‘அய்.அய்.டி.’ பார்ப்பனப் பிடிக்குள் சிக்கி, சாதியப் பாகுபாடுகள் தலைவிரித்தாடு கின்றன என்று பதவி விலகிய பேராசிரியர் விபின் விட்டில் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜூன் 30ஆம் தேதி தேசிய பட்டிய லினத்தவர் ஆணையம் சார்பில் சென்னை அய்.அய்.டிக்கு ஒரு நோட்டீஸ் அளிக்கப் பட்டது. அதில் போதுமான அளவில் எஸ்சி மற்றும் எஸ்டி பேராசிரியர்களை நியமிக்காதது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரப்பட் டிருந்தது. இந்த நோட்டீஸ் சென்ற அடுத்த நாளே அங்கே வேலை பார்க்கும் பேராசிரியர் விபின் விட்டில் அங்கு சாதிய பாகுபாடு காட்டப்படுகிறது என்று பகிரங்கமாகக் கூறிவிட்டு அய்.அய்.டி.யிலிருந்து பதவி விலகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அவர் அனுப்பிய மெயிலில். இந்தச் சாதியப் பாகுபாடு அய்.அய்.டி.யில் அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து வந்தது. அவர்களது அரசியல் சார்புநிலை பாலினம் அத்தனைக்கும் அப்பாற்பட்டு அவர்களுடைய சாதிய மனநிலை உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

அய்.அய்.டியின் சாதியப்பாகுபாடு குறித்து அங்கு படிக்கும் மாணவர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தாலும் அங்கே பேராசிரியர்களிடமும் சாதியப் பாகு பாடு பார்க்கப்படுகிறது என்பது ஆதாரப் பூர்வமான உண்மை. அய்.அய்.டிக்களிடமிருந்து பெறப்பட்ட ஆர்.டி.ஐ. தகவலின்படி மொத்த மிருக்கும் 23 அய்.அய்.டிக்களில் 22ல் அதிக பட்சமாகவே 6 பட்டியல் பழங்குடிப் பேராசிரியர்கள்தான் இருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாகவே 6 பட்டியல் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். இவற்றில் 18 அய்.அய்.டிக்களில் பத்துக்கும் குறைவான பட்டியல் சமூகப் பேராசிரியர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். 7 அய்.அய்.டிக்களில் 10க்கும் குறைவான இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது விபின் பிரபல ஆங்கில ஆன்லைன் இதழ் ஒன்றுக்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்

அதில் தனக்கு நேர்ந்த சாதிய பாகுபாடுகள் குறித்து பட்டியலிட்டுள்ளார்.

“நான் அய்.அய்.டியில் பேராசிரியராகச் சேர்வதற்கு முன்பே அங்கே என்மீது சாதியப் பாகுபாடு தொடங்கியிருந்தது. நான் பணியில் சேர்ந்ததும் ஆறு -ஏழு மாதங்களில் இயக்குநர் மற்றும் டீன்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். அதில் அய்.அய்.டியில் நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் களின் சாதிவாரி விவரம் குறித்துக் கேட்டிருந்தேன். நான் மெயில் அனுப்பிய சில நொடிகளிலேயே பலர் அதற்கு பதில் அளித்திருந்தார்கள். ஒருவர், பேராசிரியர்களின் சாதிவாரி விவரம் கேட்டால் அது அய்.அய்.டிக்கே அழிவு காலமாகிவிடும் என்றார். ஏன் சாதிவாரி விவரத்தைக் கேட்கிறீர்கள்?, இப்போது இருக்கும் ஆசிரியர்களே திறமை வாய்ந்தவர்கள் தானே! எனக் கேள்வி எழுப்பினார்கள். இத்தனைக்கும் நான் வெறும் புள்ளிவிவரத்தை மட்டும்தான் கேட்டேன்.நான் இடஒதுக்கீட்டுக்காகத் தான் கேட்கிறேன் என அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

அய்.அய்.டியில் வேலை பார்த்த காலத்தில் சில நேரங்களில் என் சாதிப்பெயரைக் கேட்பார்களோ என அச்சமாக இருக்கும்.சில நேரங்களில் நானே தவிர்த்து விடுவேன். இங்கே பேராசிரியர்கள் மற்றும் டீன்களைப் பொருத்தவரை அய்.அய்.டிக்களுக்கான பேராசிரியர் தேர்வு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதாகத்தான் உள்ளது. அங்கே நியமனத்தில் மெரிட் என்பது துளியும் இல்லை. சாதி அடிப்படையில், நம்பிக்கையின் அடிப்படையில், பாலின மற்றும் மத அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படுகிறார்கள், அய்.அய்.டியின் இயக்குநர் பார்ப்பனர் அதனால் அங்கே அவர் கீழ் தேர்வு செய்யப்பட்ட டீன்களும் அதே சமூகத்தினர். இங்கே பேராசிரியர்கள் தேர்வுக்கு என்று தனியாக எதுவும் நுழைவு தேர்வு வைப்பதில்லை. அங்கே மெரிட் நியமனங்கள் இல்லை சாதி ரீதியான நியமனங்கள்தான் உள்ளன. இதனை அவர்களுக்குப் புரிய வைக்க மிக நீண்ட மெயில் ஒன்றை அனுப்பினேன். அதன் தொடர்ச்சிதான் தற்போது அங்கிருந்து நான் வெளியேறும் அளவுக்குக் கொண்டு விட்டிருக்கிறது.தற்போது அய்.அய்.டி நிறுவனத் தின் குறைதீர்க்கும் கமிட்டியில் எனது புகாரைப் பதிவு செய்துள்ளேன். இப்படியொரு கமிட்டி இருப்பதே எனக்கு 2020இல்தான் தெரிய வந்தது. அதுவுமே பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் துக்குப் புகார் அளிப்பதற்காக நான் முயற்சி செய்தபோது இந்த கமிட்டி குறித்து தெரிய வந்தது.

இந்திய அரசு மேற்கொண்ட போதுமான முயற்சிகளால் கல்லூரியில் பாலியல் வன்முறை என்றால் அது தொடர்பான புகார்களை பதிவு செய்ய குழு இருப்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் சாதிரீதியான பிரச்னைகளுக்கு கல்லூரிகளில் இருக்கும் குழுக்கள் குறித்து போதிய விழிப்புணர்வு தரப்படுவதில்லை. தற்போது குறை தீர்க்கும் குழுக்கு அனுப்பியுள்ள மெயிலில் கூட இது போன்ற கல்விநிறுவனங்களில் படிக்கும் விளிம்பு நிலை வகுப்பு மக்கள் அங்கே அனுபவிக்கும் பிரச்னைகள் குறித்து அறிய அரசு ஒரு தனி குழுவை நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளேன். இதன் அடுத்தகட்டமாக பாலியல் வன்முறை புகார்களுக்கான விசாகா குழு போல ஒவ்வொரு அய்.அய்.டி கல்வி நிறுவனங்களிலும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தனி குறைதீர்க்கும் கமிட்டி நிறுவப்படவேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்றார்.

அய்.அய்.டி. இயக்குநராக பட்டியல் பிரிவு அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்; பார்ப்பனர்கள் மட்டுமே இயக்குநராகி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Pin It