அரசுகளின் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ மக்கள் முன்னேற்றத்துக்கு அவர்களின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பது இப்போது விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. 1990இல் ‘உலக மயமாக்கல்’ என்ற கோட்பாட்டின் கீழ் உலக வர்த்தக நிறுவனத்துடன் இந்திய பார்ப்பன ஆட்சி உடன்பாடு செய்து கொள்வதற்கு முன் கொண்டு வரப்பட்ட வளர்ச்சித் திட்டங்களினால் மக்கள் பயன் பெற்றார்கள் என்பது உண்மை.  பொதுத் துறை நிறுவனங்கள் வழியாக வேலை வாய்ப்புகள் பொருளியல் வளர்ச்சிகள் வந்தன. ஆனால் உலக மயமாக்கல் கொள்கைக்குப் பிறகு மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு பன்னாட்டு நிறுவனங் களின் சுரண்டல்களுக்கு முன்னுரிமை தரப்படும் நிலை உருவானது. உள்ளூர் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் நசுக்கப்பட்டு விவசாயத் துறை வஞ்சிக்கப் பட்டு இயற்கை வளங்களை சூறையாடி மக்களின் வாழ்வாதாரங்களை நசுக்குவதே அதன் நோக்கமாகி விட்டன. எனவே வளர்ச்சித் திட்டங்கள் மக்களின் வாழ்வதாரத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் அந்த மாநில மக்களின் வளர்ச்சிக்கும் பயன்படுவதாக இருக்க  வேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகள் அணுமின் திட்டங்களின் ஆபத்துகளை உணர்ந்து அவற்றை கைவிடும் நிலையில் இந்தியாவிலேயே குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் எதிர்த்த அணுமின் திட்டங்களை தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் மக்கள் எதிர்ப்பையும் மீறி திணித்து வருகிறார்கள். அணு மின்சாரத் துறையை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ள பார்ப்பன அதிகார வர்க்கம் மக்களின் ஆபத்துகளையும் அவர்களின் நியாயமான அச்ச உணர்வுகளையும் துச்சமென மதிக்கிறது. கூடங்குளத்தில் ஒரு இலட்சத்து அய்ம்பதாயிரம் கோடி செலவில் நான்கு அணு உலைகளை நிறுவி(வ)யிருக்கிறார்கள். அணு உலைப் பூங்காவாகவே மாற்றப்பட்டுள்ள கூடங் குளத்தில் இவ்வளவு பெரிய முதலீட்டுக்குப் பிறகு பெறப்போகும் மின்சாரத்தின் அளவுகூட 6000 மெகாவாட் என்றே கூறப்படுகிறது. ஒரு மெகாவாட் அணுமின்சார உற்பத்திக்கான செலவு ரூ.37.50 கோடி. ஆனால் சூரிய ஒளி வழியாக தயாரிக்கப்படும் ஒரு மெகாவாட் மின்சாரத்துக்கான உற்பத்தி செலவு ரூ.5 கோடி மட்டும் தான். கடந்த 5 ஆண்டுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளிக்கதிர் வழியாக நாம் பெற்ற மின்சாரத்தின் அளவு 24,503 மெகாவாட்டி லிருந்து 57,260 மெகாவாட்டாக உயர்ந்து மொத்த மின்உற்பத்தி அளவில் 17.51 விழுக்காட்டை எட்டியுள்ளது.

கிளி நொச்சியை தலைமையகமாகக் கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய ஆட்சியில் சூரிய ஒளி மின்சாரத்தையே முழுமையாக தமது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதியிலும் மக்களுக்கு வழங்கினார்கள். சூரிய ஒளி, காற்றாலை மின்சாரத் திட்டங்களை ஊக்குவிக்காமல், எந்த நேரத்திலும் ஆபத்துகளை உருவாக்கும் அணுமின் நிலையங் களை நோக்கியே பார்ப்பன அதிகாரவர்க்கம் ஆட்சிகளை செயல்பட வைக்கிறது. இதை எதிர்த்துப் போராடுகிறவர்களை தேச விரோதிகள் என்கிறார்கள்.

‘அணுஉலை ஆபத்தானது’ என்று எதிர்த்தாலே தேச விரோதிகள் என்று கூறும் பார்ப்பன - இந்திய அதிகாரவர்க்கத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவோயாகான், “அணுஉலை அமைத்து விட்டால் விபத்து நடந்தே தீரும்” என்று பேட்டி அளித்திருக் கிறார். அவரது பேட்டியை ‘ஜூனியர் விகடன்’ (8.10.2017)  வெளியிட்டிருக்கிறது. “பாதுகாப்பான அணுஉலை என்று ஒன்று இல்லவே இல்லை. அணு சக்தியை சார்ந்திருப்பது; அதை முன்னெடுப்பதி லிருந்து இந்தியா விலகி நிற்க வேண்டும்” என்று கூறியுள்ள ஜப்பான் முன்னாள் பிரதமர், “இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு கிடைத்தால் அணுமின் நிலையம் அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங் களில் வசிக்கும் மக்களையும், அணு உலைக்கு எதிராகப் போராடுபவர்களையும் சந்திக்க விரும்பு கிறோம்” என்று கூறியுள்ளதோடு, “காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம்தான் மின் உற்பத்தி நடக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

“ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகு ஜப்பானில் அணு உலைகளின் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப் பட்டன. அப்போது மின்பற்றாக்குறை ஏற்படும் என்று மின் உற்பத்தி நிலையங்கள் கூறின. ஆனால் அப்படிப் பற்றாக்குறை ஏதும் ஏற்படவில்லை. எனவே ஜப்பானுக்கு அணுமின் உற்பத்தியே தேவை இல்லை; மறுபடியும் அவற்றை இயக்குவதன் மூலம் ஜப்பான் தவறு செய்கிறது” என்று அவர் தெளிவாக கூறியிருக்கிறார். ஜப்பான் மீண்டும் அணுமின் நிலையங்களை தொடங்கி விட்டது என்று கூடங்குளம் திட்டங்களை நியாயப்படுத்தும். இந்திய - பார்ப்பன அதிகாரவர்க்கம் ஜப்பான் முன்னாள் பிரதமரின் இந்தக் கருத்துக்கு என்ன பதிலை கூறப் போகின்றன?

இவரையும் ‘ஜப்பான் தேசத்தின் விரோதி’ என்று முத்திரை குத்துவார்களா?

Pin It