மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை - சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடியும் சட்டசபையில் அறிவித் துள்ளார். இதன் பின்னணி உள்நோக்கம் குறித்த ஒரு தகவல் சமூக ஊடகங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது.

இது குறித்து அந்த பதிவில்,

“மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை - சேலம்இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய், தமிழ் நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?

அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம் அமையவிருக்கும் சாலை யானது கார்ப்பரேட் நிறுவனமான ஜிண்டாலுக்காக. ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது, ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை புதிய திட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது. அதில் முதன்மையான திட்டம் சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது.

இரண்டாவது, திருவண்ணாமலை மாவட்டம் கவுத்தி, வேதியப்பன் மலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது, இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும் இரும்புத்தாது வளங்களை வெளிநாடுகளுக்கு அதிவிரைவாக ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் சென்னை துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்ல வேண்டும்.

அதற்காகத்தான் மலைகளின் ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள். அது தான் இந்த சென்னை -சேலம் விமான சேவை மற்றும் 8 வழி பசுமைச் சாலை. இந்த சாலையின் மூலமாக சேலம்- சென்னைக்கு இடையிலான பயணதூரம் 60 கிலோ மீட்டர் குறையும். நம் வளங்கள் நம் வரிப் பணத்திலேயே களவு போக உள்ளது. இதற்கு தமிழக அரசும் உடந்தை” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, சேலம் உருக்காலையை விழுங்கு வதற்கான பெரும் போட்டியில் இருக்கும் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம் சேலத்தில் உள்ள கஞ்சமலையின் வடக்குப்பகுதியில் 638 ஏக்கர் பரப்பளவிற்கு ஒரு மில்லியன் டன் இரும்புத்தாது வெட்டியெடுக்கவும், திருவண்ணாமலையிலும் 35 மில்லியன் டன் இரும்புத்தாது வெட்டிக்கொள்ளவும் தமிழக அரசிடம் உரிமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சுற்றுச் சூழல் போராளி சேலம் பியுஷ், எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான், நிலம் கைப்பற்ற வந்த அதிகாரியுடன் சேலம் ஆச்சாங்குட்டபட்டி கிராம மக்களுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்த மாணவி வளர்மதி ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.

அரசின் அடக்குமுறையை கருத்துரிமை பறிப்பை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

Pin It