தீண்டத்தகாத மக்களை இந்திய அரசியல் அரங்கிற்கு கொண்டுவருவதிலும் – இந்திய ஜனநாயகத்திற்கு அடித்தளமிடுவதிலும் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு – 12

            மகாத்மா காந்தியின் உயிரைப் பாதுகாப்பதற்காக, கூட்டத்தின் தலைவரான பண்டிட் மதன்மோகன் மாளவியா, இரு தரப்பினருக்கும் ஏற்புடைய ஒரு தீர்வைக் கண்டறியவேண்டும் என்று ஆலோசனை கூறினார். பண்டிட் மாளவியாவின் வேண்டுகோளின் பேரில், டாக்டர் அம்பேத்கர் பேசுவதற்கு எழுந்தார். அவர் தனது கருத்துகளை உண்மையான முறையில் எடுத்துரைத்தார். அவர் பின்வருமாறு கூறினார் :

“இம்மாநாட்டின் குறிக்கோளைப் பார்க்கும்போது, இத்தகைய ஒரு மாநாட்டைக் கூட்டுவதின் தேவையை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எங்களுடைய கோரிக்கைகளை எதிர்ப்பதற்காக, மகாத்மா காந்தி சாகும் வரை பட்டினி கிடக்கத் தொடங்கியுள்ளார். மகாத்மா காந்தியின் மதிப்பிற்குரிய உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்று ஒவ்வொருவரும் விரும்புவது இயற்கையே. ஆனால், காந்தி தனது உயிரைப் பணயம் வைப்பதற்கு முன்னால் சில உருப்படியான மாற்று அறிக்கையை அளித்திருக்க வேண்டும். இன்றைய நிலையைப் பரிசீலனை செய்தபின், காந்தியிடமிருந்து எத்தகைய தெளிவான மாற்று அறிக்கையும் வராத நிலையில், பேச்சுவார்த்தைக்கான எல்லா முயற்சிகளும் பயனற்றுப் போகும் என்று நான் உணர்கிறேன். மனந்திறந்து கூறுவதானால், முடிவு செய்வதற்கு வேறு ஒன்றுமேயில்லை. காந்தியின் மனதில் உண்மையில் என்ன இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளவில்லை எனில், இம்மாநாட்டில் மீண்டும் மீண்டும் பேசுவதெல்லாம் எத்தகைய பயனையும் அளிக்கப் போவதில்லை.

ambedkar_216“இந்த மாநாட்டில் எவ்வளவு நேரம் விவாதித்தாலும், காந்தியின் மனதில் உண்மையில் என்ன இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்வதற்கு முன்னால் எந்தத் தீர்வையும் காண்பதற்கு என்னால் இயலவில்லை. இம்மாநாட்டைக் கூட்டியவர்களிடமிருந்தோ, எந்தத் தலைவரிடமிருந்தோ வரும் அறிக்கைகள் என்னைக் கட்டுப்படுத்தாது என்று நான் திட்டவட்டமாக உங்களுக்கு கூறுகிறேன். மகாத்மா காந்தியின் கருத்தை மட்டுமே நான் பரிசீலனை செய்வேன். அவருடைய அறிக்கை என்ன என்பது எனக்குத் தெரிந்தாலன்றி என்னுடைய கருத்தை நான் எவ்வாறு கூற முடியும்? அவருடைய அறிக்கையை முதலில் கொண்டு வாருங்கள், பின்னர் அதைப் பற்றி நான் சிந்திக்கிறேன். தொடக்கத்திலேயே நான் தெளிவாகக் கூறுகிறேன். காந்தியின் சார்பில் ஒரு தீண்டத்தகாத தலைவரால் கொண்டு வரப்படும் எந்த அறிக்கையையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மகாத்மா காந்தியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, எனது மக்களின் நியாயமான கோரிக்கைகளை நான் தியாகம் செய்ய மாட்டேன்.''

1932 செப்டம்பர் 20 அன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு சாகும் வரையிலான தமது பட்டினிப் போராட்டத்தை காந்தி தொடங்கினார். இது பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. சர். தேஜ்பகதூர் சாப்ரு, பாரிஸ்டர் ஜெய்கர், பண்டிட் மதன் மோகன் மாளவியா, மதுரதாஸ் வாஸன்ஜி ஆகியோர் சாதி இந்துக்களின் பிரதிநிதிகளாகக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். டாக்டர் அம்பேத்கர் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார். மாநாட்டில், காந்தியின் சார்பில் கீழ்க்கண்ட கருத்துகளை சர். சன்னிலால் குழுவின் முன் அளித்தார் :

1. தீண்டத்தகாதவர்களுக்கு தனித் தேர்தல் தொகுதிகள் வழங்குவது என்ற முடிவை காந்தி எதிர்க்கிறார்.

