ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

‘என்னை கோபால் கோட்சே இருந்த அதே கொட்டடியில் வைத்திருக்கிறார்கள்’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் அசீமானந்தா.

asimandha 350இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர்.

தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார்.

‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து, 9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத செயல்களை வெளிப்படையாக அவர் ஒப்புக் கொண்டதோடு இதற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் முழு ஆசீர்வாதமும் உண்டு என்று அவர் கூறினார்.  டெல்லி மாநகர் நீதிமன்றத்திலும் இதேபோல் ஒப்புதல் வாக்குமூலம் தந்த பிறகும் இப்போது டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவரை நிரபராதி என்றும் அவருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லை என்றும் விடுதலை செய்துவிட்டது.

‘காரவன்’ ஏட்டில் அவரது பேட்டி வெளி வந்தவுடன், வழக்கம்போல் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் இவை உண்மைக்கு மாறானவை என மறுத்தன. அதைத் தொடர்ந்து அவரது பேட்டியின் ஒலி நாடா இணையத்தில் ஒலிப்பதிவாக வெளியிடப்பட்டது. இப்போதும் http/www.caravanmagazin.in/swamiassemanda-interviews  என்ற தளத்தில் அதை கேட்கலாம்.

நரேந்திர மோடியின் முழுமையான ஆதரவு பெற்றவர் அசீமானந்தா. அவர் இப்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முழுமையாக வெளியிடுகிறது. அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

“சுவாமிஜியை வரச் சொல்லுங்க” என்று ஜெயிலர் உத்தரவிட்டார். உடனே அவர் அலுவலகத்திலிருந்து இரு காவலர்கள் விரைந்து சிறை மைதானத்துக்கு சென்றார்கள். சுவருக்கு  மறுபக்கம் ஏதோ நூறு பேர் கூச்சலிட்டுக் கொண் டிருப்பது போன்ற ஒலி சுவர்களில் எதிரொலித்தது. அம்பாலா சிறையில் அது பார்வையாளர் நேரம். 2012 ஜனவரி 10.

சில நிமிடங்கள் கழித்து ஜெயிலர் அறை வாசலில் வந்து நின்றார் சுவாமி  அசீமானந்தா. சாதாரண மக்கள் மீது பல இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துத்துவ கனல் தெறிக்கும் சாமியார். காவி வேட்டியும் முட்டி வரை நீளும் காவி குர்த்தாவும்  அணிந்திருந்தார். அப்போதுதான் சலவை செய்து இஸ்திரி போட்ட உடைகளின் தோற்றம். நெற்றி மீது கவிழும் விதத்தில் ஒரு கம்பளி குரங்குக் குல்லாயும், கழுத்தைச் சுற்றி காவி மஃப்ளரும் இருந்தன. என்னைக் கண்டதும் அவருக்கு ஏனோ விநோதமாக இருந்தது. ஒருவருக்கொருவர் நமஸ்தே சொல்லிக் கொண்டோம். அவர் என்னை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே வெள்ளை வேட்டி குர்த்தா அணிந்த குமாஸ்தாக்கள் பிருமாண்டமான லெட்ஜர்களில் ஆழ்ந்து போயிருந்தார்கள். கதவுக்குப் பின்னால் இருந்த பெரிய மரப் பெட்டியின் மீது அவர் உட்கார்ந்தார். அருகே இருந்த ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு உட்காரும்படி எனக்குச் சொன்னார். அவர் வீட்டுக்கு வந்த விருந்தாளியை உபசரிப்பவர் போல என்னிடம் சகஜமாக இருந்தார். எதற்கு வந்தீர்கள் என்று கேட்டார். “யாராவது ஒருத்தர் உங்கள் கதையைச் சொல்ல வேண்டுமில்லையா?” என்றேன்.

அடுத்த இரு வருடங்களில் அசீமானந்தாவுடன் நான் நடத்திய நான்கு சந்திப்புகளின் ஆரம்பம் அதுதான். (அதற்கு முன்பு டிசம்பர் 2011இல் ஒரு நீதிமன்ற விசாரணையின்போது அவரை சந்தித்திருக் கிறேன்) மொத்தம் 82 பேர் கொல்லப்பட்ட மூன்று வெடிகுண்டு நிகழ்ச்சிகள் தொடர்பாக கொலை, கிரிமினல் சதி, தேசத் துரோகம் ஆகிய குற்றச் சாட்டுகளின் கீழ் அவர் கைதாகி விசாரணை நடந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு வெடிகுண்டு சம்பவங்களிலும்கூட அவரை விசாரிக்கக் கூடும். குற்றப் பத்திரிகையில் அவர் பெயர் உள்ளது. எனினும் முறைப்படி இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை. மொத்தமாக ஐந்து வெடிகுண்டு நிகழ்ச்சிகளிலுமாக 119 பேர் கொல்லப்பட்டது இந்திய சமூகத்தின் இணக்கத்தைக் குலைப்பதாக இருந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அசீமானந்தாவுக்கு மரண தண்டனையே கிடைக்கக் கூடும். (ஆனால் இப்போது விடுதலையாகிவிட்டார் - ஆர்)

