உலகமயத்தின் பின்னணியில் தீவிரமாக வளர்த்தெடுக்கப்பட்டு வரும் விடயங்களில் ஒன்று மதத் தீவிரவாதமாகும். ஒருபுறத்தில் மதப் பாஸிசங்கள் வளர்க்கப்படுகின்றன. மறுபுறத்தில், மதத்தின் இத்தகைய தீவிரத் தன்மைகளை உதாரணம் காட்டி மனித குலம் இதுவரை காலமும் சேகரித்து வந்த பண்பாட்டுக் கூறுகளையெல்லாம் நிராகரிக்கின்ற வற‌ட்டுத்தனமான கோட்பாடுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இவ்விரு போக்குகளும் அபத்தமானவையாகும். 

      தற்காலத்தில் மதத் தீவிரவாதம் என்பது மிகத் திட்டமிடப்பட்டவகையில் வளர்த்தெடுக்கப்பட்டு அரசியலில் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் இந்துத்துவம், இந்துசமயத்தின் பன்முகத் தன்மையை மறுத்து ஒற்றைத் தன்மை உடையதாக இன்று மறுவாசிப்பு செய்யப்படுகின்றது. அண்மையில் இந்துத்துவவாதிகள் கேவலமானதோர் அரசியலின் பின்னணியில் மோசமான வன்முறைகளை தோற்றுவித்துள்ளனர். இன்று புதிய புதிய கோயில்கள் எழுகின்றன. பெரிய திரையும் சின்னத் திரையும் போட்டி போட்டுக் கொண்டு மத நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றன. தமது அரசியல் ஆதாயத்திற்காக மு.கருணாநிதி, ஜெயலலிதா முதலானோர் இந்துத்துவத்தை தமதாக்கிக் கொண்ட க‌ட்சிக‌ளுட‌ன் கைகோர்க்கின்ற‌ன‌ர். 

இந்துத்துவ பாஸிசத்தின் பின்னணியில் 

      babri_masjid_340கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம் என்ற பிரகடனத்தின் மூலமாக தமது கம்பீரத்திற்கும் வயிற்றுப் பிழைப்பிற்கும் வழிதேடிக் கொண்ட சில மதவாத இயக்கங்கள் பாலியல் தேவைக்காகவும், வியாபாரத்திற்காகவும் இளைஞர்களை தவறான வழியில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இளம் பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதுடன் விபச்சாரமும் செய்ய வைத்து மாட்டிக் கொண்ட பிருதிவிராஜ் சவான், சிவசேனாவின் திரைத்துறை அணியின் தளபதி. உட்கட்சிப் பூசலில் கேவலமாக நாறிப்போன நீலப்படப் புகழ் சஞ்சய் ஜோஷி பா.ஜ.க வின் பொதுச் செயலாளர்.

காசுக்காக அடுத்தவன் மனைவியைத் தன் மனைவி எனக் கூறி, வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்று மாட்டிக் கொண்ட பாபுபாய் கத்தாரா, பா.ஜ.க. வின் எம்.பி. கிலோ கணக்கில் போதைப் பொருளோடு பிடிபட்ட ராகுல் மகாஜன், மாண்டுபோன பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜனின் வாரிசு. வருடத்திற்கு இரண்டு தரம் செக்ஸ் சர்வே போடும் இந்தியா டூடே ஆர்.எஸ்.எஸ்.சின் குடும்பப் பத்திரிகை; காமக்களியாட்டம் நடாத்தும் கொலைகார ஜெயேந்திரன் தான் இவர்களின் லோககுரு. இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 

      இந்த நல்லொழுக்க சீலர்கள்தான் பெண்களுக்கு ஒழுக்கம் பற்றி வகுப்பெடுக்கிறார்கள். சாராய விடுதிக்குப் போய் இந்துப் பெண்களின் மானம் காக்க முயன்றவர்கள், அனுராதா ரமணன் முதல் ஸ்ரீரங்கம் உஷா வரை காமகோடி சங்கராச்சாரியின் மன்மதபாணத்துக்கு இரையானபோது, அவற்றைக் கிருஷ்ணலீலை எனக் கருதிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்களா என்ன? (htt:/www.vinavu.com/2009/03/18/ramsena) 

      இத்தகைய தீவிரவாத மத இயக்கங்கள் அனைத்துமே பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை செய்து வருகின்றன. 

