வேலூர் மாவட்டம் மகேந்திரவாடி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் க. முனியாண்டி (45) கடந்த பிப்.22 ஆம் தேதி உடல்நலக் குறைவில் முடிவெய்தினார். நெமிலி கழகத் தோழர் திலீபனோடு உற்ற தோழராக களப்பணியாற்றியவர் முனியாண்டி. அவரது படத்திறப்பு நிகழ்வு கடந்த மார்ச் 25ஆம் தேதி பகல்  11 மணியளவில் நெமிலி தனபாக்கியம் திருமண மண்டபத்தில் நிகழ்ந்தது. முனியாண்டியைப் போலவே அவரது துணைவியார் இந்துமதி, கிராமத்தில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் உறுதியாக பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். படத்திறப்பு நிகழ்ச்சிக்கு அவரே தலைமை ஏற்றார். பெரியாரிய கொள்கை உணர்வோடு அவர் பேசியது உணர்வுபூர்வமாக இருந்தது. அவர் தனது உரையில் : -

idhumathi speech 600“எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்யே சண்டை வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோரும் சொன்னா மாதிரி எங்க வீட்டுக் காரருக்கு கோவம் வரவே வராது. நான் வேணும்னே சண்டைக்கு போவேன். அப்பகூட அவரு சிரிச்சிகிட்டே போயிடுவாரு. இனி நான் சண்டை போடறதுக்கூட ஆள் இல்லையே.

இங்க எல்லா தோழர்களும் சேர்ந்து கொடுத்த பணத்தை வாங்கியதை நினைச்சா எனக்கு உடம்பே கூசுது. யாரும் தப்பா நினைச்சிக்க வேணாம். எனக்கு சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் பெரியார் கத்துக் கொடுத்ததாலதான் அந்த பணம் வாங்குவதற்கு எனக்கு ஒரு மாதிரியா இருக்குது. உடனே என் பையன்கிட்ட அத கொடுத்தா அவனும் பெரியாரை யும், அம்பேத்கரையும் படிச்சதால வேணாம்னு சொல்லிட்டான். திலீபன் தோழர் கிட்ட சொல்லி இந்த பணத்தை இயக்க செலவுக்கு வெச்சிக் கோங்கன்னு சொன்னேன். அவரும் வாங்காததால எனக்கு இதுவரைக்கும் ஒரு மாதிரியா இருக்குது.

என்னுடைய கணவர் இறந்த பிறகு ஊர் ஆளுங்ககிட்ட எந்த சம்பிரதாய மும் பண்ணாமதான் அடக்கம் செய்யணும்னு போராடினேன். ஆனா அவங்க பெரும்பான்மையா இருந்த தால என்னால எதுவும் பண்ண முடியல. இப்ப கூட உனக்கு யார் சொந்தக்காரங்க அப்படின்னு யாராவது கேட்டா நான் நம்ம தோழர்களைத்தான் சொல்லுவேன். எனக்கு இந்த கருஞ்சட்டை சொந்தமே போதும்.

இனிமே திக-வோ, திவிக-வோ எந்த கருப்பு சட்டை கூட்டம் நடந்தாலும் சரி நானும் என் பசங்களும் குடும்பத்தோடு கலந்துப்போம். எங்க சொந்தமும் - குடும்பமும் - கருப்பு சட்டைதான்” என்று அவர் கொள்கை உணர்வுடன் பேசியது அனைவரையும் நெகிழச் செய்தது.

தோழர் முனியாண்டி படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்து இரங்கல் உரை யாற்றினார். மாவட்ட அமைப்பாளர் திலீபன், இரா.ப. சிவா, இரா. திருநாவுக்கரசு (வி.சி.க.), ர. நரேன், சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் அன்பு தனசேகரன், இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.  

Pin It