திருப்பூரில் பெரியார் சிலையின் சுற்றுச் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த எச்.ராஜாவின் பிறந்தநாள் சுவரொட்டிகள் பா.ஜ.க.வினரை வைத்தே கிழித்தெறியப் பட்டது.

தமிழகம் முழுவதும் பெரியார் சிலையை சேதப்படுத்தல் மற்றும் சிலையை அவமானப்படுத்தும் விதத்தில் இந்துத்துவவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தின் முன்பு தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாசிலை உள்ளது. இந்த சிலைகள் உள்ள இடத்தின் சுற்றுச்சுவரில் வெள்ளியன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. திட்டமிட்டு வன்முறையை உண்டாக்கும் வகையில் இந்துத்துவவாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த செயலை அறிந்த பெரியாரிய அமைப்பினர் அவ்விடத்தில் ஒன்று திரண்டு போராட்டத்திற்கு தயாராகினர். இதற்கிடையே, இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வன்முறையை தூண்டுவதற்காக திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை பாஜகவினரே கிழித்து எறிய வேண்டும் என பெரியார் அமைப்பினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து பாஜக நிர்வாகிகளிடம் பேசிய காவல்துறையினர், அக்கட்சியைச் சேர்ந்தவர்களை வரவழைத்தனர். பின்னர். எச்.ராஜாவின் படத்துடன் ஒட்டப்பட்ட சுவரொட்டியை அக்கட்சியினரே கிழித்து எறிந்தனர். அப்போது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இழி செயல்களை கண்டித்து பெரியாரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் கிழித்த சுவரொட்டிகளை அதே இடத்தில் தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், அந்த சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் முகில்ராசு கண்டன முழக்கமெழுப்பி களத்தில் காவிகளின் சேட்டையை முறியடித்தார்.

Pin It