அண்ணாமலை ‘வந்து விட்டார்’; ‘தமிழ்நாடு’ நாளை நவம்பர் 1ஆம் தேதி தான் கொண்டாட வேண்டும். அதுவே பிறந்த நாள், பெயர் வைத்த நாளை பிறந்த நாளாகக் கொண்டாடுவதா? என்று கேட்கிறார். தமிழ், தமிழ்நாடு உணர்ச்சி அண்ணாமலைக்குப் பீறிட்டு விட்டது போலும்!

பிறந்த நாளுக்கு நாள், நட்சத்திரம், நாழிகை பார்த்து ஜாதகம் பார்க்க வேண்டும் என்ற கட்சிக்காரர் ஆயிற்றே! அதனால் பிறந்த நாள் தான் இவர்களுக்கு முக்கியம்.

நோயுடன் சவலையாகப் பிறந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து முழுமையான குழந்தையாக மாற்றிய நாளை, பிறந்த நாளாக ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டால், அதற்கு நாள், நட்சத்திரம் எப்படிப் பொருந்தும் என்று தான் இவர்கள் கேட்பார்கள். ‘சனாதனம்’ அப்படித்தான் பார்க்கும்.

ஆனால், அரசியல் சட்டம் சூட்டிய ‘இந்தியா’ என்ற பெயரை இவர்கள் ஏற்க மாட்டார்கள். ‘பாரத்’, ‘பாரதியம்’, ‘பாரத தேசம்’ என்று பெயர் சூட்டிக் கொள்வார்கள்.

எந்தத் தாய்க்கு மாநிலம் பிறந்தாலும் அனைத்து மாநிலங்களுக்குமே சமஸ்கிருதமே தாய் என்று சாதிப்பார்கள்; சொந்தத் தாயை ஏற்க முடியாது என்பார்கள்.

நவம்பர் 1 - மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்டபோது அதை எதிர்த்து, பா.ஜ.க.வின் ‘மூதாதை’யரான இந்து மகாசபை, ‘பாரத பூமி பிளவுபட்டு விடும்’ என்றார்கள். அப்போது பா.ஜ.க. எனும் குழந்தை பிறக்கவே இல்லை. முதலில் பிறந்தது இந்து மகாசபை. அந்தத் தாய்க்குப் பிறந்தது ஜனசங்கம். அந்தத் தாய்க்குப் பிறந்தது தான் பாரதிய ஜனதா. ஆக பாரதிய ஜனதாவே பெயர் சூட்டிய குழந்தையே தவிர, பிறந்த குழந்தையல்ல. அண்ணாமலை, ஆர்.எஸ்.எஸ். அலமாரிகளில் இருக்கும் ‘ஜாதகத்தை’ எடுத்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மொழிவாரி மாநில புனரமைப்பு ஆணையத்தின் பரிந்துரையை கடுமையாக எதிர்த்து பேட்டி அளித்தவர் ஆர்.எஸ்.எஸ். ‘பிதாமகன்’ கோல்வாக்கர். இது பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கர் கூறியது என்ன ?

“மாநிலங்கள் புனரமைப்பு கமிஷன் பரிந்துரைகளை கடுமையாக எதிர்த்த கோல்வாக்கர் இதனால் நாடே சிதறிப் போய்விடும் என்றார். மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்காமல் அதற்கு பதிலாக, ஒரே அரசாங்கமே இருக்க வேண்டும். அதுவே இப்போது அவசியம்” என்றார். (A unitary Government prime need of the hour) ஆதாரம்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு, 26.1.1956

இப்போது ‘தமிழ்நாடு நலனுக்காக’ பரிந்து கொண்டு வருகிறார். சரி போனது போகட்டும்; இனியாவது, தமிழ்நாடும் தமிழர்களுமே தங்கள் அடையாளம் என்று அண்ணாமலை அறிவிப்பாரா? அதற்கான கருத்தை அமித்ஷாவைக் கேட்டாலும் சரி; ஆளுநர் ரவியைக் கேட்டாலும் சரி; அல்லது காஞ்சி சங்கராச்சாரியைக் கேட்டாலும் சரி; நமக்கொன்றும் ‘ஆட்சேபணை இல்லை’.

- கோடங்குடி மாரிமுத்து

Pin It