      மிக அண்மையில் காதலர் தினத்தன்று வெளியே சுற்றித்திரியும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக தாலியை கையிலெடுத்துக்கொண்டு திரிந்த இந்திய இந்து பாசிஸ்ட்டுகளால், எல்லா மனித உணர்வுகளையும் விற்பனைச் சரக்காக்கி வணிகமயமாக்கும் உலகமயமாதல் அமைப்பு முறைதான் காதலர்களின் உணர்வுகளையும் வணிகப் பண்டமாக்கி காதலர் தினத்தைப் பிரகடனப்படுத்தி வருகின்றது என்பதை அறிய முடியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. வணிக நோக்கில் காதலர் தினத்தைப் பரப்பும் வணிக நிறுவனங்களது நுகர்வுக் கலாசாரத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதை விடுத்து இந்த நுகர்வுக் கலாசாரத்திற்குப் பலியான காதலர்களை தாக்குவதனால் என்ன பிரயோசனம்? 

      இந்துத்துவ பாஸிச இயக்கங்களில் ஒன்றான ராம்சேனாவின் நடவடிக்கையை எதிர்க்க கிளம்பிய மேட்டுக்குடி கும்பலொன்று இன்னொரு ஆபாசக் கூத்தை அரங்கேற்றியது. காதலர் தினத்தன்று பெண்கள் அணியும் உள்ளாடையை முத்தலிக்கு அனுப்பும் போராட்டத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். உழைக்கும் பெண்கள் வேலை செய்யும் இடத்திலும், குடும்பத்திலும், சமூகத்திலும் சந்திக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் மத்தியில், குடிப்பதற்கும் கூத்தாடுவதற்குமான உரிமையையே பெண் விடுதலையின் உச்சம் என்று இவர்கள் பேசுவது மிகவும் ஆபத்தானது. ராம்சேனாவின் நிலப்பிரபுத்துவ பெண்ணடிமைத்தனத்தை எதிர்ப்பதாகக் கிளம்பியுள்ள இவர்கள் அதற்குப் பதில் ஏகாதிபத்தியத்தின் மேட்டுக்குடிப் பெண்ணடிமைத்தனத்தைப் புகட்டுகிறார்கள். (மே.கு. இணையத்தளம்) 

      இவ்வகையில் மதத் தீவிரவாதிகள் மதுவிடுதிகளிலும் பொது இடங்களிலும் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு எதிராக நடாத்திவருகின்ற ஆர்ப்பாட்டங்களும், வன்முறைகளும் அடிப்படையான பிரச்சனைகளை மூடி மறைத்து முரண்பாட்டின் வடிவத்தை வேறு பக்கத்தில் திசை திருப்புகின்ற முயற்சியாகவே அமைந்துள்ளது. 

      இப்பின்னணியில், கிறிஸ்த்தவ, முஸ்லிம் எதிர்ப்புணர்வுகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் நிலையிழந்து செல்கின்ற இந்துத்துவத்திற்கு நிலைதேடுகின்ற இலக்கியப் படைப்புகளை ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் படைத்து வருகின்றனர். அவரது விஷ்ணுபுரம் என்ற நாவலும், மாடன் மோட்சம் என்ற சிறுகதையும் இவற்றிற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும் (பொதுவாக ஜெயமோகனின் அனைத்துப் படைப்புகளிலுமே இப்பண்பு இழையோடியுள்ளது). 

      இது போன்றே, இலங்கையில் பௌத்த மதம் சிங்களப் பெரும்தேசியவாதத்தின் ஒரு சின்னமாக விளங்குகின்றது. 

      உலகளவில் மதத்தீவிரவாதம் தூண்டப்பட்டதன் விளைவாக இந்துத்துவப் பயங்கரவாதம், இஸ்லாமியப் பயங்கரவாதம் முதலிய இயக்கங்கள் தோன்றி வளரலாயின. அது சார்ந்த வன்முறைகளும் மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இதற்கு அப்பால் கிறிஸ்த்தவ மதத் தீவிரவாதம் இல்லை என்ற வாதங்களை முன் வைக்கின்ற புத்திஜீவிகள் அதனூடாக இன்றைய உலகமயமாதலுக்கும் வக்காலத்து வாங்குகின்றனர். 

