கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம்

கேரள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் பெரியாரின் கனவு நிறைவேறியிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமையுடன் கூறினார். மதுரையில் 3 நாட்கள் நடந்த தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணியின் அகில இந்திய மாநாட்டின் நிறைவாக நவம்பர் 6ஆம் தேதி எழுச்சிமிகு பேரணி - பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கேரள முதல்வர் பேசியதாவது:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதிய ரீதியிலான ஒடுக்கு முறை தலித்துகளுக்கு எதிராக நடந்து வருகிறது. பண்டைக்காலம் முதல் பல்வேறு வடிவங்களில் நடந்துவரும் ஒடுக்குமுறையை சகித்துக் கொண்டிருக்க முடியாது. சாதியத்தை தூக்கிப் பிடிக்கும் ஆர்எஸ்எஸ் தலைமையின் கீழ் உள்ள பாஜக அரசு இந்தஒடுக்குமுறை நீடிக்க வேண்டும் என விரும்புகிறது. அதன் காரணமாக நாடு முழுவதும் இந்தஒடுக்குமுறை தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலித் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பியவர்கள் உண்டு. ஆனால் அவர்களால் தலித்மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற முடியவில்லை. ஆர்எஸ்எஸ் தலைமை வகிக்கும் பாஜக அரசு பட்ஜெட்டில் தலித் மக்களுக்கான ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கி யுள்ளது.

தலித்பெண்களின் முன்னேற்றத்துக்காக 1 சதவீத நிதியைக்கூட இந்த அரசு ஒதுக்கவில்லை.பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீடு வெறும்இரண்டரை சதவீதமாக உள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கான தனி நிதி ஒதுக்கீட்டுக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளது. ஆனால் அதைஒழித்துக்கட்டும் பணியை இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட”த்தில் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்பது 2014 ஆம் ஆண்டு 72 சராசரி நாட்களாக இருந்தது. அது 2016இல் 46 நாட்களாக குறைந்துள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புகளை அளித்து வந்த பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நிலையில் தலித்துகளுக்கு தனியார் துறையிலும் இட ஒதுக்கீடுஅவசியமாகும். ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் 150ஆவது ஆண்டு இது. இந்தியாவின் வளர்ச்ச்சிக்கு தடையாக இருப்பது சாதிய அமைப்பு முறைதான் என மார்க்ஸ் கூறினார். சாதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட்டுகளின் லட்சியம். வர்க்கப்போராட்டத்தின் ஒரு பகுதியாக இதை செய்ய வேண்டும். சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளின் மீதான போராட்டங் களுடன் இணைந்தது. இந்த போராட்டங்களை சமூக ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்காக முன்னெடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல முற்போக்காளர்கள் அனைவரும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவாக உள்ளது. இதை இடதுசாரிகள் வலுவாக எதிர்ப்பதால் தான் கடுமையான தாக்குதல்களை இடதுசாரிகள் மீது நடத்தி வருகிறார்கள். நிலப் பிரபுத்துவ முறையை ஒழித்துக்கட்டினால் தான் சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிக்கமுடியும். இது தலித்துகளுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல. விவசாயிகள், தொழிலாளிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து பகுதியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் பிரச்சனையாகும். நவீன தாராளமயத்தால் பாதிக்கப்படும் மக்களுடன் இணைந்து நின்று சமூக ஒடுக்குமுறைகளைத் தடுக்க முடியும். அனைவரும் இணைந்த வர்க்கப் போராட்டத்தின் பகுதியாக இதை நடத்த வேண்டும்.

பெரியாரின் பங்கு

தலித்துகளின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் உண்டு. ஆனால் அப்படிப்பட்ட தலைவர்களால் நில உரிமையை தலித்துகளுக்கு பகிர்ந்து கொடுக்க முடியவில்லை. சாதி உணர்வை ஊட்டி ஆட்சியை பிடிக்க முடிந்த அவர்களால் விஞ்ஞானபூர்வமான சிந்தனைகளை அளிக்க முடியவில்லை. ஜோதிபா பூலே, பெரியார், நாராயணகுரு போன்றோர் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடினார்கள். ஜோதிபா பூலே நடத்திய பிரச்சாரத்தின் விளைவாக அம்பேத்கர் உருவானார். தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், பெண் உரிமைக்காகவும் பெரியார் போராடினார். தனது வாழ்நாள் முழுவதும் இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிராக பெரியார் போராடினார். மக்கள் சமஉரிமை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்பதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் நினைவு கூரத்தக்கது. கேரளத்தில் ‘தீண்டப்படாத’ மக்களை வைக்கத்தில் கோயிலுக்கு அருகே உள்ள வீதிகளில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்களில் பெரியாரின் பங்கு மகத்தானது.

கேரளத்தில் 9 சதவீதம் தலித் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் 10 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது. தலித் மக்களுக்கான துணை திட்டம் தனியாக நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்று வருகிறது. தற்போது மின்சாரமும், இணையமும் அனைவருக்கும் வழங்க அரசுமுடிவு செய்துள்ளது. இது பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்கு உதவும். தலித் குழந்தைகள் படிக்க அவர்களது வீடுகளில் தனி அறையை அரசு கட்டித் தருகிறது. கேரள அரசு நான்கு விதமான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. வீடும் நிலமும் இல்லாத 2 இலட்சம் பேர் கேரளத்தில் உள்ளனர்அவர்களுக்கு லைப் மிஷன் என்கிற பெயரில்அனைவருக்கும் வீடு கட்டித்தரும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பங்களில் ஒருவருக்கு வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றொன்று பொதுக் கல்வியை வலுப்படுத்தும் கல்வித்திட்டம்.

ஆர்த்தரம் என்கிற பெயரில் அனைவருக்கும் உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்க மற்றொரு திட்டம். அனைவருக்கும் சுகாதாரமான குடிநீரும், சுற்றுச் சூழல் பாதுகாப்பும் கிடைக்க உதவும் அரித கேரளம் என்பது நான்காவது திட்டமாகும். இத்திட்டங்களில் தலித் மக்கள் கூடுதலாக பயனடைந்து வருகிறார்கள். தலித் மக்கள் கோவில்களில் அர்ச்சகராக வேண்டும் என்பது பெரியாரின் கனவு. கேரள அரசு அங்குள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தலித் அர்ச்சகரை நியமனம் செய்து பெரியாரின் கனவைநனவாக்கியுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் பேசினார். அவரது மலையாள உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தமிழில் மொழி பெயர்த்தார்.

Pin It