யாழ்ப்பாணத்தில் செப்.24 அன்று ‘எழுக தமிழ்’ என்ற எழுச்சிப் பேரணியை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நடத்தியிருக்கிறார்கள். வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் உருவாக்கிய அரசியல் சார்பற்ற ‘தமிழ் மாநிலக் குழு’ என்ற அமைப்பின் சார்பில் அவரே தலைமையேற்று வழி நடத்திய பேரணி இது. இதில் ஈபி.ஆர்.எல்.எஃப். டெலோ, புளோட் உள்ளிட்ட அமைப்புகளின் அரசியல் பிரிவுகளைச் சார்ந்த அனைவரும் பங்கேற்றனர்.

தமிழ் தேசிய கூட்டணியில் சம்பந்தம் தலைமையிலான ஒரு பிரிவினர் மட்டும் பங்கேற்க வில்லை. 2009 முள்ளிவாய்க்கால் இனப்படு கொலைக்குப் பிறகு மக்கள் ஆளும் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து வெளிப்படையாக போர்க்குரல் எழுப்பி வெளியே வந்திருக்கிறார்கள் என்ற அளவில் இந்தப் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழர் பகுதி இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் சூழலில் மக்களின் இந்தப் போராட்டக் குரல் அந்த மக்களின் விடுதலை உணர்வுத் தீ அணைந்து விடவில்லை என்பதை உலகுக்கு அறிவித்திருக்கிறது. பேரணியின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள பிரகடனங்கள் மிகவும் முக்கியமானதாகும். அந்த பிரகடனத்தின் கருத்துகள் தற்போது தமிழ் மக்கள் எத்தகைய நெருக்கடிகள் அடக்குமுறைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதை தெளிவாகப் படம் பிடித்துள்ளது. அதன் சுருக்கமான கருத்துகள்:

• ஈழத்தில் இறுதிக் கட்டப் போரில் இராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; அய்.நா. மனித உரிமை ஆணையாளர் சையத் உசேன் போர்க் குற்றங்களை விசாரிக்கக் கூடிய திறமையோ, ஆற்றலோ இலங்கை நீதித் துறைக்கு கிடையாது என்று வெளிப்படையாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து 2015 செப்டம்பரில் அய்.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானத்தில் போர்க் குற்றங்களை இலங்கை மற்றும் சர்வதேச நிபுணர்களைக் கொண்ட கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை சர்வதேச நாடுகளுடன் இணைந்து இலங்கையும் ஏற்றுக் கொண்டது. சர்வதேச அரங்கில் ஏற்றுக் கொண்ட கருத்தை இப்போது இலங்கை ஏற்க மறுத்து, விசாரணையில் சர்வதேச பிரதிநிதிகளை அனுமதிக்க முடியாது என்று கூறுகிறது. இந்த நிலையில் முழுமை யான சர்வதேச விசாரணையை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று பேரணி வற்புறுத்தியுள்ளது.

• கடந்த 35 ஆண்டுகளாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற கொடூரமான சட்டம் அமுலில் இருக்கிறது. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இந்த கொடூரமான சட்டத்தை நீக்க வேண்டும் என்று அய்.நா.வில் இலங்கைக்கு அழுத்தங்கள் வந்தன. சட்டத்தை நீக்குவதாக இலங்கையும், 2015 செப்டம்பரில் அய்.நா.வில் சர்வதேச நாடுகளுக்கு உறுதி தந்தது. ஆனால் சட்டம் நீக்கப்படாததோடு, இது நாள் வரை இந்த கொடூர சட்டத்தின் கீழ் கைதுகளும் தொடரு கின்றன. 15-20 ஆண்டுகளாக எந்த குற்றச்சாட்டும் முன் வைக்கப்படாமலேயே பல இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். எனவே பயங்கரவாத தடைச் சட்டம் உடனே நீக்கப்பட வேண்டும்.

• இராணுவத்தின் உதவியுடன் போதை மருந்துகள் கடத்தி வரப்பட்டு, தமிழ் இளைஞர்களை சீரழிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஒரு இனத்தின் விடுதலை உணர்வை, உலகின் பல் வேறு நாடுகளில் ஆக்கிரமிப்பாளர்கள் போதைக்கு அடிமையாக்கும் கொடுமைகள் தொடருகின்றன. 

• இலங்கை அரசு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. “இலங்கை ஒற்றையாட்சி முறையிலேயே நீடிக்கும்; புத்த மதமே அரசு மதம்” என்று அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. தமிழர்களுக்கான அரசியல் தீர்வுகள் குறித்து அரசுக்கு எந்த கவலையும் இல்லை. தமிழர்கள் ஒரு தனி இனம், அவர்களுக்கென வரலாற்று ரீதியாக தனி தாயகம் உண்டு என்பதை இலங்கை அங்கீகரித்து, அதனடிப்படையில் தமிழர்கள் தங்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யக் கூடிய ஒரு கூட்டாட்சி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று, எழுக தமிழ் பேரணி பிரகடனம் செய்திருக்கிறது.

புதிய அரசியல் சட்டம் குறித்து தமிழர்களிடையே வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேரணி வற்புறுத்தியதோடு தமிழ் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக கருத்துகளை தெரிவித்திட இராணுவத்தை தமிழர் பகுதியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்; பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் பேரணி வலியுறுத்தியது.

Pin It