இராஜஇராஜசோழன், இராஜேந்திர சோழன் போன்ற சோழ மன்னர்கள், தங்கள் தமிழ்ப் பெயர்களை வடமொழியில் மாற்றிக் கொண்ட தோடு, பார்ப்பனியத்தை பரப்புவதில் முனைந்து செயல்பட்ட வரலாற்றை பழ. நெடுமாறன் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். தமிழகத்தில் மலர்ந்த பக்தி இயக்கம் பல காலகட்டங்களில் இந்தியாவின் பிற மாநிலங் களுக்குப் பரவியது என்னும் கருத்தை பேராசிரியர்தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், அறிஞர் சுநீத் குமார்சாட்டர்ஜி போன்றோர் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், காலப்போக்கில் வர்ணாசிரம தர்மமும்வைதீக தர்மமும் படிப்படியாகத் தமிழகத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. பிற்காலச் சோழர் காலத்தில் வர்ணாசிரம தர்மம் மிக இறுக்கமாகப்பேணப்பட்டது என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பல்லவர் காலத்தில் தொடங்கி பிற்காலச் சோழர் காலம் வரை தமிழ்நாட்டில் ஏராளமான கற்கோவில்கள் எழுப்பப்பட்டன. அவற்றின் வெளிப்பாடுகளாக அரசர்களாலும் அவர்களின் குடும்பத்தினராலும் அரசு அதிகாரிகளாலும் பார்ப்பனர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன.

வடநாட்டிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் வரவழைக்கப்பட்டு சதுர்வேதி மங்கலங்களில் குடிவைக்கப்பட்டனர். அவர்களுக்குக் கிராமங்கள் இறையிலி (வரிகள்இல்லாத) தானங்களாக அளிக்கப்பட்டன. பக்தி இயக்கம் அதன் உச்சத்தை அடைந்தபோதுசைவ சமயம் நிறுவனம் அடையத் தொடங்கியது. கோவில்களை மையமாகக் கொண்ட இந்த நிறுவனங்களின் ஆதரவில் பார்ப்பனர்களும் சோழ மன்னர்களும் செயல்பட்டார்கள்.

கி. பி. 850 ஆம் ஆண்டிலிருந்து 11 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது. சங்ககாலச் சோழர்கள் கரிகாலன், நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் போன்ற தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருந்தனர். ஆனால், பிற்காலச் சோழர்கள் விசயாலயன், பராந்தகன், இராசராசன், இராசேந்திரன், குலோத்துங்கன் போன்ற வட மொழிப் பெயர்களை சூட்டிக் கொள்வதில் பெருமிதம் கொண்டார்கள். சோழர்களின் அரசாட்சியும் பார்ப்பனர்களால் நியாயப்படுத்தப்பட்டது.

சோழகுலம் சூரிய குலத்தோடும் புராணங்கள் ஆதிக்கத் தோடும் இணைக்கப்பட்டது. வேளாண்குடியைச் சேர்ந்த சோழர்கள் பார்ப்பனர்களால் சத்திரியர்களாக்கப்பட்டு அவர்களின் முடிசூட்டும் விழாவைத் தாங்களே நடத்தும் உரிமையைப் பெற்றனர்.

பிரம்மதேய விவசாய நிலங்களின் உடைமையாளர்களாகப் பார்ப்பனர்கள் மாறினார்கள். சமயக் கிரியை ஆற்றும் தகுதி காரணமாகவும் நில உடைமை யாளராக இருந்ததன் காரணமாகவும் அரசியல் செல்வாக்குக் காரணமாகவும் தமிழ்நாட்டில் பார்ப் பனர்கள் தலைமைச் சாதியினராக மாறினார்கள். அதுமட்டுமல்ல, அதுவரை வடநாட்டு வைதீக மதம் தமிழ்நாட்டில் செல்வாக்கற்று ஒதுக்கப்பட்டிருந்தது. தென்னாட்டில் பரவியிருந்த சமண, பௌத்த மதங்களை அடக்க - ஒடுக்கச் செய்த முயற்சிதோற்றது. எனவே, சமயம் (காலம்) நோக்கிக்காத்திருந்த வைதீக மதத்தினர் தமிழ்நாட்டில் பரவி வந்த பக்தி இயக்கத்தோடு இரண்டறக் கலந்தனர்.

தமிழ்த் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்தனர். தமிழ் முருகனுக்கு சுப்பிரமணியன், ஸ்கந்தன் முதலான புதுப் பெயர்களைச் சூட்டினர். வள்ளி என்னும் தமிழ் மனைவியோடு இருந்த முருகனுக்குத் தெய்வயானை என்னும் இந்திரன் மகளை மனைவியாகக் கொடுத்து ஆரிய தமிழர் தொடர்பை உறுதிப்படுத்தினர்.

தென்னாடுடைய சிவனும் வடநாட்டு உருத்திரனும் ஒன்றே எனக் கூறினர். சிசனத்தேவர் என வைதீர்களால் இழித்துரைக்கப்பட்ட சிவலிங்கத்தை உயர்ந்த தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். தமிழ்க் கொற்றவையைச் சிவனுடைய மனைவியாக ஆக்கிவிட்டனர். மாலவன் எனும்திருமால் வைதீகத் தெய்வமான விஷ்ணுவோடு இணைக்கப்பட்டார். ஆரியர்களுக்கே உரியஇந்திரன், சந்திரன், பலதேவன், சூரியன் முதலிய தெய்வங்கள் மறைக்கப்பட்டன.

விநாயகர் முதலியபுதிய தெய்வங்கள் புதிதாகக் கற்பிக்கப்பட்டன. இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிய பாடல்கள்எழுதப்பட்டன. இவ்வாறு தமிழ்நாட்டுச் சைவ வைணவம் ஆகியவற்றோடு வைதீக மதம் இரண்டறகலக்கப்பட்டது. இதன் விளைவாகத் தமிழர்களின் தெய்வ வழிபாட்டில் பல மாறுதல்கள் புகுத்தப்பட்டன. தொன்றுதொட்டு இருந்து வந்த சிறு தெய்வவழிபாடு இழிவாகக் கருதப்பட்டது. பூசை செய்யும்முறைகளும் வழிபாட்டு முறைகளும் மாற்றியமைக்கப்பட்டன.

நன்றி : “உருவாகாத இந்தியத் தேசியமும்உருவான இந்துபாசிசமும்” நூலிலிருந்து பக். 66. 

Pin It