திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி முடித்த மேட்டூர் நாத்திகர் பேரணிக்கும் வழமைபோல காவல்துறை அனுமதி மறுத்து,உயர்நீதிமன்றத்தின் வழியாக அனுமதி பெற வேண்டியிருந்தது. வினாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி காவல்துறை கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி தமது ஆணையில் நாத்திக மரபு குறித்து பதிவு செய்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

“ஆத்திகம்-நாத்திகம் இரண்டுமே இந்திய மரபில் ஒன்றுக்கொன்று உதவி வந்திருக்கிறது. இரண்டில் எந்த ஒன்றையும் ஒழிக்கவோ,புறந்தள்ளவோ முடியாது. இரண்டு கருத்தியல்களும் ஒன்றை ஒன்று எதிர்த்தாலும்,இரண்டுமே சமூகப் பிணைப்பை வலிமைப்படுத்துவதற்கான இழையோட்டத்தை வழங்கியிருக்கிறது. எனவே இதுபோன்ற ஊர்வலங்களும் (நாத்திகப் பேரணி) சமூக செயல்பாடுகளுக்கான பங்களிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது”

-என்று நீதிபதி வி. இராம சுப்பிரமணியன் அனுமதிக்கான ஆணையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். சமூக மாற்றத்துக்கு முரண்பாடுகளுக்கிடையிலான போராட்டத்தை கூர்மையடையச் செய்தல் அவசியம் என்ற கண்ணோட்டத்தோடு உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நாம் வரவேற்கிறோம்.

‘வேதம்’ஆரிய பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட காலத்திலிருந்தே வேத மறுப்பு இயக்கங்களும் தொடர்ந்து நடந்து வந்திருப்பதே சமூக வரலாறு. இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. வேதங்களை எதிர்த்து‘வைசேஷிகம்’, ‘நியாயம்’, ‘சாங்கியம்’, ‘யோகம்’போன்ற சிந்தனை மரபுகள் பகுத்தறிவு சிந்தனைகளை முன் வைத்தன.

அவர்கள் இயற்கையின் இரகசியங்களை ஆராய்ந்தார்கள்,குறிப்பாக‘சாங்கிய தத்துவம்’ -உலகம்‘கடவுளால்’படைக்கப்பட்டது என்ற கருத்தை முழுமையாகப் புறந்தள்ளியது. சாங்கியம் - வலிமையாக முன்வைத்த‘நாத்திக’சிந்தனைகளைக் கண்டு அஞ்சிய வேதகாலப் பார்ப்பனர்கள்,அந்த சிந்தனைகளைக் கூறு போட்டுப் பிரித்து, ‘வேத’ங்களின் கருத்துகளைத் திணித்து,சாங்கியத்தைவேதாந்தங்களுக்குள் முடக்கி விட்டதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

“கருத்து முதல் வாதம்-பொருள் முதல் வாதம்”என்ற அடிப்படையிலேயே வேதப் பார்ப்பனர்களுக்கும் அதை எதிர்த்த நாத்திக மரபினருக்கும் வாதங்கள் நடந்துள்ளன. ‘உலகாயதம்’என்ற கோட்பாட்டை முன் வைத்த‘சார்வாகம்’,கடவுள்,மறுபிறப்பு ஆகியவற்றை மறுத்ததோடு,வாழ்க்கை வாழ்வதற்குத்தான்;துறப்பதற்கு அல்ல;அனுபவமும்,அறிவுமே,வாழ்க்கைக்கான வழிகாட்டிகள் என்ற கருத்துகளையே முன் வைத்தது என்று கூறுகிறார்,தத்துவ சிந்தனையாளர் இராகுல் சாங்கிருத்யாயன். ஆனால்,இந்த நாத்திக சிந்தனைகளின் மூல நூல்கள் முற்றாக அழிக்கப்பட்டதால் அதற்கு மறுப்புரைகளாக வெளிவந்த பார்ப்பனர்களின் வடமொழி நூல்களிலிருந்து தான் அக்கருத்துகளைத் தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது.

மத்துவர் எழுதிய‘சர்வதரிசன சங்கிரகம்’, ‘ஹரிபத்திர ஆரி’எழுதிய‘சுதா தரிசன சமுக்கியம்’என்று ஏராளமான சார்வாக எதிர்ப்பு நூல்களை வேதங்களை நியாயப்படுத்திய பார்ப்பனர்கள் எழுதிக் குவித்தார்கள். அந்த மறுப்புகளுக்குள்ளேதான்‘சார்வாக’சிந்தனைகள் மூழ்கிக் கிடந்தன.

பார்ப்பன வேத மரபு வலியுறுத்திய‘உயிர்ப்பலி’யை எதிர்த்த சமணம்,கடவுளையும் எதிர்த்தது. உலகமே படைக்கப்பட்டதல்ல என்கிறபோது எப்படி உலகத்துக்கு ஒரு படைப்பவன் இருக்க முடியும்?என்று கேட்டதுதான் சமணம்.

