ஜனார்த்தன் பூஜாரி என்ற பெயர் நினைவிருக் கிறதா? ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சர்; வங்கியில் ‘கேட்பாரற்று’ முடங்கிக் கிடக்கும் பணத்தை ஏழை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தியதன் வழியாக பிரபலமானவர்; ‘பில்லவா’ என்ற தாழ்த்தப்பட்டப் பிரிவைச் சார்ந்தவர்; அவர் மகத்தான புரட்சி ஒன்றை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

கருநாடக மாநிலம் மங்களூரில் குத்ரோலியில் உள்ள கோகர் நந்தீசுவரன் கோயிலின் அர்ச்சகர்களாக இரண்டு பெண்களை அவர் நியமித்துள்ளார். அந்த இரண்டு பெண்களும் ‘தலித்’ சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதுமட்டுமல்ல, கணவர்களை இழந்தவர்கள். இந்தப் பெண்களை கண்களால் பார்ப்பதே தீங்கானது என்று இந்து மத ஆச்சாரத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். இப்போது லட்சுமி (65), சந்திரவதி (45) என்ற அந்த இரண்டு பெண்களும் அர்ச்சகர்கள் என்று அறிவித்துள்ளார், கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் ஜனார்த்தன் பூஜாரி.  செப்டம்பர் 24, 2014 அன்று, இந்தப் புரட்சி நடந்துள்ளது.

இரண்டு பெண்களையும் அன்று கோயிலுக்குள்ளும் கோயில் கர்ப்பகிரகத்துக்குள்ளும் அழைத்துச் சென்றார் ஜனார்த்தன் பூஜாரி. கோயில் தலைமை அர்ச்சகர் லட்சுமண காந்தி இந்த தலித் பெண்களுடன், கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் உத்தரவை ஏற்று, கோயில் கர்ப்பகிரகத்தில் இணைந்து ‘பூஜை’களை செய்தார்.

எந்த அடிப்படையில் இந்தப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்? என்ற கேள்விக்கு, “சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு பரப்பி வந்த ஜாதிகளற்ற சமூகம் உருவாக வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் இந்தப் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பதிலளித்ததோடு, மக்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகள் என்பதே நாராயண குருவின் கொள்கை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதேபோல் தலித் பெண்கள் மேலும் அர்ச்சகர்களாக்கப்பட இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் உருவாகி வருவதாகவும் கூறிய ஜனார்த்தன் பூஜாரி, இத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு எவருடைய ஆணைக்காகவும் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் திட்டவட்ட மாகத் தெரிவித்தார்.

இளம் வயதிலேயே தீண் டாமைக்கு உள்ளாக்கப்பட்டவன் நான். இந்த சமூக வேற்றுமைக்கு எதிராக நான் உறுதியாகப் போராடி வருகிறேன். நாட்டில் சட்டங்கள் இருந்தாலும் தீண்டாமை தொடரவே செய்கிறது. இந்த நியமனமும் தீண்டாமை ஒழிப்புக்கான நடவடிக்கைதான்” என்று உறுதிப்படக் கூறுகிறார் பூஜாரி.

பீகார் தலித் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, கோயிலுக்குள் சென்றதால் கோயில் பார்ப்பன அர்ச்சகர்களால் தீட்டு கழிக்கப்பட்டது பற்றி கேட்டதற்கு சமூகம் எப்படி ஜாதி உணர்வுடன் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று என்றார். அரசு கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தலித் பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்று மாநில முதல்வர் சித்தராமையாவுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். தலித் மற்றும் தலித் பெண்களுக்காகவே அர்ச்சகர் பயிற்சி மய்யம் ஒன்றை உருவாக்கும் வேலைகள் நடந்து வருகின்றன என்றும் பூஜாரி  கூறினார்.

இந்த ‘சமூகப் புரட்சி’ உங்களுக்கு வரலாற்றுப் புகழைத்  தேடி தரும் பூஜாரி!

அய்.அய்.டி. ‘அக்ரகாரம்’

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற அய்.அய்.டி - உயர் தொழில் நுட்பக் கல்வி பார்ப்பனர்களின் ஆதிக்கக் கூடாரமாகவே விளங்குகிறது. இடஒதுக்கீட்டின் கீழ் இங்கே படிக்க வரும் மாணவர்கள், பார்ப்பனர்களின் அவமதிப்பு களைத் தாங்காமல் மன உளைச்சலுக்கு உள்ளா கிறார்கள். குறிப்பாக இங்கே படிக்க வரும் தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்ந்து நிகழ்கிறது.

ரூர்கலாவில் உள்ள அய்.அய்.டி. வளாகத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு செருப்பு வைத்கும் ‘சாமார்’ சமூகத்திலிருந்து படிக்க வந்த மனிஷ்குமார், அவமானத்துக்குள்ளாக்கப் பட்டார். அவரது உடல் சடலமாக கல்லூரி வளாகத்தில் கிடந்தது. அவரது மரணம் குறித்த மர்மம் இன்னமும் நீடிக்கிறது.

