எதிர் ஊர்வலம்: தோழர்கள் கைது! 

விநாயகன் சிலை ஊர்வலம் என்ற பெயரில் மதவெறி அரசியல் ஊர்வலத்தை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகள் தொடர்ந்து நடத்தி, பதட்டத்தை உருவாக்கி வருகின்றன. சென்னையில் இதற்காக பெரும் தொகை செலவிடப்படுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட அப்பாவி இளைஞர்கள் இந்த ஊர்வலங்களுக்காக வலைவீசப்படுகிறார்கள். இதில் பெரும்பகுதி இளைஞர்கள் அன்றைய ஒரு நாள் மகிழ்ச்சியை கொண்டாடுவதைத் தவிர வேறு மதவெறி அரசியலில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. ஆனால், ‘இந்துத்துவா’ அரசியலுக்கு மக்கள் ஆதரவு இருப்பதுபோல் ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

1996 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது, அதன் தொடக்க விழாவிலேயே சென்னையை அச்சுறுத்தி வரும் விநாயகன் சிலை ஊர்வலத்துக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்பட்டது. விநாயகன் சிலை ஊர்வலம் வரும் பாதையில் அதற்கு நேர் எதிராக பெரியார் சிலை ஊர்வலத்தை நடத்துவோம் என்று தொடக்க விழா நிகழ்விலேயே பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது.

அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, விநாயகன் சிலை பெயரிலோ, பெரியார் சிலை பெயரிலோ ஊர்வலங்கள் நடத்தி இரத்தம் சிந்த அரசு அனுமதிக்காது என்று கூறினார். விநாயகன் சிலை ஊர்வலங்களை அந்தந்த பகுதியினரே தனித்தனியாக காவல்துறை பாதுகாப்புடன் கடலில் கரைக்க அரசு ஏற்பாடு செய்தது. இதன் மூலம் ஒரே இடத்திலிருந்து அனைத்துப் பகுதி விநாயகன் சிலைகளையும் கொண்டு வந்து ஒரே ஊர்வலமாக செல்லும் முறைக்கு தடைவிதிக்கப்பட்டது.

பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு விநாயகன் சிலை ஊர்வலங்களை அரசு அனுமதிக்கக் கூடாது என்று பெரியார் கைத்தடி ஊர்வலத்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. சென்னை தோழர்கள் கைது செய்யப் பட்டனர்.

மதவெறி அரசியலைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தது.

ஒவ்வொரு முறையும் இந்து முன்னணியினர் நடத்தும் விநாயகன் சிலை ஊர்வலத்தின்போது மசூதி இருக்கும் பகுதியில் அந்த அமைப்பின் நிறுவனர் இராமகோபாலன் செல்ல முயல்வதும், பிறகு கைது செய்யப்பட்டு உடன் விடுதலை செய்யப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

இதன் மூலம் இந்த விநாயகன் சிலை ஊர்வலம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதை உணர்த்தி வருகிறார்கள். இந்து மத ஊர்வலம் என்ற பெயரில் இப்படி மதக் கலவரத்தை உருவாக்கும் மதவெறி அரசியலுக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பெரியார் கைத்தடி ஊர்வலங்களை நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக செப்.7 அன்று இந்து முன்னணியினர் ஊர்வலம் நடத்திய அதே நாளில் அதே நேரத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பெரியார் கைத்தடிகளை குறியீடாக ஏந்திக் கொண்டு கருஞ் சட்டையுடன் “மதத்தை அரசியலாக்காதே; கடல் நீரில் இரசாயன நஞ்சைக் கலக்காதே; தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக மாற்றாதே; வீடுகளில் நடக்கும் மத நிகழ்வுகளை வீதிக்குக் கொண்டு வராதே; போராடும்; போராடும்; மதவெறி அரசியலுக்கு எதிராக பெரியார் படை போராடும்” என்ற முழக்கங்களை எழுப்பி 150க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழகத் தோழர்கள் கருப்புடையுடன் புறப்பட்டனர். போராட்டத்துக்கு கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார்.

புதுவையிலிருந்து பெரியாரியல் முன்னணி தோழர்கள், தோழர் தீனா தலைமையிலும் விழுப்புரத்திலிருந்து கழகப் பொறுப்பாளர் பெரியார் வெங்கட் தலைமையிலும், காஞ்சிபுரம் மாவட்டக் கழகத் தோழர்களும் திரண்டு வந்திருந்தனர். மாலை 4 மணியளவில் அய்ஸ்அவுஸ் மசூதி அருகே தோழர்கள் திரண்டு ஒலி முழக்கங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டனர். நேர் எதிர்திசையில் விநாயகன் சிலை ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.

பதட்டமான சூழலில் காவல்துறையினர், தோழர்களை தடுத்து நிறுத்தி 110 தோழர்களை கைது செய்தனர். அப்போது மழை கொட்டியது. இலாயிட்சு சாலையிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அனைவரும் வைக்கப்பட்டு, இரவு 8 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற கழக முன்னணியினர் : தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் சுகுமார், பா.ஜான் மண்டேலா, தட்சணா மூர்த்தி, அருள்தாசு, யேசு குமார், விஜயஇரணியன், காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் தினேஷ், செங்குட்டுவன், தெள்ளமிள்து, வேலூர் திலிபன், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் அய்யனார், வெங்கட் மற்றும் க. இராமர், சி. சாமிதுரை, கோ.சாக்ரடீசு, சா.பரிமளா, புதுச்சேரி பெரியாரியல் முன்னணி தோழர்கள், சென்னை மயிலைப் பகுதி வி.சி.க. செயலாளர் ரூதர் கார்த்திக், திலீபன் மற்றும் தஞ்சை சிவசுப்பிரமணியன், சென்னை செந்தில், அருண், மாரி, இராவணன், மனோகர், நாத்திகன், முழக்கம் உமாபதி உள்பட ஏராளமான தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தில் த. குடியரசு, அ. இளமதி, மூ. ஆயுதன் ஆகியோர் பெரியார் வேடமிட்டு பெரியார் கைத்தடியுடன் வந்தது அனைவரையும் கவர்ந்தது.

Pin It