கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்நாட்டில் பெரியாரியப் பெண்கள் பண்பாட்டு புரட்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இந்து ஆங்கில நாளேடு இதை சுட்டிக்காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இறந்தவர்களின் சடலங்களை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த பெண்கள் இடுகாடு வரை சுமந்து சென்று எந்த வித சடங்கு சம்பிரதாயம் இன்றி உடலை அடக்கம் செய்து வருகிறார்கள். பெண்கள் சுடுகாட்டுக்கு போவதே சமூகம் தடைச் செய்து உள்ளது.

dvk women in salemதடையை தகர்த்து சேலம் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 100-க்கு மேற்பட்ட சடலங்களை பெண்களே சுமந்து சென்று இறுதி நிகழ்வுகளை செய்துள்ளனர் என்று இந்து நாளேடு செய்தி வெளிட்டுள்ளது. (மார்ச் 10,2025).

பெரும்பாலான மதங்கள் பெண்களை சுடுகாடு செல்வதற்கு அனுமதிப்பதில்லை. தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மரணத்தில் கூட இடுகாடு செல்ல முடியாது. ஆனால் சேலம் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெண்கள் சடலங்களை சுடுகாடு சுமந்து சென்று மத மரபுகளை உடைத்து இருக்கிறார்கள்.

இந்த தடையை உடைப்பது எங்களுடைய இயக்கம் தான் வெளிக்காட்டி செயல்பட்டு வருகிறது, என்று திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறினார். 2004 ஆண்டு என்னுடைய உறவினர் இறந்த போது இறந்தவரின்‌ மகளை சுடுகாடு சென்று தீ மூட்டுவதற்கு நாங்கள் ஊக்குவித்தோம்.

பின்னர் 2013 -ல் என்னுடைய தாயார் மறைந்த போது எனது தங்கையை சிதைக்கு தீ மூட்ட செய்தோம். இடுகாட்டில் எவ்வித மூடச் சடங்குகள் இன்றி சடலங்கள் எரியூட்டப்பட்டன என்று கொளத்தூர்‌மணி கூறினார்.

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மகளிரணி அமைப்பாளர் ஓ.சுதா இது பற்றி கூறுகையில் " 2013 ஆண்டில் இருந்து நான் இதைச் செய்து வருகிறேன் என்னுடைய கணவரும் திவிக உறுப்பினர் இதற்கு உறுதுணையாக இருக்கிறார். ”கழக தோழர்கள் இல்லங்களில் இறப்பு நிகழும் போது எல்லாம் பெண்கள் தான் சடலங்களை சுமந்து செல்வோம் இதை பார்த்த இயக்கத்தை சாராத பெண்களும் எங்களுடன் இடுகாடு வரை வருவதுண்டு" என்றார்.

கழகத்தின் மகளிரணியை சேர்ந்த சி.சரஸ்வதி 2010 -ம் ஆண்டு முதல் இந்த பண்பாட்டுப் புரட்சியை செய்து வருகிறோம். எங்கள் அமைப்பை சார்ந்த காயத்திரி, கோமதி ,அழகேஸ்வரி, இந்திராணி ஆகியோருடன் இணைந்த இதைச் செய்கிறோம். கடந்த 15 ஆண்டுகளாக எங்களது பெண்கள் குழு கொளத்தூர், கரூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சடலங்களை அடக்கம் செய்துள்ளது.

மற்றொரு பெண் தோழர் சுதா கூறுகையில் இதற்காக குடும்பத்தில் கடும் எதிர்ப்புக்களை சந்திக்க நேர்ந்தது என்கிறார் என்னைடைய தந்தை எங்கள் வீட்டிற்கு வந்தால் சில நிமிடங்கள் மட்டும் பார்த்துவிட்டு திரும்பி விடுவார். எங்கள் வீட்டில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். என்னுடைய சகோதரர் என்னுடன்‌ பேசுவதையே நிறுத்தி விட்டார். ஆனாலும் நான் பெரியார் கொள்கை உறுதியுடன் செயல்படுத்தி வருகிறேன் என்றார்.

மரண செய்தி வந்த உடனேயே எங்களுடைய கழக பெண்கள் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை தொடங்கி விடுவார்கள் என்று கொளத்தூர் மணி கூறினார். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிந்தால் நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறிய கொளத்தூர் மணி, சடலங்களை எரியூட்டிய பிறகு ஆன்மா,மோட்சத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்புவோம். எங்களுடைய கழக பெண்கள் 100-க்கு மேற்பட்ட சடலங்களை தமிழ்நாடு முழுவதும் சடங்குகள் இன்றி சுமந்து சென்று அடக்கம் செய்யதுள்ளனர் என்று கூறினார்.

ஆங்கில இந்து நாளேடு மட்டுமின்றி D/W தமிழ், முரசொலி என பல ஊடகங்களில் திராவிடர் விடுதலைக் கழகப் பெண்களின் இந்த பணி செய்தியாக வெளியாகி பலரது கவனிப்பையும் பெற்றுள்ளது.

பெரியார் பல்கலை.யில் விக்சிட் பாரத்-2047 கருத்தரங்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்.

இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி 06.03.2025 அன்று விடுத்துள்ள அறிக்கை:

“மும்மொழிக் கொள்கை, பாராளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு போன்ற பிரச்சனைகளை ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிலையில் ஒன்றிய அரசின் திட்டமான ‘விக்சிட் பாரத் வளரும் இந்தியா 2047’ தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வரும் மார்ச் 10 மற்றும் 11-ஆம் தேதி கருத்தரங்கு ஏற்பாடு செய்ததை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பதிவாளர் தேர்வு, அலுவலர் பதவி உயர்வு, புதிய பணி நியமனம், விதிகளுக்கு புறம்பாக நூலகர், உடற்கல்வி இயக்குநர் நியமனம் போன்ற பிரச்சனைகளிலிருந்து, ஒன்றிய அரசு தன்னை காப்பாற்றுவதற்காக இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர் வரும் மே 19 உடன் பணியிலிருந்து விடுபட உள்ளார். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே இந்த கருத்தரங்கை நடத்த முடிவு செய்துள்ளார்.

ஆர்எஸ்எஸின் கூடாரமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மாறுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.”

உதயநிதி மீது வழக்குத் தொடர தடை!

உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்புப் பேச்சுக்கு எதிராக மேலும் வழக்குகள் போடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “ ‘சனாதன தர்மத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அவதாரம் எடுத்து வருவேன்’ என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் அப்படியெல்லாம் அவதாரம் எடுத்து கிருஷ்ணன் வர மாட்டார், நாம்தான் வழக்கு தொடர வேண்டும் என்று பகவான் கிருஷ்ணனை அவமதித்து சனாதனவாதிகள் நீதிமன்றத்தை அணுகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் பார்வையில் இதுவும்கூட கடவுளை அவமதிப்பதுதான். இதற்காகவே சனாதனவாதிகள் மீது வழக்குத் தொடரலாம். இந்துத்துவ அரசியல் மதத்தையும் கடவுளையும் புறந்தள்ளிவிட்டு கூட்டணி அரசியலாக உருவெடுத்து நிற்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.