1915 இல் காந்திஜி சென்னை வந்தார், இதே பயணத்தின் போது தரங்கம்பாடியில் பஞ்சமர்கள் சார்பில் காந்திஜிக்கு வரவேற்பு பத்திரம் படித்தளிக்கப்பட்டது. அதில் தங்களுக்கு குடிநீர் வசதியோ, பிற வசதிகளோ கிட்டவில்லை என்றும், நிலத்தை வாங்கவோ, விற்கவோ தங்களால் முடியவில்லை என்றும், தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ள நீதிமன்றங்களையும் அனுக முடியவில்லை என்றும் அவர்கள் முறையிட்டிருந்தனர். இது அவரைப் பெரிதும் நெகிழ வைத்தது. இதுபற்றி மாயவரம் (மயிலாடுதுறை) கூட்டத்தில் அவர் வேதனையோடு உரைத்தார்.

“வெளிநாடுகளில் இருந்து கொண்டு நான் இந்துமதத்தைப் பற்றி அறிந்தவரை தாழ்த்தப்பட்டோர் முதுகில் ஏறி உட்காருவது இந்து மதமல்ல என்றே தெரிந்தது. இதுதான் இந்துமதம் என்று என்னிடம் மெய்ப்பிக்கப் பெற்றால், நான் அதன் பகிரங்க விரோதியாவேன். தீண்டத்தகாதவர்கள் என ஒரு வகுப்பார் உருவாக காரணமாக இருந்தவர்கள் யார்? எங்கெங்கே பிராமணர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உயர்ந்தவர்கள் என்ற மரியாதையை அவர்களே பெறுவதாக நான் அறிகிறேன். அவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற அருகதையை பெறுபவர்கள் என்றால், இந்தப் பாவம் அவர்களையே சாரும்.

gandhi 433பகவத் கீதை சொல்வதை நினைவில் கொள்ளுங்கள்,. பண்டிதனுக்கும் பாமரனுக்கும் எவன் வேறுபாடு பாராட்டுவதில்லையோ அவனே உண்மையான பிராமணன் என்று கீதை கூறுகிறது. மாயவரத்தில் உள்ள பிராமணர்கள் தங்களையும் பறையர்களையும் சம நோக்குடன் பார்க்கிறர்களா? பிராமணர்கள் பஞ்சம சகோதர்களிடம் சமமாக பழகினால் மற்ற வகுப்பினர் அவர்களைப் பின்பற்றமாட்டேன் என்று சொல்வார்களா?

இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர், வரவேற்பு வாசித்தளித்தவர் எல்லாம் பிராமணர்களே, அவர்கள் மத்தியில் அவர்களது மனசாட்சியை தட்டியெழுப்பும் வகையில் பேசக்கூடிய கொள்கை துணிச்சல் அவருக்கு இருந்தது. அதுமட்டுமல்ல, 1915லேயே பஞ்சமர் பிரச்சனையில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் என்பதும் இந்த அழுத்தமான பேச்சிலிருந்து தெளிவாகிறது. அந்த காலத்தில் வைதீகக் கோட்டையாக இருந்த மாயவரத்தில் காந்திஜி இப்படி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காந்திஜியைப் பொருத்தவரை, பிறருக்கு தான் எதை போதிக்கிறாரோ அதைத்தானும் கறாராக பின்பற்றுவார். தென்னாப்பிரிக்காவில் தன்னோடு இருந்தவரும் ஐரோப்பிய தோட்ட அதிபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான செல்வன் என்பவரின் துணைவியாரைத் தரங்கம்பாடியில் சந்தித்தார் காந்திஜி. அவருடைய புதல்வன் நாயக்கர் எனும் சிறுவனைத் தன்னோடு அழைத்துச் சென்றார். செல்வன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த்தவர். அவரது புதல்வனை தன்னோடு சென்னைக்கு அழைத்து வந்தவர் அவனையும், தான் தங்கியிருந்த ஜி.ஏ.நடேசன் வீட்டிற்கு அழைத்துப் போய்விட்டார். நடேசனின் தாயாரோ மிகவும் வைதீகமானவர், ஆனால் அவரின் மனதையும் மாற்றியது நோய்வாய்ப்பட்ட அந்தச் சிறுவன் நாயக்கருக்கு காந்திஜி செய்த பணிவிடை.

சென்னையில் இருந்து திரும்பி சென்றதும் காந்திஜி செய்த முதல் வேலை அகமதாபாத்தின் புறநகர் பகுதியில் ஓர் ஆசிரமம் நிறுவியதாகும். அப்போது அங்கே இடம்பெற்றவர்கள் 25 பேர், அதில் 13 பேர் தமிழர்கள். ஆசிரமத்தில் பின்பற்ற வேண்டிய 11 விரதங்களில் ஒன்று தீண்டாமை ஒழிப்பும் இருந்தது.

