உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டம் அர்த்தமில்லாதது என்று முன்னாள் நீதிபதி கே.சந்துரு, தமிழ், ஆங்கில ‘இந்து’ நாளேடுகளில் எழுதிய கட்டுரைகள், அதற்கான வலிமையான மறுப்புகளை முன் வைக்கவில்லை.

காலியாக உள்ள 18 நீதிபதி இடங்களில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிரிவினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே - இப்போது நடக்கும் போராட்டத்தின் நோக்கம்; தமிழ் ‘இந்து’ கட்டுரையில் அதை நீதிபதி சந்துருவே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த பிப். 19ஆம் தேதி தலைமை நீதிபதியை சந்தித்த ‘சமூக நீதிக்கான போராட்டக் குழு’வின் அமைப்பாளர்கள் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்ததாகத் தெரிகிறது. முதல் கோரிக்கை என்னவென்றால், இனி உயர்நீதிமன்ற பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் நபர்களின் பட்டியலில் பார்ப்பனர், முதலியார், கவுண்டர், பிள்ளை சமூகத்தைச் சார்ந்தவர்கள் இடம்பெறக் கூடாது என்பதே.

அவர்களின் இரண்டாவது கோரிக்கை பிரதிநிதித்துவம் பெறாத ஜாதியைச் சார்ந்தவர்கள் இனி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்பது” - இப்படி கோரிக்கையை தெளிவாக எழுதத் தொடங்கி, பிறகு கட்டுரை முழுவதிலும் மேற்குறிப்பிட்ட இரண்டு பிரச்சினைகளை தொடாமலேயே பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடுகளைப் பற்றியும், இவர்களின் பிரதிநிதித்துவம் கூடுதலாகவே இருப்பதாகவும், புள்ளி விவரங்களை அடுக்குகிறார். போராட்டத்தின் கோரிக்கையோடு எந்தத் தொடர்பும் இல்லாத விளக்கங்களே இவை.

உயர்நீதிமன்றத்தை மய்யமாக வைத்துதான் போராட்டம் நடக்கிறது. ஆனால், நீதிபதி சந்துரு, மாவட்ட நீதிமன்றங்களின் இடஒதுக்கீடுகளை விரிவாக புள்ளி விவரங்களோடு விவரிக்கிறார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து குறிப்பிடும்போது, குறிப்பிட்ட சில ஜாதியினருக்கு கூடுதல் வாய்ப்பு தருவதற்குத்தான் எதிர்ப்பு காட்டப்படுகிறது எனும் பிரச்சினையின் மய்யத்திலிருந்து விலகிப் போய் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்தே எழுதுகிறார்.

அடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பிற்பட்ட பட்டியலினப் பிரிவினர் 85 சதவீதமாகவும், முற்பட்ட வகுப்பினர் 15 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாகவும் கவலைப்படுகிறார். முஸ்லிம், கிறிஸ்துவ நீதிபதிகளோ அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இதுவரை நுழைந்திடாத பிரிவினரோ இல்லாமலிருப்பது பற்றி அவர் கண்டு கொள்ளவில்லை. சரி, பார்ப்பன நீதிபதிகள் இப்போது 7 பேர் இருக்கிறார்கள்.

இப்போது அனுப்பப்பட்ட பட்டியலிலும் பார்ப்பனர் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. சந்துரு அவர்களின் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஒரு தகவலை கவனத்தில் கொள்ள வேண்டும். 165 மாவட்ட நீதிபதிகளுக்கு எழுத்துப்பூர்வமாக நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர் மட்டுமே பார்ப்பனர்.

எழுத்துப்பூர்வ தேர்வில் மாவட்ட நீதிபதியாக ஒரே ஒரு பார்ப்பனர்தான் வர முடிந்திருந்திருக்கிறது. ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக  7 பார்ப்பனர்கள் இருக்க முடிகிறது. இது முன்னேறிய சமூகத்துக்கு எப்படி அநீதியாகும்? மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெறாத ஒருவர், இப்போது உயர்நீதிமன்ற நீதிபதியாகவே இருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இது தொடர்பாக இரண்டு வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டலாம்.

கே.ஆர். நாராயணன், குடியரசுத் தலைவராக இருந்தபோது, அவரது ஒப்புதலுக்காக உச்சநீதிமன்றத்துக்கான நீதிபதிகள் பட்டியல் வந்தபோது, விளக்கம் கேட்டு கே.ஆர்.நாராயணன் திருப்பி அனுப்பினார். “தலித், பெண்கள், சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் தரப்படாதது ஏன்?” என்பதுதான் அவர் கேட்ட விளக்கம். “உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை” என்று தலைமை நீதிபதி பதில் தந்தார்.

“அது எனக்கும் தெரியும்; நான் இடஒதுக்கீடு பற்றிக் குறிப்பிடவில்லை; பல்வேறு சமூகப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் தரப்படாததையே சுட்டிக் காட்டுகிறேன்” என்று பதிலளித்தார் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பட்டியலில் பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தபோது, தமிழக அரசு எதிர்த்தது. சட்ட அமைச்சராக இருந்த பொன்னையன், ‘தமிழக மண்ணின் உளவியலுக்கு (Soil psychology) இது எதிரானது’ என்றார். பிறகு பட்டியல் திருத்தப்பட்டது. மூத்த வழக்கறிஞர் காந்தி, 2014இல் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ஜெ. செலமேசுவர், எம்.ஒய். இக்பால், அமர்வு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டனர்:

“Appointments cannot be exclusively made from any isolated group nor should it be pre-dominated by representing a narrow group.”

“ஒரு குறிப்பிட்ட குழுவிலிருந்து மட்டுமோ அல்லது ஒரு சிறு குழுவுக்கு ஆதிக்கம் செலுத்தக் கூடிய எண்ணிக்கையிலோ நியமனங்கள் இருக்கக் கூடாது” - என்பதே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

அந்த அடிப்படையில்தான் ஏற்கெனவே பிரதிநிதித்துவம் பெற்றுள்ள பார்ப்பனர், முதலியார், கவுண்டர், பிள்ளை ஜாதியினருக்கு மீண்டும் வாய்ப்புகள் தரக்கூடாது என்கிறது சமூகநீதி போராட்டக் குழு. இதில் என்ன தவறு? இப்போது போராடுவது, வழக்கறிஞர்கள் மட்டுமல்ல; சமூகநீதி கோரும் இயக்கங்களும்தான். நீதிபதி சந்துருவின் எதிர்ப்புக் கட்டுரையில் எந்த நியாயமும் இல்லை.

 

Pin It