கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் மகளிர் நாள் மாவட்ட மாநாட்டு பேரணி 12.03.2018 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கியது. பேரணிக்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். பேரணியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கொடி அசைத்து துவங்கி வைத்தார். பேரணிக்கு கழகத் தோழர் சுசீலா தலைமை தாங்கினார்.

kolathoor mani at thiruppur

பேரணி முன் வரிசையில் பறை முழக்கமும், கழக மகளிரின் நடனத்துடன் சென்றது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என வரிசையில் சுயமரியாதை இயக்கப்பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளின் படங்களை தாங்கிப் பிடித்தபடி கொள்கை முழக்கங்களுடன் எழுச்சியுடன் அணி வகுத்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் பேரணியை பார்வையிட்டனர்.

திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையை பேரணி அடைந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியார் சிலை, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கு பெருந்திரளாய் கூடியிருந்த கழகத் தோழர்கள் கொள்கை முழக்க மிட்டார்கள்.அதனைத் தொடர்ந்து நடந்த பேரணி மாநாடு நடைபெற்ற இராயபுரம் பகுதியை வந்தடைந்தது.

மாலை 6 மணியளவில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாநாட்டிற்கு பார்வதி தலைமை யேற்றார். சரண்யா வரவேற்புரையாற்றினார்.

முதல் நிகழ்வாக பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோரும் மாணவர் கழகத்தின் வினோதினி, வைத்தீஸ்வரி, சுதா, மணிமொழி, கனல்மதி ஆகியோரும் பெரியாரிய, பெண்ணுரிமை இயக்கப் பாடல் களைப் பாடினார்கள்.

தொடர்ந்து கோவை நிமிர்வு கலையகத்தின் அதிரும் பறையிசை துவங்கியது.பறை இசையின் தொன்மை, புகழ் ஆகியவற்றின் விளங்கங்களுடன் அதன் தேவையையும் நடனத்துடன்கூடிய விளக்கமாக நிகழ்த்தியது பொது மக்களின் கரவொலியுடன் பேராதரவை பெற்றது.

 மாணவர் கழகத்தின் காருண்யா, மகளிர் தினம் குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார். அடுத்து பகுத்தறிவு வழக்காடு மன்றம் நடைபெற்றது.

வழக்காடு மன்ற நடுவர் : மேட்டூர் அனிதா; பகுத்தறிவு வழக்கறிஞராக : சென்னை இரண்யா; டவாலியாக கனல் மதி, வழக்கு தொடுப்பவராக அறிவுமதி

குற்றவாளிகள் : மதத்தலைவராக கொளத்தூர் சுதா; குடும்பத் தலைவராக கோபி மணி மொழி; ஊடகப் பெரு முதலாளியாக பல்லடம் தேன் மொழி; கலாச்சாரக் காவலராக கோவை வைத்தீஸ்வரி; பன்னாட்டு நிறுவன அதிபராக திருப்பூர் சங்கீதா ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

மாலை நிகழ்விற்கு தலைமையேற்ற பார்வதி, பெரியாரியல் தன் வாழ்வில் கொடுத்த தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் எடுத்துரைத்தார்.

பசு.கவுதமன் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மாநாட்டில் நடைபெற்றது.இரண்டு ஜாதி மறுப்புத் திருமணங்களும் மாநாட்டில் சிறப்பு நிகழ்வாக நடந்தது.

கருத்துரை வழங்கிய சென்னை ராஜி, குடும்பம், கற்பு, தாய்மை ஆகியவை பெண்களை எப்படி அடிமைப்படுத்துகின்றன என்பதை எளிமையாக பெரியாரிய கோணத்தில் இயல்பாக கூறினார். அடுத்துப் பேசிய சிவகாமி மாநாட்டிற்கான திட்ட மிடல், வீதி வசூல், மாநாட்டு பணிகளில் கழக மகளிரின் ஈடுபாடு, பங்களிப்பு ஆகியவற்றை விவரித்தார்.

சிறப்புரையாற்றிய பேராசிரியர் சுந்தரவள்ளி, பூணூல் அறுத்த தோழர்களுக்கு வாழ்த்துக் களும், மதவாதிகளுக்கு எச்சரிக்கையும் என அதிரடியாய் பேச்சைத் தொடங்கி விரிவாக பெரியாரியலையும், பெண்கடவுள்களுக்கும் பாலின பாகுபாடு உண்டென்பதையும், ஆண்டாள் பிரச்சனையில் தமிழகத்தின் எதிர்வினை போதாது என்பதையும் பதிவு செய்தார்.

நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, 1930களிலேயே பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துக்களை சுட்டிக் காட்டிப் பேசினார். தனித்து வாழும் பெண்களின் சமூக ஏற்பு, உரிமைகள் குறித்து பேசிய தலைவர், மாநாட்டை ஏற்பாடு செய்த மகளிருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

இறுதியாக வசந்தி நன்றியுரையாற்றினார். தோழர்களுக்கு நினைவுப் பரிசுகளாக பெரியாரிய புத்தகங்கள், பசு.கவுதமன் எழுதிய நூல், பெண் ஏன் அடிமையானாள் ஆகியவை வழங்கப்பட்டன. மாநாட்டில் துண்டேந்தி வசூல் செய்ததில் பொதுமக்கள் அளித்த தொகை 3550. (ரூபாய் மூவாயிரத்து ஐநூற்றி அய்ம்பது).

மாநாட்டுப் பணிகளை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.

மாநாட்டில் பசு கவுதமன் எழுதிய “பெரியாரிய பெண்ணிய சிந்தனைகள்” எனும் நூலை சிவகுரு (பாரதி புத்தகாலயம்) வெளியிட, ஈரோடு பிரேமா பெற்றுக் கொண்டார்.

பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்” நூலை கழகத் தலைவர் வெளியிட காருண்யா பெற்றுக் கொண்டார். சிவகுரு நூல்கள் குறித்து அறிமுகம் செய்து உரையாற்றினார்.

மேடையில் ஜாதி மறுப்புத் திருமணங்கள்

 மாநாட்டில் சிறப்பு நிகழ்வாக இரண்டு ஜாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவேற்றி வைத்தார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், ஆவணியூர், வி.என்.பாளையம் தங்கம்மாள்-அண்ணாமலை ஆகியோரின் மகன் செல்வ குமார் – எடப்பாடி வட்டம், ஜலகண்டபுரம் சாலை காவலர் குடியிருப்பில் வசிக்கும் சின்னராசு-மயில் ஆகியோரின் மகள் ஸ்வாதிப்பிரியா ஆகியோருக்கும்,

சேலம், உடையாப்பட்டி, சாந்தி-கிருஷ்ணன் ஆகியோரின் மகன் பிரபு – பழனியில் வசிக்கும் செல்வி-வடிவேல் ஆகியோரின் மகள் பிரியதர்ஷினி ஆகியோருக்கும் மாநாட்டு மேடையில் வாழ்க்கை இணையேற்பு நிகழ்ந்தது.

இரண்டு இணையேற்பும் பிற்படுத்தப்பட் டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் இடையே நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.