ஆர்.எஸ்.எஸ்.சில்கூட கடவுள் மறுப்பாளர் இருக்கலாம் என்றால் நம்புவீர்களா? சாவர்க்கர் என்ற ஆர்.எஸ்.எஸ். கொண்டாடும் தலைவர் ஒரு கடவுள் மறுப்பாளர்தான். ஆனால் இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்று கூறியவர். ஆனால், அ.இ.அ.தி.மு.க. என்ற வேத பக்த ஜன சபாவில் உறுப்பினராவதற்குக் கட்டாயம் கடவுள் பக்தி தேவை. நெற்றியில் குங்குமம், விபூதி கட்டாயம்; முழங்கை வரை வண்ண வண்ண ‘மந்திரக்’ கயிறுகள். எல்லாவற்றையும்விட வேத சடங்குகள். யாகங்களை ‘பிராமண’ புரோகிதர்களைக் கொண்டு நடத்த வேண்டும். உலகத்திலேயே இப்படி ஒரு அரசியல் கட்சியை எங்கும் கண்டுபிடிக்க முடியாது. கட்சி சட்டத் திட்டத்தில் எழுதி வைக்கப்படாத கட்டாயமான விதிமுறைகள் இவை.

Bhramin yahagam 600‘வேத ஜன சபா’வின் இரட்டைத் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி ஜி, ஓ. பன்னீர்செல்வம் ஜி, பாகவத சுவாமிகள் கட்சியின் 55 மாவட்ட செயலாளர்களுக்கும் மழை  வேண்டி வருண பகவானுக்கு ‘யாகம்’ நடத்த உத்தரவிடவே யாகங்களும் வேத மந்திரங்களோடு நடந்து முடிந்திருக்கிறது. யாகம் நடத்தாத சட்டமன்ற உறுப்பினர்களை கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் என்று மாண்புமிகு பேரவைத் தலைவர் பதவி நீக்கம் செய்வாரா அல்லது கட்சியின் இரட்டைத் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் மீது பகவான் நிந்தனை யாளர்கள் என்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா என்பது நமக்குத் தெரியாது.

ஆனால் தண்ணீர் பஞ்சத்தை அரசின் கவனத்தில் கொண்டுவர எதிர்க்கட்சியான தி.மு.க. போராட்டம் நடத்தும்போது. ஆளும் கட்சியோ யாகம் நடத்தலாமா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு சில “அறிவார்ந்த” விளக்கங்களை நாம் பதிலாகக் கூறத் தயார்.

ஆளும் கட்சியான ‘வேத பக்த ஜன சபா’ நடத்தும் யாகம்கூட ஒரு போராட்டம்தான். இதை நீங்கள் நம்ப வேண்டும். இது ‘வருண பகவானுக்கு’ எதிரான தொடர் போராட்டத்தின் மற்றொரு கட்டம். புரோகிதர்கள் சமஸ்கிருதத்தில் ‘வருணனுக்கு’ என்ன கோரிக்கை வைத்தார்கள் என்பது யாருக்கும் புரியாது என்றாலும், அமைச்சர்களின் ‘உள்ளக் குரல்’ மட்டும் நன்றாகவே நமக்கு கேட்கிறது.

“அட, வருணபகவானே! நீ ஏன் எங்களை சோதிக்கிறாய்? உனக்கு புரோகிதர்களை அழைத்து வந்து அவர்களை ‘யாகம்’ நடத்த வைத்தால்தான் மக்களுக்கு மழையைத் தருவாயா? மக்கள் தண்ணீரின்றி தவிப்பதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்குக் கிடையாதா? சூரியனையும் ஒரு ‘பகவானாக்கி’ சூரிய நமஸ்காரம் செய்கிறோம். அவனோ, கடும் வெப்பத்தை உருவாக்கி சுட்டெரிக்கிறான் என்றால், வருணனாகிய நீயும், உன் பங்குக்கு, மழையைத் தடுக்கிறாயா? எத்தனைமுறை யாகம் நடத்தினாலும் அசைய மறுக்கும் நீயும் எங்களைப்போலத்தான் ஆட்சி நடத்துகிறாயா?

