நடிப்பு, நாடகம், இயக்கம், திரைக்கதை, ஆவணப்படம், திரை மொழி கற்பித்தல் ஆகியவற்றில் தனித்து விளங்கிய இயக்குநர் அருண்மொழி (49) மாரடைப்பால் 9.11.2019 அன்று முடிவெய்தினார். 

arunmozhi directorபூனாவில் திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் பயின்றவர் அருண்மொழி. சென்னை திரும்பியவுடன் ‘அவள் அப்படித்தான்' (1979) திரைப்படத்தில் ருத்ரய்யாவிடம் இணை இயக்குநராகப் பணி யாற்றினார். பின்னர் ‘ஏழாவது மனிதன்' (1982) படத்தில் இயக்குநர் ஹரிஹரனிடம் பணி யாற்றினார். அப்படத்துக்கு வசனமும் எழுதினார். அதன் பின்னர் அவரே, நாசர், கலைராணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, ‘காணிநிலம்' (1987) ‘ஏர்முனை' (1992) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இயக்குநர் அருண்மொழியின் திரைப்படங்கள் சர்வதேச திரைப்படவிழாக்களில் அயல்நாடுகளில் திரையிடப்பட்டன.

அருண்மொழி, நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் தமிழ்த் திரைப்படத் துறையில் வணிகத் திரைப்பட இயக்குநராக செயல்பட மனமின்றி இயங்கி வந்தார். எனினும் திரைப்படத் துறைக்கு ஆர்வத்தோடு வரும் இளைஞர்கள் பலருக்கும் திரைப்படத்தைச் சொல்லிக் கொடுப்பதில் மிகுந்த அக்கறைக் காட்டினார். தாமிரபரணி மாஞ்சோலை தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூடு படுகொலை வழக்கு விசாரணை குறித்த Beware of Commissions : 1998 சிறுதுளி, நிலமோசடி, தோழி ஆகிய ஆவணப்படங்களை இயக்கினார். மேலும், மக்கள் கவிஞர் இன்குலாப், கோவை ஞானி, ராஜம் கிருஷ்ணன், சாமிநாத ஆத்ரைய்யா, புரிசை கண்ணப்ப தம்பிரான், சிற்பி தட்சிணாமூர்த்தி, கி.ராஜ நாராயணன், இசைவானில் இன்னொன்று (இளையராஜா) உள்ளிட்ட பிரபலங்கள் குறித்த ஆவணப் படங்களையும் அருண்மொழி இயக்கியது குறிப்பிடத்தக்கது.

அருண்மொழி தனிமனிதரல்ல, எந்தவித இலாபநோக்கமுமின்றி ஒரு இயக்கமாகச் செயல்பட்டவர். திரைப்படம் சார்ந்த விவாதங்கள், பட்டறைகள், குறும்பட முகாம்கள், இலக்கியக் கூட்டங்கள், சர்வதேசத் திரையிடல்கள், கலைநிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவரைக் காணமுடியும். கையில் ஒரு கேமராவுடன் முக்கிய ஆளுமைகளைப் போகிற போக்கில் படம்பிடித்து அவற்றை ஆவணப்படுத்தினார்.

2010க்குப் பிறகு பிரசாத் ஸ்டுடியோ நடத்திவந்த திரைப்படக் கல்லூரியில் பணியாற்றினார். சமீப ஆண்டுகளில் அருண்மொழி, நடிப்புப் பயிற்சிக்கென்று சொந்தமாகவே நடிப்புப் பள்ளி தொடங்கி திரைப்படப் பயிற்சிக் கூடத்தைத் தொடங்கினார். கடந்த 20 ஆண்டுகளில் அவரிடம் பயின்ற மாணவர்கள் திரைப்படத் துறையிலும், ஊடகங்களிலும் சிறப்பான பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். 

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இயக்குனர் அருண்மொழிக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

Pin It