1920ல் காந்திஜி மீண்டும் தமிழகத்திற்கு வந்த போது இங்கே பிராமணர் – பிராமணரல்லாதார் சூடு பிடித்திருந்தது. ஏற்கனவே நீதிக்கட்சி உருவாகியிருந்தது. தேசியவாதிகள் மத்தியில் இது பற்றிய விவாதம் நடந்து வந்தது. இயல்பாகவே இது குறித்த காந்திஜியின் கருத்தை அறிந்திடப் பலரும் ஆர்வமாக இருந்தனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் கூட்டத்தில் காந்திஜி இவ்வாறு பேசினார்.

”பிராமணர் – பிராமணரல்லாதார் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிராமணர்கள் சரணாகதி அடைந்துவிட வேண்டும். இதுதான் அவர்களுடைய கடமை. பிராமணரல்லாதார் எத்தனை இடங்களை கேட்கிறார்களோ அத்தனை இடங்களையும் அளித்து விட வேண்டும், என்னுடைய அதிகாரத்தில் அது இருந்தால் அதற்கு மேலும் சில இடங்களை அளிப்பேன். பிராமணர்கள் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையால் தான் பிராமணரல்லாதார் இவ்வாறு இடங்களைக் கேட்கிறார்கள். பிராமணர்கள் நீண்ட காலம் மிகச்சிறப்பாக தொண்டாற்றியிருக்கிறார்கள். ஆனாலும் தங்களை உயர்வாகக் கருதும் தற்பெருமையின் காரணமாக தங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே அவர்கள் கற்பிக்கும் வேறுபாடு கொடூரமானது. நாம் எந்த வேறுபாட்டை அதாவது ஐரோப்பியர்கள் தங்களுக்கும், கருப்பர்களுக்கும் இடையே பாராட்டும் வேறுபாட்டை எதிர்த்து போராடுகிறோமோ அந்த வேறுபாட்டின் அளவிற்கு இதுவும் கொடூரமானது”

ஏற்கனவே தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்தவர்கள் இந்த தலைமுறையில் விட்டுக்கொடுக்க வேண்டும். அதன் மூலம் பிராமணரல்லாதாரின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதே காந்திஜியின் அடிப்படைக் கருத்தோட்டமாக இருந்தது. அதே நேரத்தில் இதனை அவர்களின் மனசாட்சிக்கு விட்டாரே தவிர, கட்டாயப்படுத்தவில்லை. இதில் இருந்து அவர் கடைசி வரை மாறவேயில்லை.

அவர் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் இங்கு சிறுபான்மையினராக இருக்கும் பிராமணருக்கு அரசுப் பதவிகளிலோ, கல்லூரிகளிலோ உரிய இடங்கள் கிடைப்பதில்லையென்றும், இதற்கு காரணம் பிராமணர் எதிர்ப்பு இயக்கமே என்றும் கூறப்பட்டிருந்தது. இதனை டில்லியில் தனது மாலைப் பிரார்த்தனை சொற்பொழிவில் குறிப்பிட்டு அதுப்பற்றி தனது கருத்தையும் தெரிவித்தார்.

“நாம் செய்யும் கடமைகளில் இருந்துதான் உரிமைகள் கிடைக்கின்றன என்று நான் கூறி வருவதை மட்டும் அவர்கள் நினைவுப்படுத்திக் கொண்டால் அரசாங்கக் கல்லூரிகளில் சேர்த்துதான் ஆகவேண்டும் என்ற உரிமை எதுவும் யாருக்கும் கிடையாதென்பதை அவர்கள் உடனடியாக உணருவார்கள். யாராவது ஒரு பையன் அல்லது ஒரு பெண்ணுக்கு அத்தகைய உரிமை உண்டு என்றால், யாருடைய உரிமை இதுவரை கொடுமையான முறையில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறதோ அவன் அல்லது அவளுக்குத்தான் அந்த உரிமை, ஒரு பிராமணனின் கடமை ஆண்டவனை அடைவதும் மற்றவர்களை அடைய உதவுவதும் தான். அந்தக் கடமையைச் செய்வதில் அவனுக்கு கிடைக்க வேண்டிய உரிமை, அவன் எந்தச் சமுதாயத்திற்கு அந்த சேவையைச் செய்கிறானோ அந்தச் சமுதாயம் அவன் கண்ணியமாக வாழக்கூடியவாறு அவனுக்கு உணவும், உடையும் அளிக்க வேண்டும் என்பது தான்”

ஆதாரம் : [அருணன் எழுதிய தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு எனும் நூலில் இருந்து]

Pin It