கிறிஸ்த்தவ மதம்    

ஒவ்வொரு மதத்தையும் போல கிறிஸ்த்தவத்திலும் மக்கள் நலநாட்டப் பக்கம் உண்டு. விடுதலை இறையியலை அது தந்துள்ளது. அதேபோல உலக மேலாதிக்க அதிகாரமையமாய் அது செயற்படுகின்ற மறுபக்கமும் அதற்கு உண்டு. இன்று இங்கே இந்துத்துவம் உண்டு. இஸ்லாமிய அடிப்படைவாதம் உண்டு. இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் உண்டு. கிறிஸ்தவத்தின் அடிப்படைவாதம் ஏன் வெளிப்படவில்லை? அது உலகமயமாதலின் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு ஊடுருவலுடன் மறைமுகமாய் இருந்து கொண்டுள்ளது. ஏனைய மத அடிப்படைவாதங்களுக்குக் குறித்த பிராந்திய அடையாளங்கள் உண்டு; கிறிஸ்த்தவ அடிப்படைவாதம் சர்வதேச வியாபி. அது முறியடிக்கப்படுவது உலகமயமாதல் எதிர்ப்பின் ஒரு அங்கமாக இருக்கும். அவ்வாறு ஏகாதிபத்தியக் கிறிஸ்த்தவத்தை எதிர்க்கும் போராட்ட அணியில் அந்தந்த நாடுகளின் கிறிஸ்த்தவ விடுதலை இறையியலாளர்களும் இருப்பர்.(இரவீந்திரன் ந. (2006), மதமும் மார்க்சியமும், சவுத் விஷன், சென்னை.ப.76) 

      பிரித்தானிய காலனிய ஆதிக்கத்தின்போது மக்களின் சுதேச பண்பாட்டை அழித்து அவர்களை விதேஷ பக்தர்களாக மாற்றுவதற்காக கிறிஸ்த்தவ மதம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அவ்வாறு தான் உலகமயமாதல் சூழலும் மூன்றாம் உலகநாடுகளின் சுதேச பண்பாட்டை அழித்து உலகமய பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கான கூலிப்பட்டாளம் ஒன்றினையும், அதற்கு விசுவாசமானவர்களையும் உருவாக்க முனைவதில் கிறிஸ்த்தவ மதத்திற்கு முக்கிய இடமுண்டு. தற்காலத்தில் மத எதிர்ப்பாளர்களாகக் காட்ட முனைந்து அதனூடு தமக்கு ஓர் அங்கீகாரத்தை வழங்குமாறு மன்றாடி நிற்கும் கூட்டம், இந்து சமயத்தினை விமர்சனத்திற்குள்ளாக்குகின்ற அதே சமயம் கிறிஸ்த்தவ மதத்தை உலக சகோதரத்துவ மதமாகக் காட்ட முனைவது அவர்களின் வர்க்க நலனை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. 

      அந்தவகையில் மதத் தீவிரவாதிகளும் பிற்போக்குவாதிகளும் தமக்கு சாதகமானவகையில் நமது சூழலில் உள்ள கலாசார பண்பாட்டுக் கூறுகளில் உள்ள பிழையான பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த பிற்போக்கான அம்சங்களை தூக்கிப் பிடித்து மனிதகுலம் இதுவரை சேகரித்து வைத்துள்ள சகல கலாச்சார பண்பாட்டு அம்சங்களையும் நிராகரிக்கின்றனர். எடுத்துக்காட்டாக பேராசிரியர் அ. மார்க்ஸ், பெரியாரின் கூற்றினை தமக்கு ஆதர்சனமாகக் கொண்டு “அடித்தள மக்களின் விடுதலைக்கு மதப்பற்றும் சாதிப்பற்றும் மட்டுமல்ல, தேசப்பற்றும் மொழிப்பற்றும் கூடத் தடைகளாகத்தான் உள்ளன” என்ற சிந்தனைப் போக்கை முன் வைக்கின்றார். இந்தியாவின் பழமையை பார்ப்பனிய கலாசாரமாக மட்டுமே கருதியதால் ஏற்பட்ட விளைவாகும். 