2. கூட்டுத் தேர்தல் தொகுதிகள் மற்றும் இடங்கள் ஒதுக்கப்படுவதற்கு அவருக்கு முழு உடன்பாடு இல்லை. என்றாலும், தேர்தல் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று பம்பாயில் அனைத்து இந்து மாநாடு ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்குமாயின், அவர் அதை ஆட்சேபிக்க மாட்டார்; ஆனால் அவர் அந்த முடிவுக்கு உடன்படுகிறார் என்று இதற்குப் பொருள் கொள்ளக்கூடாது. ஏதாவது ஒரு விஷயம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஒருவேளை அவர் தமது ஒப்புதத்தை அளிக்கலாம்.

காந்தியின் ஆலோசனைகளுக்கு செவிமடுத்தபின், டாக்டர் அம்பேத்கர் பேச எழுந்தார். அவருடைய உரை உண்மையில் மிக ஆற்றல் வாய்ந்ததாகவும், நெஞ்சைத் தொடுவதாகவும் இருந்தது.

“இன்று இந்த இக்கட்டான நிலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில், மற்ற எல்லாரையும்விட நான் மிகவும் விந்தையான நிலையில் உள்ளேன். இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் எனது மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் பாதுகாப்பதற்கு, கெடுவாய்ப்பாக நான் ஒரு வில்லனாகக் காட்சியளிக்கிறேன். எனது மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற , எந்த அளவுக்கும் துயரங்களைப் பொறுத்துக் கொள்ள நான் தயாராக உள்ளேன்.

“இதோ இந்தத் தெருவில் உள்ள விளக்குக் கம்பத்தில் என்னை நீங்கள் தூக்கிலிட்டாலும் எனது மக்களின் நியாயமான, சட்டப்படியான நலன்களைப் பாதுகாக்கும் எனது புனிதமான கடமைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டேன் என்று உங்களுக்கு கூறுகிறேன். இன்று நம்மை எதிர்நோக்கும் பிரச்சினைக்கு உணர்ச்சி வேகத்திற்கு இரையாகி தீர்வுகாணக் கூடாது. மாறாக, அரசமைப்புச் சட்ட முறைகள் மூலம் தீர்வு காண வேண்டும். ஏனெனில், காலங்காலமாக அடிமைத் தனத்தில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற சகோதரர்கள் தொடர்புடையது இப்பிரச்சினை. மனச்சான்றுக்கு மட்டுமே இசைந்து நடந்து கொள்வது எந்த உதவியையும் அளிக்காது. மகாத்மா காந்தியுடைய யோசனைகளின் தன்மையை நோக்கினால், சிந்திப்பதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்படும். எனினும், தமது பட்டினிப் போராட்டத்தை 10–12 நாட்களுக்கு ஒத்திவைக்கும்படி, ஒரு தீர்மானம் மூலம் இந்த மாநாடு அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.''

ஆனால், எந்த சூழ்நிலைகளிலும், அது சாத்தியமில்லை என்று அவைத் தலைவர் பண்டிட் மதன்மோகன் மாளவியா எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்ப்பைக் கைவிட, டாக்டர் அம்பேத்கர் ஒப்புக் கொள்ளவில்லை.

இதை அடுத்து, அடுத்த நாள், செப்டம்பர் 21 பிற்பகல் இரண்டு மணிக்கு மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், மாநாட்டுக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் பிர்லா மாளிகைக்குச் சென்றனர். ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்களுக்கான ஒரு திட்டத்தை சர். தேஜ் பகதூர் சாப்ரு வகுத்துத் தந்தார். இதன்படி, ஒவ்வொரு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கும் மூன்று பேர்களுக்கு குறையாத வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு, சாதி இந்துக்களுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் கொண்ட கூட்டு வாக்காளர்கள் அந்த மூவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பர்.

