் மேல்வர்க்கமும் பார்க்க மறுக்கிறார்கள்; மூடி மறைக்கிறார்கள்; விதிவிலக்கு போலப் புறக்கணித்து விடுகிறார்கள். இந்தத் திறமையாளர்களின் நிர்வாகத்தில்தான் இந்தியா சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

“டார்டர் வேணுகோபால் நல்ல மருத்துவர்; ஆனால் மோசமான நிர்வாகி” என்று அன்புமணி ராமதாஸ் சொல்கிறார். அவருக்குள்ள நெருக்கடி அவ்வாறு அவரைப் பகுதியாக அங்கிகரிக்க நிர்பந்திக்கிறது. ஆனால் எத்தனையோ நல்ல மருத்துவர்களில் வேணுகோபாலும் ஒருவராகக்கூட இருக்கத் தகுதியுள்ளவரா என்பது பெரிய கேள்விக்குறியே. இயக்குநராய் இருக்கும் அளவுக்கு அவர் ஒருபோதும் மீத்திறன்களை நிரூபித்தவரோ, அரிய ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவரோ அல்லர் என்பதுதான் அப்பட்டமான உண்மை. அதற்கும் மேலாக அவர் ஒரு ஆலிக் கடைந்தெடுத்த ஊழல் பேர்வழியும் கூட. அதை நிரூபிக்கும் ஓர் ஆவணமாகக் கீழ்காணும் தினமணி செய்தியை இங்கு தருகிறோம். இப்படிப்பட்ட நாலாந்தரப் பேர்வழிகள்தான் தகுதி-திறமை பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள். உச்சநீதிமன்றமும் காதுகொடுத்து கேட்பதுமட்டு மல்லாமல் அதை தட்டியும் கொடுக்கிறது.

தினமணி செய்தி:

வேணுகோபாகன் ஆதரவாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணம், நட்சத்திர விருந்து: மக்கள் பணத்தில் “கொண்டாட்டம்”

புதுதில்லி, அக்.24: சர்ச்சைக்குரிய அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக இயக்குநர் டாக்டர் பி.வேணுகோபால், தனது ஆதரவாளர்களுக்கு, வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தளித்து, பொதுமக்கள் பணத்தில் குஷிப்படுத்தியுள்ளார் என்பது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஏஐஐஎம்எஸ்ஸின் நிர்வாக அமைப்புக் கூட்டம் கடந்த வாரம் நடந்தபோது, இது தொடர்பான ஆவணங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. அந்த ஆவணங்களின் மூலம், நோயாளிகளுக்கு அல்லாமல் மற்ற தேவையற்ற காரியங்களுக்கு பொதுமக்கள் பணம் விரயமாக்கப்பட்டது தெளிவாகியுள்ளது.

ஏஐஐஎம்எஸ் இயக்குநர், துணை இயக்குநர் அலுவலகத்தின் நான்காம் பிரிவு ஊழியர்கள், மூத்த நிதி நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு செல்போன்கள் மக்கள் பணத்தில் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஆடம்பர விருந்துகளும் அளிக்கப் பட்டுள்ளன.

இயக்குநர்களுக்கு வேண்டிய நபர்களுக்கு, தகுதியில்லாவிட்டால் கூட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, விமான டிக்கெட்டுகளுக்காக பெருமளவு தொகை செலவிடப்பட்டுள்ளது. அதுபோன்ற கருத்தரங்குகளுக்கு அனுப்பப்பட்டவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, அவர்களுக்கும் அந்தக் கருத்தரங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. நோயாளிகளிடமிருந்து அறுவை சிகிச்சை மற்றும் ஸ்கேனிங் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்காக ஏஐஐஎம்எஸ் நிர்வாகத்தால் வசூகக்கப்பட்ட டெபாசிட் தொகை சுமார் ரூ.40 கோடி, விதிகளுக்கு மாறாக, நிரந்தர டெபாசிட்டில் போடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை நடைபெறாத நிலையில் அந்தத் தொகை நோயாளிகளுக்குத் திருப்பியளிக்கப் பட்டிருக்க வேண்டும்.

குற்றப்பிரிவு போலீசாரிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய விசாரணையில் வெளியான இந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வேணுகோபால் உடனடியாகப் பதிலளிக்க முடியவில்லை.

அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிகள் மற்றும் நோயாளிகளுக்கான உணவுப் பொருள்கள், டெண்டர் முறையில் முடிவு செய்யாமல், ஒவ்வொரு ஆண்டும் ஒரே குறிப்பிட்ட சப்ளையரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பொதுமக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான ஆதாரங்கள் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி, 25-10-2006

Pin It