ஏகாதிபத்திய - நிலப்பிரபுத்துவ பண்பாடுகளின் கூட்டு 

இங்கு, அதி நவீனமான ஏகாதிபத்தியப் பண்பாடும், பத்தாம் பசலியான நிலப்பிரபுத்துவ பண்பாடும் ஒன்றிணைந்தே பொது மக்கள் பண்பாட்டை தகர்த்து வருகின்றன. உலகமயமாதல் சூழலில் செல்வாக்குடன் விளங்கும் தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் பிற பொதுசன தொடர்புச் சாதனங்கள் ஏகாதிபத்திய பண்பாட்டின் விளைபொருளான நுகர்வுப் பண்பாட்டை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற அதேசமயம், நிலப்பரபுத்துவ பண்பாட்டின் விளைபொருள்களாக மதத் தீவிரவாதம், சோதிடம் முதலிய மூடநம்பிக்கைகளையும் பரப்பி வருகின்றன. இன்று மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் எத்தகைய துன்ப துயரங்களுக்கு ஆளாகிய போதிலும் ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி இருப்பதைக் காணலாம். இத்தகைய சாதகமான பொதுசன தொடர்புச் சாதனங்கள் ஆளும் வர்க்கத்திடம் இருப்பதனால் அவை தமக்கு சாதகமான வகையில் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்து, இஸ்லாமிய அடிப்படைவாதங்கள் இன்றைய உலகமயமாதல் சூழலுக்கு ஏற்றவகையில் மறுவாசிப்பு செய்யப்படுகின்றன. 

இப்படியிருக்கும்போது இவ்விரு எதிர்முனைப்பட்ட போக்குகள் புதிய உலகமயமாதல் சூழலில் சேர்ந்து நிலவுது எப்படி? ஏகாதிபத்தியவாதிகள் மக்களை மயக்கத்தில் வைத்திருக்க உலகெங்கும் உள்ள மிகப் பிற்போக்கான சக்திகளை எப்போதும் ஆதரித்து வந்தவர்களாக இருப்பதால், இது ஒன்றும் பெரிய பிரச்சினை அல்ல. சவுதி அரேபியா, குவைத் போன்ற மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் இசுலாமிய அடிப்படைவாத அரசுகளுடனான அமெரிக்காவின் கூட்டணி அல்லது இந்து ஆதிக்கவெறி கொண்ட பா.ஜ.க.வுடனான அதன் இன்றைய நெருக்கமான கூட்டணி (குஜராத் படுகொலைகளைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டது) எவ்விதம் இருவரும் ஒருவருக்கொருவர் உடந்தையாகச் செயல்படுகின்றனர் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.

பிரிட்டிஷ் இந்தியாவிலும் கூட பிரிட்டிஷ்காரர்கள் முதன்மையாக மாமன்னர்களுடன் உறவு வைத்துக் கொண்டு சாதியத்திலிருந்து தந்தையாதிக்கம் வரை பிற அனைத்து மதவடிவங்களையும் ஆதரித்து நிலப்பிரபுத்துவக் கலாசாரத்தை உயர்த்திப் பிடித்தனர். சுதந்திரப் போராட்டத்தை நசுக்க ஜின்னாவின் முஸ்லிம் லீக்குடனோ அல்லது ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கக் கூட்டணியுடனோ சேர்ந்துகொண்டதில் அவர்களுக்குப் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. இன்றைய இந்தியாவிலும் அதே கொள்கை தொடர்ந்து கடைப்படிக்கப்பட்டு வருகிறது. (அரவிந், தமிழில்: வசந்தகுமார், நிழல்வண்ணன் ( 2007), உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா, விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர். பக் . 290). 

இந்தச் சூழலில் மதம் குறித்த தீட்சண்யமான பார்வையுடன் நாம் செயற்பட வேண்டியுள்ளது.

- லெனின் மதிவானம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It