நாங்கள் பேசப் பேச, அசீமானந்தா மேலும் மேலும் சகஜமாகவும் வெளிப்படையாகவும் பேச ஆரம்பித்தார். அவர் வாழ்க்கை பற்றி அவர் சொன்ன விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை மட்டுமல்ல மனதை தொல்லை செய்பவையும்கூட. தான் வாழ்க்கையில் பின்பற்றிய கொள்கைகள் பற்றியும், தான் செய்த வன்முறை சம்பவங்கள் பற்றியும் அவருக்கு திமிரான ஒரு பெருமிதம் இருந்தது. நாற்பது வருடங்களாக அவர் ஹிந்து தேசியவாதத்தை ஊக்குவித்தவர். அதில் பெரும் காலத்தை அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பழங்குடியினர் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் பணியாற்றுவதில் செலவிட்டு சங்கத்தின் ஹிந்துத்துவ கொள்கையையும் ஹிந்து ராஷ்டிரத் துக்கான பார்வையையும் பரப்பினார். இப்போது அறுபது வயதைக் கடந்துவிட்ட அவர் தன் கொள்கைகளை ஒருபோதும் நீர்க்கவிட்டதில்லை.

காந்தியைக் கொன்ற பிறகு கைதான நாதுராம் கோட்சேவும் அவரது கூட்டாளி நாராயண் ஆப்தேவும் 1949இல் தூக்கிலிடப்பட்டு தகனம் செய்யப்பட்டது அம்பாலா சிறையில்தான். இன்னொரு கூட்டாளியான கோட்சேவின் சகோதரர் கோபாலுக்கு 18 வருட சிறை தண்டனை தரப்பட்டது. ‘என்னை கோபால் கோட்சே இருந்த அதே கொட்டடியில் வைத்திருக்கிறார்கள்’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் அசீமானந்தா. இன்று இந்துத்துவ பயங்கரவாதத்தின் மிகப் பிரபலமான முகம் அசீமானந்தாதான். வெடிகுண்டு நிகழ்ச்சிகள் நடப்பதற்கு பல வருடங்கள் முன்னர் அவரை சந்தித்திருந்த பத்திரிகையாளர்கள் எல்லாரும் என்னிடம் அவரை சகிப்புத் தன்மையே இல்லாத மிகவும் திமிரான ஒரு மனிதர் என்று வர்ணித் திருந்தார்கள். நான் இப்போது அந்த சிறையின் இருண்ட அலுவலக அறையில் சந்தித்தது சிறை வாசத்தால் சாதுவாக்கப்பட்ட, அதே சமயம் தன் செயல்கள் பற்றி எந்த வருத்தமும் இல்லாத ஒருவரை. “எனக்கு என்ன நடந்தாலும், அது ஹிந்துக்களுக்கு நல்லதுதான்” என்று சொன்ன அசீமானந்தா அவருக்கு இந்த வழக்கில் கிடைக்கும் எந்த தண்டனையானாலும், அது ‘ஹிந்துக்களை பொங்கி எழச் செய்யும்’ என்று நம்புகிறார்.

2007 பிப்ரவரி 18 இரவு. வழக்கம்போல டெல்லி இரயில் நிலையத்தின் 18ஆவது நடைமேடையிலிருந்து சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. ‘நட்பு இரயில்’ என்று அழைக்கப்படும் இந்த இரயில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஓடும் இரண்டே இரண்டு இரயில்களில் ஒன்று. அன்று இரவு அதில் பயணம் செய்தோரில் மூன்றில் இரு பங்கினர் தங்கள் நாட்டுக்கு திரும்பச் செல்லும் பாகிஸ்தானிகள். இரயில் புறப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து நள்ளிரவுக்கு சில நிமிடம் முன்னால், இரண்டு சாதாரண பயணிகள் பெட்டிகளிலும் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. பதினாறு பெட்டி களுடன் நள்ளிரவில் ஓடிக் கொண்டிருந்த அந்த இரயில் நெடுகத் தீ பிடித்து எரிந்தது.

