நவீன தமிழ் இலக்கிய ஆளுமை யாக, வாழ்ந்து காட்டிய ஜெயகாந்தன் முடிவெய்தி விட்டார். வாழ்க்கையின் நுட்பமான மனித உணர்வுகளை தனது எழுத்து வன்மையால் கதாபாத்திரங் களாக உலவவிட்ட பெருமை அவருக்கு உண்டு. இன்றைக்கு 50 வயதைக் கடந்தவர்களில் இலக்கிய ஈடுபாடு கொண்ட பெரும்பான்மை யோர் அவரது எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப் பார்கள் என்று கூற முடியும். தனது கதாபாத்திரங்களை உரத்தக் குரலில் விவாதிக்க வைத்தார். ‘ஆனந்த விகடனில்’ அவர் 1968இல் எழுதிய ‘அக்னி பரீட்சை’ கதை பலத்த விவா தங்களை எழுப்பியது. அப்பாவிப் பெண், ஒரு பணக்கார இளைஞனால் ஏமாற்றப்பட்டு, பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் தலையில் தண்ணீரைத் தெளித்து எல்லாம் சரியாகப் போய் விட்டது என்று கூறுகிறார், அவள் தாய். இது நிகழ்வது ஒரு பார்ப்பனக் குடும்பத்தில். ‘கற்பு’ என்ற ‘புனித’த்தை கட்டுடைத்த கதை அது.

கணவன், மனைவி மனப் போராட்டத்தை விவாதிக்கும், “கோகிலா என்ன செய்து விட்டாள்?”, ‘அக்னிப் பிரவேசம்’ சிறுகதையின் தொடர்ச்சியாக எழுதிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ சேரிவாழ் மக்களின் வாழ்க்கையை இயல்பாக அவர்களது மொழியில் ‘கண்ண தாசன்’ இலக்கிய இதழில் அவர் எழுதிய ’சினிமாவுக்கு போன சித்தாளு’, செய்யாத ஒரு திருட்டுக் குற்றத்துக்காக பழி சுமந்து அழும் ஏழை தொழிலாளியின் அவலத்தை விளக்கிடும் ‘யாருக்காக அழுதான்!’

கலைகளின் நோக்கம், தத்துவம் குறித்து விரிவாக விவாதிக்கும் ‘பாரிசுக் குப் போ’ என்று எத்தனையோ பாராட்டுக்குரிய இலக்கியங்களை படைத்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

அதே நேரத்தில், அவர் குழப் பத்தில் சிக்கித்தவித்த மனிதராகவே மாறிப் போனார் என்பதையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். இளம்வயதில் கம்யூனிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கியவர். பொருள் முதல் வாதத்தையும், ஆன்மீகத்தையும் இணைக்கப்போய், மார்க்சியத்தை வேதாந்தங்களிலும் விவேகானந்தரி லும் தேடத் தொடங்கினார். ‘துக்ளக்’கில் அவர் தொடராக எழுதிய “ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்” தொடரில் இராஜ கோபாலாச்சாரி கொண்டுவந்த குலக் கல்வித் திட்டத்தை நியாயப்படுத்திய தோடு, ‘வர்ணாஸ்ரம’த்துக்கும் அது கட்டமைத்த சமூக அமைப்புக்கும் மகுடம் சூட்டினார். தன்னை ஒரு ‘சூத்திரன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுவதாக அறிவித்துக் கொண்டார். இந்தக் குழப்பங்கள் அவரை பார்ப்பனியத் திடம் கொண்டு போய் சேர்ந்தது.

‘ஜெய ஜெய சங்கரா’வில் காஞ்சி மடத்தின் பெருமைகளை எழுதத் தொடங்கி விட்டார். கம்யூனிஸ்ட்டாக தொடங்கி, பிறகு ஈ.வெ.கி. சம்பத்தின் ‘தமிழ் தேசியத்தில்’ இணைந்து, கடைசியில் காங்கிரசின் தேசியத்தில் அடைக்கலமானார். தீவிர திராவிட இயக்க எதிர்ப்பாளராக அடையாளம் காட்டி, ஒரு கட்டத்தில் ‘சமஸ்கிருதத்தின்’ பெருமைகளைப் பேசினார். பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அவர் பேசிய கூட்டங் களில் எதிர்கேள்வி கேட்கும் நிலை உருவானது. அவரது இறுதி காலத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர், அவரது மருத்துவத்துக்கு செய்த உதவிகள் காரணமாக அவரை தி.மு.க. தலைமையோடு நெருக்கத்தை ஏற்படுத்தியது. 81 வயது நிறை வாழ்வு வாழ்ந்திருக்கிறார். அவரது மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர் களோடு, இடதுசாரி இயக்கம், பா.ஜ.க., திராவிடர் கழகம், காஞ்சி ஜெயேந்திரன் என்று இரங்கல் அறிக்கைகள் வந்துள்ளன.

“மகா பெரியவரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளை நான் கூறிய போது நாத்திகத்தை கைவிட்டு, ஆன்மீகத்தின் பாதையில் எழுத லானார்” என்று காஞ்சி ஜெயேந்திரன், இரங்கல் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

வள்ளலார் போன்ற ஆன்மிக வாதிகள்கூட தங்கள் ஆன்மிகத்துக்கு, சமுதாயக் கண்ணோட்டத்தை அடித் தளமாகக் கொண்டிருந்தபோது, காஞ்சி மடத்தின் பார்ப்பன ஆன்மிகத்துக்குப் பலியாகிப் போனார் ஜெயகாந்தன். இது ஒரு அவலம்தான்! சமூகப் பார்வையை முன்னிறுத்தாமல், தனது சுயஅடையாளப் பெருமைக் குள் சிக்கிக் கொள்வதால் நேரிடும் விபத்துகளே இவை!

Pin It