திருவாரூர் நீலக்குடியில் மத்திய பல்கலைகழகத்தில் பார்ப்பனர்களைக் கொண்டு நவ.20ல் ‘ஜெய் ஸ்ரீராம்’முழக்கத்துடன் யாகம் நடத்திய சங்கிகள் பெரியார் மீது இழி சொற்களை வீசியுள்ளனர்.

 நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யை துணைக்கு வைத்துக்கொண்டு, கடந்த நவம்பர் 17 அன்று “தீபோத்சவ்-2023” என்ற பெயரில் யாகம் வளர்த்தும் ஹோமம் நடத்தப்பட்டுள்ளது. வெளியிலிருந்து புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஹோமத்தில் துணை வேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க, பல்கலைக்கழகத்தின் கலையரங்க மேடை ‘ஜெய் ஸ்ரீராம்’ வாசகங்களால் அலங்கரிக்கப் பட்டு, முழக்கங்களும் எழுப்பப் பட்டுள்ளன. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகம் கொண்ட கோலங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், கோலம் பாஜக கொடியின் வண்ணத்தில் இருந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், விஷயம் சமூக வலைதளங்கள் மூலமாக தற்போது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த மத நிகழ்வுக்கு மாணவர்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கண்டனங்களும் எழுந்துள்ளன.

இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட மத நிகழ்வுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ. அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகி யோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை மத்திய கல்வி நிறுவனங்களை மதவாதிகளின் பயிற்சிப் பட்டறையாக மாற்றும் நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதன் விரிவாக்கம்தான் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யாக பூஜையில் பங்கெடுத்தது ஆகும்.

அறிவியல் அடிப்படையிலான கல்வியை மறுத்து அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளைப் புகுத்துவதும், கல்வி நிறுவனங்க ளில் சாதி, மதம், மொழி, இனம் சார்ந்த பிரிவினைக் கருத்துகளை விதைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கல்வி நிலையங்களில் அதற்கான வேலையைப் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி செய்து வருகிறது.

பல்கலைக்கழகத்தில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மத்தியில் மதவாதத்தை விதைத்து கல்வி நிறுவனங்களைக் காவிக் கூடாரமாக மாற்றத் துடிக்கும் மத அடிப்படைவாதிகளின் நய வஞ்சக செயலைத் தமிழ்நாடு அரசு கண்டிக்க வேண்டும்.

பெரியாரை இழிவுபடுத்திய ஏபிவிபி

மேலும், மதவாதத்திற்கு கொடி பிடிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியப் பல்கலைக் கழகக் கிளை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதற்கு எதிர் அறிக்கை வெளியிட்டுள்ள ‘ஏபிவிபி’, அதில் தந்தை பெரியாரை பிரிட்டீஷ் ஆட்சி காலை நக்கிய ஈ.வெ.ராமசாமி நாயக்கர், இந்து பண்டிகைகளை எதிர்த்தவர், அவர் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களே யாகத்தை எதிர்க்கிறார்கள் என்று வசைபாடியுள்ளது. ஏபிவிபி என்னும் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ள மத அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி நிலையங்களில் மாணவர்களின் சமத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்றும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It