குண்டுகள் வெடித்ததால், பெட்டிகளின் வாசல்பகுதிகள் திறக்க முடியாமல் மூடிக் கொண்டன. பயணிகள் உள்ளேயே சிக்கிக் கொண்டார்கள். ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நிருபரிடம் ஒரு இரயில்வே டிக்கட் பரிசோதகர் சொன்னார்: “அது பயங்கரமாக இருந்தது. பெட்டி முழுக்க எரிந்த உடல்கள்தான். முழுக்க எரிந்தவை. பாதி எரிந்தவை.” பின்னர் இரு பெட்டிகள் நிறைய அடுக்கி வைக்கப் பட்டிருந்த  வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகள் அதில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த குண்டுகளில் PETN, TNT, RDX, பெட்ரோல், டீசல், மண்ணெண் ணெய் என்று பல வித இரசாயனங்கள் அடைக்கப் பட்டிருந்தன. மொத்தம் 68 பேர் உயிரிழந்தனர்.

அசீமானந்தாதான் இதற்குப் பொறுப்பு என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மொத்தம் ஐந்து குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகளில் இந்த இரண்டாவது வெடிப்புதான் மிக பயங்கரமானது ஆகும். அவர் சம்ஜௌதா குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளி. ஹைதராபாத்தில் மெக்கா மசூதி அருகே மே 2007இல் 11 பேர் சாகக் காரணமான குண்டுவெடிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளி. அக்டோபர் 2007இல் இராஜஸ்தான் அஜ்மீரில் மூவர் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பில் ஆறாவது குற்றவாளி. செப்டம்பர் 2006லும் செப்டம்பர் 2008லும் மகாராஷ்டிரத்தில் மலேகானில் நடந்த இரு தாக்குதல்களில் மொத்தமாக 37 பேர் கொல்லப்பட்ட சம்பவங்கள் பற்றிய வழக்கில் அசீமானந்தாவின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்குகளை வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு துறையினர் விசாரித்து ஐந்து வழக்குகளில் ஒரு டசனுக்கு மேற்பட்ட குற்றப்பத்திரிகைகள் பதிவாகியுள்ளன. விசாரித்தவர்கள் மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, சி.பி.ஐ. தேசிய புலனாய்வு பிரிவு ஆகியோர். மொத்தம் 31 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் இருவர் அசீமானந்தாவுக்கு நெருக்கமான கூட்டாளிகள். பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரீஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரக்யா சிங் தாக்குர், இந்தூர் மாவட்ட முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுனில் ஜோஷி ஆகியோர் இவர்கள்.

விசாரித்த அத்தனை அமைப்புகளும் இந்த தாக்குதல்களை திட்டமிடுவதில் அசீமானந்தா தான் முக்கிய பங்காற்றியவர் என்று சொல்லியுள்ளன. திட்டமிடும் கூட்டங்கள் நடத்தியது, எங்கே யாரை தாக்க வேண்டும் என்று தேர்வு செய்தது, குண்டு தயாரிப்புக்கு நிதி அளித்தது, குண்டு வைக்கவும் வெடிக்கவும் வேலை செய்தோருக்கு உதவியும் அடைக்கலமும் கொடுத்தது என்று பல வேலைகளைத் தான் செய்ததாக அசீமானந்தாவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

டிசம்பர் 2010லும் ஜனவரி 2011லும் அசீமானந்தா டெல்லியிலும் ஹரியானாவிலுமாக இரு முறை கொடுத்த சட்டப்பூர்வமான ஒப்புதல் வாக்குமூலங் களில் தான் தாக்குதல்களை திட்டமிட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் தந்தபோது, அசீமானந்தா தனக்கு வழக்கறிஞர் தேவையில்லை என்று மறுத்து விட்டார். ஒவ்வொரு முறை வாக்குமூலம் கொடுப்பதற்கு முன்னரும் அவர் விசாரணை அதிகாரிகள் நெருங்க முடியாத பாதுகாப்பில் 48 மணி நேரம் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சுயமாக சிந்தித்து மனதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு அப்போது அவருக்கு இருக்கவே செய்தது. இருமுறையும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட அவர் முடிவு செய்தார். நீதிமன்றத்தில் அதைப் பதிவு செய்தார்.

அவருடைய வாக்குமூலங்களிலும், அவரது இரு கூட்டாளிகளின் வாக்குமூலங்களிலும் இந்த தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த உறுப்பினர் ஒருவருக்குத் தெரிந்தே இவை திட்டமிடப்பட்டன என்று சொல்லப்பட்டிருக்கிறது.  

(தொடரும்)

நன்றி: ‘நரேந்திர மோடி ஆதரவு பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்கு மூலம்’ நூலிலிருந்து

(தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர்கள் ஞாநி, நரேன் ராஜகோபாலன்)

Pin It