மோடியின் ஆட்சி நாட்டை மீண்டும் வேத காலத்துக்கு அழைத்துச் செல்ல உறுதி ஏற்றிருப்பதாகவே தெரிகிறது. ஒன்றன்பின் ஒன்றாக அதற்கான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 14,135 பார்ப்பனர்கள் மட்டுமே தாய்மொழியாகப் பதிவு செய்துள்ள சமஸ்கிருதத்தை இந்தியாவின் அனைத்து மாநில சி. பி. எஸ். ஈ. பள்ளிகளிலும் வார விழாக்களாகக் கொண்டாடி போட்டிகள் நடத்தி அனைத்துமொழிகளுக்குமே‘சமஸ்கிருதமே தாய்’என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனித வளத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து ஓம் பிரகாஜ் என்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த ஜூன்6, 2014இல் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில்,தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

‘சமஸ்கிருத மேம்பாட்டுச் சட்டம்’என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதா,மத்திய,மாநில அரசுப் பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப்பாடமாக்குவதோடு,செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு நான்கு உறுப்பினர்களுக்கு மேல் இல்லாத ஒரு குழுவையும் அதற்குத் தலைவரையும் நியமித்து, (அதாவது பார்ப்பனர்களைக் கொண்ட குழு) அவர்களுக்கான ஊதியத்தையும் வரையறை செய்து,முழு அதிகாரம் வழங்கி, உடனடியாக அரசிதழில் அறிவிக்கவேண்டும் என்று மசோதா கூறுவதோடு,மாநில அரசுகளுக்கு இதற்குத் தேவையான அளவு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்துகிறது.

இதைத் தவிர யோகி ஆதித்தியாந்த் என்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன்25, 2014அன்று நாடாளுமன்றத்தில் மற்றொரு தனி நபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். நாடு முழுதும் பசுவையும் அதன் கன்று குட்டியையும்,வெட்டுவதைத்தடை செய்யக் கோருகிறது இந்த மசோதா. பசு மட்டுமல்ல, காளை, எருதுகளுக்கும் கன்று குட்டிகளுக்கும் ‘பசு’என்ற சொல்லே பொருந்தும் என்று கூறும் மசோதா ஒட்டு மொத்தமாக மாட்டை வெட்டுவதற்கே தடை போட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மாட்டுக்கறி விற்பனை செய்யக் கூடாது என்றும்,மீறுவோருக்கு10ஆண்டு சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கலாம் என்று கூறுகிறது. இந்த மசோதா சட்டமானால்,மாட்டுக்கறி உணவை விற்பதும் சாப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகிவிடும்.

ஏற்கனவே பா.ஜ.க. ஆளும் ம. பி. மாநிலத்தில் பசு மாட்டை வெட்டினால்7ஆண்டு சிறை;ஓட்டல்களில் வீடுகளில் மாட்டுக்கறி சமைப்பது குற்றம் என்ற சட்டம்2011முதல் அமுலில் இருந்து வருகிறது. பா.ஜ.க. ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட் மாநிலத்தில்‘பசு மாட்டு மூத்திரத்தை’ஆராய்ச்சி செய்யும் சோதனைச் சாலைகளையும் பசு மாட்டுக்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மய்யத்தையும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடத்தி வருகிறது. அம்மாநிலத்தின் இரண்டாவது ஆட்சி மொழியாக‘சமஸ்கிருதம்’அறிவிக்கப்பட்டு,அரசு ஆணைகள்,அறிவிப்புகள்,சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன் பகவத்,புவனேசுவரத்தில் விழா ஒன்றில் பேசுகையில்:

“அனைத்து இந்தியர்களின் கலாச்சார அடையாளமே‘இந்துக்கள்’என்பதுதான். இங்கிலாந்து நாட்டவர்களை இங்கிலாந்துக்காரர்கள் என்றும்,ஜெர்மன் நாட்டுக்காரர்கள் ஜெர்மானியர் என்றும்,யு. எஸ். ஏ. நாட்டினரை அமெரிக்கர்கள் என்றும் அழைக்கும்போது,இந்துஸ்தானில் இருப்பவர்களை ஏன் இந்துக்கள் என்று அழைக்கக் கூடாது”என்று பேசியிருக்கிறார். இந்தியா என்பதே‘இந்துஸ்தான்’தான் என்ற ஆர்.எஸ்.எஸ்.தத்துவத்தை வலியுறுத்தி, ‘இந்தியா’என்று அழைப்பதே தவறு என்று உறுதி செய்கிறார். இந்தியாவை‘இந்துஸ்தான்’என்று அழைப்பதற்கான காலம் வந்துவிட்டதாகவே ஆர்.எஸ்.எஸ்.கருதுகிறது. இதற்கு வரலாற்றுப் பின்னணியும் உண்டு.

1950ஆம் ஆண்டு இந்து மகாசபைத் தலைவரான ஷியாம் பிரசாத் முகர்ஜி என்ற பார்ப்பனர்,அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க ஆலோசித்தபோது,அதற்கு‘இந்து ராஷ்டிரா’என்று பெயர் சூட்ட விரும்பினார்.

