இந்து சிவில் சட்டம் குறித்து விரிவான கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ (பிப். 19, மார்ச் 5) வெளியிட்டிருந்தது. நல்ல கருத்து வெளிச்சத்தைத் தந்தது. இது தொடர்பாக மேலும் சில கருத்துகளை குறிப்பிட விரும்புகிறேன்.

யுனிசெப் தரும் புள்ளி விவரப்படி உலகில் குழந்தை திருமணம் நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டமிருந்தும் வரதட்சணை கொடுமைகள், கொலைகள் குறையவில்லை. குடும்ப வன்முறை சட்டமி ருந்தும் பெண்கள் மீதான வன்முறைகள் குறையவில்லை.

பலதார மணம் இந்து திருமண சட்டப்படி தடுக்கப்பட்டிருந்தாலும், நான்கு மனைவியரை திருமணம் செய்து கொள்ள அனுமதித்த முசுலீம்கள் மத்தியில் இதன் சதம் 5.2 ஆக உள்ள நிலையில், இந்துக்கள் மத்தியில் 5.8 சதமாகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் 9 சதமாகவும், இதர பழங்குடி மக்கள் மத்தியில் 14 சதமாகவும் உள்ளது.

பெண்களுக்கு சட்டப்படி சொத்துரிமை வழங்காமல் ஏமாற்றவே முயற்சி நடைபெறுகிறது. விவாகரத்தான முசுலீம் பெண்களுக்கு இத்தா காலத்திற்குப் பின்பு ஜீவானாம்சம் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் விடப்படுவதையும் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முறையையும் முசுலீம் பெண்கள் அமைப்பே எதிர்த்துள்ளது.

கிருத்துவ தனிநபர் சட்டப்படி தகாத ஒழுக்கமுள்ள மனைவியை விவாகரத்து செய்ய கணவன் மனு கொடுத்தால், அந்த குற்றச்சாட்டி லிருந்து விடுவித்துக் கொள்ளும் பொறுப்பு மனைவியைச் சார்ந்ததாம். பஞ்சாபில் சொத்தில் பிரிவினை ஏற்படக் கூடாது என்பதற்காக சகோதரர்கள் அனைவரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நிலை உள்ளது.

தென்னகத்தில் இந்துக்கள் மத்தியில் சகோதரியின் மகளை திருமணம் செய்து கொள்ளும் நிலை வடநாட்டில் இல்லை. இந்து கூட்டுக் குடும்பம் என்ற பெயரால் அனுபவிக்கும் வரிச் சலுகை மற்றவர்க்கு கிடையாது. இப்படி பெண்களுக்கு பாலின சமத்துவத்தை மறுக்கிற, பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுகிற நிலை அனைத்து தனிநபர் சட்டங்களிலும் உள்ளதை முதலில் அந்தந்த சமூகங்கள்களைய முன்வர வேண்டும்.

தனக்கு அரசியல் சட்டந்தான் கீதை, குரான், பைபிள் என்று கூறும் பிரதமர் மோடி, அரசியல் சட்டத்தின் புனிதத்தைக் காக்க நினைத்தால் முதலில் மேற்கண்ட முரண்களையும், பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதையும் மாற்ற முன்வரவேண்டும். இல்லையெனில், பாரம்பரிய அம்சங்களுடன் புதிய சூழலுக்கேற்ற அம்சங்களையும் இணைத்து பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுமென்று கூறும் அவரின் குரல், ஆர்.எஸ்.எஸ். குரலாகவே எதிரொலிக்கும்.

- இளைய சிம்மன், சென்னை-600 014.

Pin It