கடந்த வாரம் பம்பாய் அய்.அய்.டி. வளாகத்தில் அனிகட் அம்ப்ஹோர் எனும் தலித் மாணவர் மர்மமான முறையில் இறந்தார். தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் கூறுகிறார்கள். இடஒதுக்கீட்டின் கீழ் படிக்க வந்தவர் என்று அவர் பார்ப்பனர்களால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்தார். அய்.அய்.டி. யில் ஜாதியம் குறித்து ஆய்வு செய்யும் அனுப்குமார் கூறுகையில் - “இதுபோன்ற தரமான உயர்கல்வி நிலையங்களில் படிக்கும் தகுதி தலித் மாணவர்களுக்கு இல்லை என்ற மனநிலைக்கு தலித் மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள்” என்று கூறுகிறார்.

‘பார்ப்பன கலாச்சாரமே’ நிறுவனத்தின் மய்யக் கலாச்சார மாக்கப்பட்டு, அதற்காக அய்.அய்.டி.க்கு, “அய்யர்-அய்யங்கார் நிறுவனம்” என்ற பெயர் சூட்டப்பட் டுள்ளதாகவும் அவர் கூறினார். பேராசிரியர்கள் ஜாதி-மத அடையாளங்களைப் பூண்டிருப்பதோடு, அதே போன்ற அடையாளங்களை (நாமம், விபூதி, பூணூல்) அணியும் மாணவர்களுக்கே தனி மரியாதை தனிச் சலுகை காட்டுகிறார்கள் என்று தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கூறுகிறார்கள். “ஜாதி அமைப்பு பெருமைக்குரியது” என்று தனது சக மாணவர் கூறுவதாக ஒரு தலித் மாணவர் கூறினார். இட ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசினால், “உடனே நீ எந்த ஜாதி” என்று கேட்கப்படுவது வழக்கம்.

அதே போல், தலித் சமூகத்தின் பேராசிரியர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்று தலித் மாணவர்கள் கூறுகிறார்கள். பல கருத்தரங்கு களில் தாம் பங்கேற்கும்போது கல்வியாளர்களாக பார்ப் பனர்கள் மட்டுமே இருப்பதும், அங்கே எல்லாம் தான் தனிமைப்படுத்தப்படுவதையும், சமூக நீதிக்காக குரல் கொடுத்துவரும் பேராசிரியர் காஞ்ச்ச அய்லயா கூறுகிறார்.

பல்கலைக்கழக நிதிக்குழுவின் முன்னாள் தலைவர் சுகதேவ் தோரத் ஒரு அம்பேத்கரிஸ்ட். உயர் கல்வி நிறுவனங்களில் அவர் நடத்திய ஆய்வில் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களில் 72 சதவீதம் பேர் புறக்கணிப்புக்கும் அவமதிப்புக்கும் உள்ளா கிறார்கள் என்று கூறியுள்ளார். இடஒதுக்கீட்டின் கீழ் படிக்க வரும் மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் செயல்முறை பயிற்சிகளில் உயர்ஜாதிப் பேராசிரி யர்கள் பாகுபாடு காட்டுவதாகவும், தோரத் ஆய்வறிக்கை கூறுகிறது.

இடஒதுக்கீட்டுப் பிரிவால் ‘தகுதி’ கெட்டுப் போகிறது என்ற வாதம் உண்மை யானது அல்ல என்று மறுக்கிறார் ஆய்வாளர் குமார். நுழைவுத் தேர்வுக்கு பார்ப்பன உயர்ஜாதிப் பிரிவு மாணவர்கள், தனிப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு மதிப்பெண் பெறும் எந்திரமாக வடிவமைக்கப்படு கிறார்கள். அந்த வாய்ப்பு வசதிகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே, மதிப்பெண் மட்டுமே ஒரு மாணவரின் தகுதிக்கான அடையாளம் அல்ல என்கிறார், ஆய்வாளர் குமார். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (செப்.14, 2014) வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் இத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நீண்டகாலமாக பெரியார் இயக்கம் மக்கள் மன்றத்தில் முன் வைத்து வரும் இதே கருத்துகளை இப்போது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் என்பது தான் இதிலே கோட்டிட்டுக் காட்டப்பட வேண்டிய உண்மை.

தனியார் துறை வேலை வாய்ப்புகளை உறுதி செய்கிறது கருநாடகம்

தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் தொழில் கொள்கையை கருநாடக காங்கிரஸ் ஆட்சி அறிவித்துள்ளது. இதன்படி தனியார் தொடங்கும் புதிய தொழில்கள், பெங்களூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இருக்கக் கூடாது. மாநிலத்தின் வேறு பகுதிகளில்தான் தொடங்க வேண்டும். அப்படி தனியார் தொடங்கும் தொழில் நிறுவனங்களில் கீழ் மட்ட ‘டி’ பிரிவு வேலைகள் நூறு சதவீதம் உள்ளுர் மக்களுக்கே வழங்க வேண்டும், ஏ.பி.சி. போன்ற உயர்மட்ட பதவிகளில் 70 சதவீதம் உள்ளுர் மக்களுக்கே வழங்க வேண்டும் என்று கருநாடக அமைச்சரவை தனது கொள்கை முடிவை அறிவித்துள்ளது.