பிரிட்டிஷ் அரசுடன் நீண்ட விவாதத்திற்குப் பிறகு தீர்ப்பை கை விட்டுவிடுவதால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, அதிகப்படியான சலுகைகள் அளிக்கப்பட்டால் ஓர் ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். இந்த யோசனையை தாங்கள் பரிசீலிப்பதாக காங்கிரஸ் பிரதிநிதிகள் வாக்குறுதியளித்தனர். இதற்காக ஒரு சிறிய குழுவை நியமிக்கலாம் என்று பண்டிட் மாளவியா யோசனை கூறினார். அதன்படி, தேஜ்பகதூர் சப்ரு, பாரிஸ்டர் ஜெயகர், பண்டிட் மாளவியா, மதுரதாஸ் வாசன்ஜி மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் இடம் பெற்றோரின் பெயர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டன.

அதற்கு ஏற்ப கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை டாக்டர் அம்பேத்கர் தயாரித்து, 1932 செப்டம்பர் 20 அன்று இரவு 10 மணிக்கு பிர்லா பவனில் அதனைக் குழு முன் வைத்தார். அதன் வாசகம் பின்வருமாறு :

காந்தியின் பட்டினிப் போராட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் :

பகுதி I – சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம்

அ. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மாகாண சட்ட சபைகளில் கீழ்க்கண்ட எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் பெறுவர்.

ஆ. இந்த இடங்களுக்கான தேர்தல் கூட்டு வாக்களர் தொகுதிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்கள் என்னும் ரீதியில் நடைபெறும். இதற்கு ஒரு நிபந்தனை உண்டு. முதல் 10 ஆண்டுகளுக்கு சென்னையில் 18 தனித் தொகுதிகள், பம்பாய் மத்திய மாகாணம் மற்றும் வங்காளத்தில் 10 தனித் தொகுதிகள், அஸ்ஸாமில் 4 தனித் தொகுதிகள், பீகார், ஒரிசாவில் 5 தனித் தொழுதிகள், பஞ்சாபில் 5 தனித் தொகுதிகள், அய்க்கிய மாகாணத்தில் 12 தனித் தொகுதிகள் ஆகியவற்றில் பொதுத் தேர்தலுக்கு முன் 2 பேர்கள் கொண்ட பட்டியலிலுள்ளவர்களை – ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாக்காளர்கள் ஒரு முதல் கட்டத் தேர்தலில் தேர்ந்தெடுப்பர். அதற்குப்பிறகு கூட்டு வாக்காளர் தொகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் சார்பாக இவர்கள் போட்டியிடுவர்.

இ. 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்கட்ட தேர்தல் முறை முடிவுக்கு வரும்; விதிவிலக்கில்லாமல் எல்லா இடங்களும் கூட்டு வாக்காளர் தொகுதிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்கள் எனும் அடிப்படையில் நேரடித் தேர்தல் மூலம் நிரப்பப்படும்.

ஈ. கூட்டு வாக்காளர் தொகுதிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்கள் என்ற அடிப்படையில் சிறப்புப் பிரதிநிதித்துவம் பெறும் உரிமை, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு மேலும் 15 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். அந்தக் காலத்திற்குப் பிறகு ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு பொது வாக்காளர்களின் வாக்கெடுப்பு அடிப்படையில் இது தீர்வு செய்யப்படும்.

உ. மத்திய சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் சிறப்புப் பிரதிநிதித்துவ உரிமை, மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கேற்ப அங்கீகரிக்கப்படும்; மாகாணச் சட்ட சபைகள் விஷயத்தில் பின்பற்றப்படும் அதே முறை கையாளப்படும்.

ஊ. குறைந்தபட்சம் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்காவது வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படும்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாக்குரிமை மாகாண மற்றும் மத்திய சட்ட சபைகளுக்கு ஒரே மாதிரியானதாக இருக்கும்.

பகுதி II : 1. எல்லா மாகாணங்களிலும், எல்லா நகரசபைகள் நிறுவனங்கள், மாவட்ட மற்றும் வட்ட அமைப்புகள், கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பஞ்சாயத்துப் பள்ளிகளின் வாரியங்கள் மற்றும் எந்த நிறுவன அமைப்பிலும் சிறப்புப் பிரதிநிதித்துவம் பெற ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனுமதிக்கப்படுவர்.

2. மத்திய மற்றும் நிறுவன பொதுப்பணித் துறைகளில் குறைந்தது அவர்களின் மக்கள் தொகை விகிதாசாரப்படி, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுவது உத்தரவாதம் செய்யப்படும். அதற்காக நிர்ணயிக்கப்படும் வேலைத் தகுதியை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கீட்டை நிறைவு செய்ய கல்வித் தகுதிகளைத் தவிர, வேறு விஷயங்களில் உள்ள சட்ட ரீதியான விதிகளைத் தளர்த்துவதற்கு வகை செய்யப்பட வேண்டும்.

3. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு கல்வி வசதிகள் செய்து கொடுப்பதற்காக, குறைந்தபட்சம் அவர்களின் எண்ணிக்கை விகிதத்திற்கு ஏற்ப, கல்விக்கான மானியத்திலிருந்து நிதி ஒதுக்க வேண்டும்.

4. கல்வி, சுகாதாரம், பொதுப் பணிகளில் வேலைக்கமர்த்தப்படுவது முதலிய விஷயங்களில், தங்கள் நலன் எந்த விதத்திலாவது பாதிக்கப்படும் (அலட்சியப்படுத்தப்படும்)போது, ஆளுநர் அல்லது வைசிராய்க்கு மேல்முறையீடு செய்யும் உரிமைக்கு – அரசியல் சாசனத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும். அத்தகைய அரசியல் சட்டவிதி கனடாவின் அரசியல் சாசனப் பிரிவு 93இல் உள்ளது போன்று அமைய வேண்டும்.

சர். தேஜ் பகதூர் சப்ரு, “ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வாக்காளர்கள் பற்றி ஒரு தரமான திட்டத்தை வகுத்தார். அதன் பேரில் தமது சகாக்களுடன் கலந்தாலோசித்து, ஒரு திட்டத்துடன் 2 மணி நேரத்தில் திரும்ப வருவதாகச் சொன்னார் டாக்டர் அம்பேத்கர். அன்று இரவு திரும்பி வந்து அந்தத் திட்டத்தைத் தாம் ஏற்கப் போவதாக அவர்களிடம் கூறினார். ஆனால், பிரிட்டிஷ் பிரதமரின் தீர்ப்பு வழங்கியதைவிட அவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் இடங்கள் வேண்டுமென்று கூறினார்.

தலைவர்கள் அவருடைய திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். ஜெயகர், சப்ரு, பிர்லா, ராஜகோபாலாச்சாரி மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் செவ்வாய் நள்ளிரவில் ரயிலில் பூனாவுக்குப் பயணமாயினர்.

செப்டம்பர் 21 அன்று நண்பகல் எரவாடா சிறைச்சாலையின் வாயிலுக்கு அருகில் உள்ள முற்றத்திற்கு காந்தி கொண்டு வரப்பட்டார். சர்தார் பட்டேலும் காந்தியின் செயலாளர் பியாரிலாலும் அவரது கட்டிலுக்கு அருகே அமர அனுமதிக்கப்பட்டிருந்தனர். உடனே பூனாவுக்கு வரும்படி அன்று நண்பகல் டாக்டர் அம்பேத்கரை தொலைபேசியில் கேட்டுக் கொண்டார் சப்ரு.

பூனாவுக்கு கிளம்பும் முன் "டைம்ஸ் ஆப் இந்தியா' இதழுக்கு 1932 செப்டம்பர் 21 அன்று அளித்த பேட்டியில், டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார் : “மாநாடு நியமித்த குழுவிற்கு நேற்று இரவு நான் அளித்த யோசனையை – என்னுடனும் திரு. ராஜாவுடனும் விவாதிக்க திரு. காந்தி விருப்பம் தெரிவித்ததாகக் கூறும் தகவல் பூனாவிலிருந்து எனக்கு கிடைத்தது. அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால், திரு. ராஜாவுடனும் அவரது கட்சியுடனும் நடக்கும் பேச்சுவார்த்தைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினேன். நான் இவ்வாறு கூறியதற்கான காரணம் என்னவெனில், உண்மையில் சர்ச்சை ஒருபுறம் எனக்கும் எனது கட்சிக்கும்; மறுபுறம் திரு. காந்திக்கும் இடையே உள்ளது என்பதால்.

“மேலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடையே தங்கள் சொந்த நோக்கங்களுக்காக தலைவர்களை உருவாக்கவும், அவர்களது பிரச்சாரத்தின் மூலம் அவர்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது திணிக்கவும் – காங்கிரசும் இந்து மகாசபையும் கையாளும் கொள்கையை திட்டவட்டமாக நான் ஏற்க மறுக்கிறேன் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதில் திரு. ராஜா மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்று இரவு புறப்படுகிறன்.''

– வளரும்

ஆதாரம் : பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1) 

Pin It