வங்காளிப் பார்ப்பனர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் ஜூலை 24இல் முடிவடைகிறது. ‘பார்ப்பன தர்மத்தோடு’ வாழ்ந்தவர். பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக காஞ்சிபுரம் வந்து, சங்கராச்சாரியிடம் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார். ஜெயேந்திர சரசுவதி, சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளி. புதுவை நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது. அரசு தரப்பு சாட்சிகள் எல்லாம் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர். புதுவை நீதிபதியிடம் தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க தொலைபேசியில் பேரம் பேசியவர் ஜெயேந்திரர்.
இது ஆதாரத்துடன் அம்பலமாகி, உயர்நீதிமன்றத்திலும் வழக்காக பதிவாகியுள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், புதுவை நீதிமன்றம் ஜெயேந்திரரை விடுதலை செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்றும் கேட்டு, அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம், ஜெயேந்திரனைக் காப்பாற்ற முயன்ற சக்திகளின் தலையில் குட்டு வைத்திருக்கிறது. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தான் குடியரசுத் தலைவர் ஜெயேந்திரனிடம் ஆசி பெற வந்திருக்கின்றார்.
ஜெயேந்திரனிடம் ஆசி பெற்றுவிட்டு டெல்லி திரும்பியவுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து விருந்து பரிமாறியிருக்கிறார். அரசியல் சட்டத்துக்கு எதிராக இந்தியாவை இந்து இராஜ்யமாக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்.
இவ்வளவுக்குப் பிறகு - தூக்குத் தண்டனையி லிருந்து விடுவிக்க கருணையோடு தம்மிடம் வந்துள்ள இரண்டு கருணை மனுக்களையும் கடைசி நேரத்தில் தள்ளுபடி செய்திருக்கிறார்.
தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுதும் குரல் வலுத்து வருகிறது. அய்.நா. தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கிட வேண்டும் என்று உலக நாடுகளை வற்புறுத்தி வருகிறது. இந்த நிலையில் அரிதிலும் அரிதான வழக்குகளில் தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறுகிறது. அரிதிலும் அரிதான வழக்கு எது என்பதை முடிவு செய்வது நீதிபதிகளிடமே இருக்கிறது. தூக்குத் தண்டனை பெற்றவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடைசி புகலிடமாக இருப்பது குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள ‘கருணை’ மனுக்கள் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம்தான்.
குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்த கே.ஆர்.நாராயணன், தம்மிடம் கருணை கோரி வந்த மனுக்களை நிராகரிக்காமல் மாளிகையிலேயே கிடப்பில் போட்டு விட்டார். அதேபோல் குடியரசுத் தலைவராக இருந்த பிரதிபாபட்டீல் 30 தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை ஏற்று தூக்கிலிருந்து அவர்களை விடுவித்தார். குடியரசுத் தலைவராக இருந்த இராதாகிருஷ்ணன், அப்துல்கலாம் ஆகியோரும் தூக்குத் தண்டனைக்கு எதிரான கருத்துடையவர்களாகவே இருந்தனர்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, கடந்த 1991 முதல் 2001 வரை குடியரசுத் தலைவர்கள் 77 கருணை மனுக்கள் மீது முடிவெடுத்தனர். அவற்றில் 69 மனுக்களை நிராகரித்துள்ளனர். பிரணாப் முகர்ஜி தனது பதவி காலத்தில் 30 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். கொலை வழக்கு விசாரணைக்கு உள்ளான காஞ்சிபுரம் ஜெயேந்திர னிடமும் ஆசி பெற்றிருக்கிறார்.
குடியரசுத் தலைவர்களிலேயே கருணை மனுக்களை அதிக அளவில் நிராகரித்தவர் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஆர். வெங்கட் ராமன். 1987 முதல் 1992 வரையிலான பதவிக் காலத்தில் 44 கருணை மனுக்களை அவர் நிராகரித்துள்ளார். இவர் காஞ்சிபுரம் சங்கராச்சாரி மடத்தின் பிரதிநிதியாகவே செயல்பட்டவர். ஜெயேந்திர சரசுவதி - மூத்த சங்கராச்சாரியிடம் சண்டை போட்டுக் கொண்டு மடத்தை விட்டு இரகசியமாக வெளியேறியபோது பதறிப் போய் தனது மனைவியை காஞ்சிபுரம் மடத்துக்கு அனுப்பி வைத்து, சமரச முயற்சிகளில் இறங்கியவர் ஆர். வெங்கட்ராமன். அப்போது அவர் குடியரசுத் தலவராக இருந்தார்.
பார்ப்பனர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் மதிக்கப்பட வேண்டி யவர்களே என்ற ‘மனு சாஸ்திரம்’ இப்போதும் நடைமுறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட சான்றுகள் வேண்டுமா?