5 இலட்சம் கோடி முதலீட்டுக்கு இலக்கு நிர்ணயித்து 1.5 மில்லியன் வேலை வாய்ப்புகளை மாநிலத்தில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் உருவாக்குவதே அரசின் நோக்கம் என்று, கூடுதல் தலைமை செயலாளர் கே. இரத்தினா பிரபா கூறினார். பெண் தொழில் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு அவர்களுக்காக தொழில் மண்டலங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட கொள்கைகளை அரசு ஏன் உருவாக்கக் கூடாது? நோக்கியா நிறுவனம் திடீரென்று தனது உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நட்டாற்றில் விடப்பட்டுள்ள நிலையில் இவர்களின் பாதுகாப்புக்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

 ஜாதியும் தூய்மையும்

“நாட்டில் அருவருப்பான தீண்டாமையை சுத்தப்படுத்தாமல் தெருவை சுத்தப்படுத்தக் கிளம்பிவிட்டார் மோடி” என்று ‘தி பிசினஸ் லைன்’ ஆங்கில ஏடு தலையங்கம் தீட்டியுள்ளது. தூய்மையான இந்தியாவும் ஜாதிய ஒடுக்குமுறையும் ஒரே காலத்தில் இருக்க முடியாது என்று எழுதியுள்ள அந்த ஏடு, தீண்டாமைக் குற்றங்களை ‘தேசியக் குற்றப் பதிவேடுகள் நிறுவன’ அ றிக்கையிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளது. 2012 ஆம் ஆண்டில் 16.7 சதவீதமாக இருந்த தீண்டாமைக் குற்றங்கள் 2013 ஆம் ஆண்டில் 19.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 5.7 சதவீதத்திலிருந்து (2012), 6.5 சதவீதமாக (2013) அதிகரித்துள்ளது. மனித மலத்தை மனிதன் சுமப்பதும் தொடர்கிறது. தெற்காசிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு இயக்குனர் மீனாட்சி கங்குலி, இதை ‘தீண்டாமையின் மிக மோசமான அடையாளம்’ என்று கூறுகிறார். “மோடி அவர்களே! ஜாதிப் பாகுபாடற்ற தூய்மையான இந்தியாவை உங்களால் கொண்டுவர முடியுமா?” என்று கேள்வி எழுப்பி, காந்திக்கு செய்யும் மரியாதை அதுதான் என்று தலையங்கத்தை முடித்திருக்கிறது அந்த ஏடு. மலம் எடுப்பது கடவுளுக்கு செய்யும் தொண்டு என்று தனது ‘கர்ம யோகம்’ நூலில் எழுதிய மோடி, இதை எப்படி ஏற்பார்?

 ஜாதி பற்றி உச்சநீதிமன்றம்

ஜாதித் தடைகள் இல்லாமல் மக்கள் வாழ  வேண்டும் என்பது சமூகத்தில் சடங்குத்தனமான பேச்சாக இருக்கிறதே தவிர, யதார்த்தமாகவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 2010இல் ஹரியானாவிலுள்ள மிர்ச்சூரில் தலித் குடியிருப்புகள், ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டு தீ வைக்கப் பட்டன.

100 தலித் குடும்பங்கள் ஊரை காலி செய்து ஓடிவிட்டனர். 70 வயது முதியவரும், அவரது உடல் ஊனமுற்ற மகளும் கொல்லப்பட்டனர். கடந்த 4 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்கள் மீண்டும் கிராமத்துக்கு திரும்ப முடியவில்லை. அவர்கள் மறு வாழ்வுக்கான நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்கவில்லை. இது குறித்து தொடரப்பட்ட பொது நலன் வழக்கை நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாயா தலைமையிலான அமர்வு விசாரித்து வழங்கிய உத்தரவில்  ஜாதிய சமூகத்தின் மோசமான நிலையை படம் பிடித்தது.

“அனைத்து ஜாதியினரும்  சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் நியதி. ஆனால் அப்படி வாழ்வது என்பது வெறும் பேச்சாகவே இருக்கிறது. அனைத்து மக்களும் அச்சமின்றி இணைந்து வாழவே வேண்டும். ஆனால், இப்போது அவர்கள் சேர்ந்து வாழ 4 போலீசாரின் பாதுகாப்பு எப்போதுமே தேவையாகிவிட்டது.

அரியானாவின் பூபிந்தர் சிங் ஹீடா ஆட்சி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இன்னும் கிராமத்துக்கு திரும்ப முடியாத இவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் கடமை” என்று நீதிபதிகள் தீர்ப்பில் கண்டிப்புடன் குறிப்பிட்டனர்.

Pin It