கடந்த மாதம் அறநிலையத் துறை வழியாக உனக்குப் புரிந்த வேத மொழியில், உன்னால் ‘ஆதார்’ அட்டை வழங்கப்பட்ட ‘பிராமண புரோகிதர்’களை வைத்துத்தானே யாகம் நடத்தினோம்? கருணை காட்டினாயா?

வானுலகில் உங்களுக்கான ‘சாம்ராஜ்ய’ அமைச்சரவையில் இலாகாக்களை யெல்லாம் பிரித்து வைத்துக் கொண்டிருப்பதாக புரோகிதர்கள் இங்கே கூறுவதை நாங்கள் அப்படியே நம்பிக் கிடக்கிறோம். பாதுகாப்புத் துறைப் பொறுப்பையேற்று செயல்படும் உங்கள் ‘வானுலக’க் கடவுளுக்கு எங்கள் புரட்சித் தலைவி உயிரைக் காப்பாற்ற எவ்வளவு யாகம் நடத்தினோம்? எவ்வளவு சடங்குகள்... எவ்வளவு பிரார்த்தனைகள்? ஆனாலும் எங்கள் தலைவியைக் காப்பாற்ற வரவில்லையே!

போகட்டும்! வருண பகவானையே கேட்கிறோம்; காவிரிக்கு புஷ்கரம் நடத்தினோமே! ஏன் காவிரி வறண்டுக் கிடக்கிறது? எதிர்க்கட்சிகள் எங்கள் இயலாமையை கேள்வி கேட்கின்றன. நாங்களோ, உன்னுடைய ‘இயலாமை’யை எதிர்த்து மீண்டும் மீண்டும் கருணை கோரி போராடுகிறோம். இந்தப் போராட்டத்துக்காவது தரை இறங்கி மழையாக வருவாயா, வருணனே!” என்று அமைச்சர்கள் மனக் குரல் பேசுகிறது. அதில் நியாயம் இருக்கிறது.

என்னப்பா இது? வருண பகவானுக்கு மனுப்போடுவதே போராட்டமா என்று சில பக்தர்கள் கேட்கக் கூடும்.

என்ன செய்வது! கோரிக்கை வைத்தால்தான் பரிசீலிப்போம் என்ற நிலைக்கு வருண பகவானே அடம் பிடிக்கிறானே! அடம்பிடிப்போரைப் பணிய வைப்பதற்கு ஒரு யாகம் நடத்தினால் அது போராட்டம் தானே!

சரி, போராட்டம் என்னவாயிற்று? “வெற்றி, வெற்றி; வருண பகவானைப் பணிய வைத்து விட்டோம்” என்று அமைச்சர்கள் ஆனந்த கூத்தாடுகிறார்கள். “யாகத்துக்கு சக்தி இல்லை என்று கூறுவோரைக் கேட்கிறேன்; சமஸ்கிருதத்தில் புரோகிதர் ஓதினால், பகவான் கேட்பார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று பதிலடி தருகிறார். தமிழை தனது பெயரில் மட்டும் வைத்துள்ள தமிழிசை.

அடுத்து வர இருக்கிற மின் பற்றாக்குறையைப் போக்க எந்த மந்திரத்தை வைத்து எந்த யாகத்தை எந்தக் கடவுளுக்காக நடத்தலாம் என்று தமிழிசை நாட்டுக்குத் தெரிவித்தால் நல்லது.

அதாவது சார், “தட்பவெப்ப சூழலைப் புரிந்து போராட்டம் நடத்த வேண்டும்; தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கிவிட்டது என்றும், காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளதால் மிதமான மழை பெய்யலாம்; ஆனால் புயல் வீசாது என்றும் வானிலை ஆய்வு மய்யம் அறிவித்த உடனேயே வருண யாகம் நடத்தினோம்; வெற்றி பெற்று விட்டோம்” என்றார் ஓர் அமைச்சர்.

பரவாயில்லையே; பக்த ஜன சபாவுக்குள்ளும் பகுத்தறிவு வேலை செய்கிறதே!

அது சரி;  காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அப்போது எந்த யாகம் நடத்தி, புயலைத் தடுப்பீர்கள் என்று கேட்கத் தொடங்கினோம்; அவ்வளவு தான், ஆளை விடு என்று ஓட்டமெடுத்தார், திருவாளர்  ‘வேத பக்த ஜன சபா’.

Pin It