இப்படி வெளிப்படையாக மத அடையாளத்தை பெயரில் பதிவு செய்ய வேண்டாம் என்று,கட்சிக்குள் கருத்து மாறுபாடுகள் வந்தன. மிகவும் தயக்கத்தோடு‘பாரதிய ஜன சங்கம்’என்று பெயர் சூட்ட ஒப்புக் கொண்டார் முகர்ஜி. அப்போது முகர்ஜி வெளியிட்ட கருத்துகள் முக்கியமானதாகும். ‘பாரதிய’என்றாலும், ‘இந்திய’என்றாலும் இந்துக்களைத்தான் குறிக்கும் என்றும்,மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியவர்கள்,இதை ஏற்கத் துணிவற்ற கோழைகளாக உள்ளார்கள் என்றும்,இவர்கள் தங்களின் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்கும் சூழல் வரும்போது‘இந்துராஷ்டிரம்’என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அப்போது கூறினார். அதற்கான சூழலும் காலமும் கனிந்துவிட்டதாக இப்போது ஆர்.எஸ்.எஸ்.கருதுகிறது. அதைத்தான் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் வெளிப்படுத்துகிறார். (பால்ராஜ்மதோக் எழுதிய முகர்ஜியின் சுயசரிதையில் இதைக் குறிப்பிடுகிறார்)

அரசியலமைப்பு கூறும்‘இந்தியா’என்ற அமைப்பையே ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் இந்தக் கருத்து. ஆனால்,தெலுங்கானாவும் காஷ்மீரும் இந்தியாவில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை வெளியிட்ட தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், ‘அவரது ராஷ்டிரிய சமிதி’கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் கவிதா மீது,பிணையில் வெளிவர முடியாத‘தேசத் துரோக’வழக்கைப் பதிவு செய்யுமாறு அய்தராபாத் பெருநகர நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு போடுகிறது.

அய்தராபாத் சமஸ்தானமும் காஷ்மீரும்,அய்தராபாத் நிசாம் மற்றும் இந்து மன்னர் அதிகாரத்திலிருந்து இந்தியாவில் இணைக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைப் பேசுவதே தேசத் துரோகம் என்றால்,அரசியலமைப்பு உறுதி செய்யும்‘இந்தியா’வை மறுத்து‘இந்துஸ்தான்’என்று பேசுவதற்குப் பெயர் என்ன?

பதவி ஏற்ற சில மாதங்களிலே நேபாளத்துக்கு பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி,தன்னை ஒரு இந்துத்துவா வாதியாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். காவி உடை - சந்தனப் பெட்டி - உருத்திராட்ச மாலையுடன்‘பகவதிநாதன்’ கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்த மோடி,அந்நாட்டு நாடாளுமன்றத்திலும்‘இந்து வைதிக பார்ப்பனிய’கருத்தையே விதைத்தார். இந்து மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு,மக்களாட்சி மலர்ந்துள்ள நாடு நேபாளம். அந்நாட்டுக்கான அரசியல் சட்டத்தை உருவாக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில்,நாடாளுமன்றத்தில் பேசிய மோடி,நவீனகால சட்டங்களை உருவாக்கும்போது, அவை வேதங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் இணையாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று பேசி,தனது பார்ப்பனியப் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். இவை மட்டுமா?

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவராக்கப்பட்டுள்ளார்,ஒய். சுதர்சனராவ் என்ற பார்ப்பனர். புராணங்களான இராமாயணமும் மகாபாரதமும் வரலாறு என்றும்,அது நடந்த காலம்,தேதியை அறிவிக்கப் போவதாகவும் கூறுகிறார்,இந்த‘ஆய்வாளர்’. பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதற்கு தொல்பொருள் துறை ஆதாரங்கள் இருந்தன என்று கூறியதும் இவர்தான்.

ஆர்.எஸ்.எஸ்.முன்னணி அமைப்புகள் மோடியையும்,அமைச்சர்களையும் சந்தித்து,செயல் திட்டங்களை முன் வைத்து வருகின்றன. பாடத் திட்டங்களிலும் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலிலும்‘இந்துத்துவா’திட்டங்களை தயாரித்து வருகிறது‘வித்யார்த்தி பரிஷத்’. மனித வளத் துறை அமைச்சர் இரானியை ஏற்க வைப்போம் என்கிறார்,அதன் தேசிய அமைப்புச் செயலாளர் சுனில். ஆக வேகவேகமாக பார்ப்பனியம் காய் நகர்த்துகிறது.

இந்தியாவில்,கடந்த காலங்களில் நடந்த காங்கிரஸ்ஆட்சி, ‘மதச்சார்பின்மை’என்ற பெயரில் பார்ப்பன கட்டமைப்பை பல்வேறு துறைகளில் உறுதி செய்தது. மோடி ஆட்சி வெளிப்படையாகவே‘வேத கால’ஆட்சியைத் தொடங்கிவிட்டது. நாம் இந்தியர்களா?இந்துஸ்தானிகளா?என்ற ஆராய்ச்சிகளை அவர்களிடமே ஒதுக்கித் தள்ளிவிட்டு,தமிழர்களாக - பார்ப்பனிய ஜாதி எதிர்ப்புத் தமிழர்களாகப் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது!

Pin It