கடவுள்தான் மூலம் ,உலகம் - அதன் விளைவு (நககநஉவ) என்ற வாதத்தை மறுத்த சமணம்,விளைவுகள் நிரந்தரமானவையாக இருக்க முடியாது. அது சில காலம் இருக்கலாம்,சில காலம் இல்லாமலும் போகலாம்;ஆனால்,உலகம் நிரந்தரமாக இருக்கும்போது,அது எப்படி‘விளைவாக’இருக்க முடியும்?என்ற கேள்வியை எழுப்பியது.

ஆரியப் பார்ப்பன வேதங்களுக்கு எதிராக வீடுகளை துறந்து வெளியேறி மக்களை சந்தித்து,அதன் கேடுகளை எடுத்துச் சொன்னவர்களும் உண்டு. ‘நாடோடி’களாக வாழ்ந்த அவர்கள், ‘பரிவிராஜகர்கள்’என்று அழைக்கப்பட்டனர்.

அதேபோல்,வேத பார்ப்பனியத்துக்கு எதிராக எழுந்த பவுத்தம்,மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. கடவுளைப் பற்றி புத்தர் பேசவில்லை. புத்த மார்க்கம் எந்தக் கடவுளையும் முன்னிறுத்தவும் இல்லை. வேத மரபுவலியுறுத்திய‘பிரம்மம்’என்ற கருத்து அறிவுபூர்வமானது அல்ல என்று புத்தர்மறுத்தார்.

மூன்று வேதங்களையும் முறையாகக் கற்றவர்கள்‘பிரம்ம’த்தை நேரில் கண்டிருக்கிறார்களா? ‘பிரம்மத்தை’நேரில் அறியாதவர்கள்,அதை அடைவதற்கான நெறிமுறைகள் மட்டும் தங்களுக்குத் தெரியும் என்று கூறுவது அறியாமையல்லவா?என்று பார்ப்பனர்களை நோக்கி கேட்டார். வேத வேள்வி சடங்குகளை நிறுத்த மக்களை திரட்டினார். ஆனாலும் அவருக்குப் பிறகு புத்த மார்க்கத்திலும் பார்ப்பனியம் நுழைந்தது. புத்தரின் உண்மையான‘வேத மறுப்பு’சிந்தனைகளை சிதைத்தது. இப்படி பார்ப்பன வேதங்களுக்கு எதிராக வரலாறு நெடுக இயக்கங்களும் சிந்தனைகளும் பீறிட்டுக் கிளம்பின.

இந்த சிந்தனை மரபுகள்‘இந்து’மதத்தின் ஒரு அங்கமாக சித்தரிக்கப்படுவதும்கூட வரலாற்றுப் பிழை. ‘இந்து மதம்’என்று பெயர் சூட்டப்பட்டதே பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்தான். இதை காஞ்சி மூத்த சங்கராச்சாரியே ஒப்புக் கொள்கிறார்.

பார்ப்பன வேதங்களுக்கு எதிரான இயக்கங்கள் - சிந்தனைகள் வரலாறு நெடுக வேதியக் கூட்டத்தின் ஊடுவலாலும் கருத்துச் சிதைப்பாலும் வன்முறையாலும் வீழ்த்தப்பட்டது. அந்த வரலாற்றை முறியடித்து“கடவுள் இல்லை;இல்லவே இல்லை;கடவுளை கற்பித்தவன் முட்டாள்;பரப்பியவன் அயோக்கியன்;வணங்குகிறவன் காட்டுமிராண்டி”என்ற உச்சகட்ட எல்லைக்கு நாத்திக-வேத எதிர்ப்பு மரபைக் கொண்டு வந்து நிறுத்திய ஒரே வரலாற்று நாயகர் பெரியார்தான். பெரியார் தொடங்கிய இயக்கம்தான் வேத மரபின் ஆணிவேரை அசைத்தது.

அதுமட்டுமல்ல,வேத எதிர்ப்பு நாத்திகத்தை மக்கள் இயக்கமாக்கி,அவை, ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களுக்குமறுத்த உரிமைகளை மீட்டெடுக்கும் போரில் பெரும் வெற்றி கண்ட ஒரே தலைவரும் பெரியார்தான்.

இந்த மண்ணில் தோன்றிய புத்த மார்க்கத்தை இந்த மண்ணிலிருந்தே துடைத்து அழிப்பதில் வெற்றி கண்ட பார்ப்பனியம் பெரியாரியத்திடம் மட்டுமே பலத்த அடி வாங்கியது.

அந்த வரலாற்றுப் போராட்டம் தொடருகிறது. இந்த முரண்பாடுகளைக் கூர் தீட்டி,வேத பார்ப்பனிய கட்டமைப்புகளின் வீழ்ச்சியை நோக்கி மக்களை அணி திரட்டுவதே நமக்கான நாத்திக மரபு. அதுவே நாம் நடத்தும் நாத்திகர் விழாக்கள். காவல் துறை அலுவலகத்தில் ஊதியம் வாங்கும் சில நபர்களுக்கு இந்த கருத்துகளின் வலிமை புரியாது. நீதிமன்றம் தந்த தீர்ப்புகளாவது இவர்களின் கண்களைத் திறக்கட்டும்!

Pin It