ஈழத் தமிழர் பிரச்சினைப் பற்றி சோனியா எந்த ஒரு இடத்திலாவது இதுவரை ஒரு வார்த்தையாவது பேசியது உண்டா என்று கோவையில் 8.6.2009 அன்று பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க. நடத்திய மாபெரும் பொதுக் கூட்டத்தில் வைகோ கேட்டார். உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி.

சென்ற ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் இலங்கைக்கு நாங்கள் இராணுவ உதவி செய்திருக்கிறோம் என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார். இதற்கு மேல் என்ன சாட்சியம் வேண்டும்? இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் இராணுவ உதவி செய்து இருக்கிறோம்.

இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்று வதற்கு நீ இராணுவ உதவி செய்வாயா? இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நீ யார்? நீ என்ன உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டின் ஒருமைப் பாட்டையும் காப்பாற்றுகின்ற காவல்காரனா? அப்படியானால் நீ எப்படி டாக்காவுக்கள் நுழைந்தாய்? உனக்கு டாக்காவில் கிழக்குப் பாகிஸ்தானில் என்னவேலை? நீ எப்படி இன்னொரு நாட்டுக்குள் நுழைந்தாய் என்று கேட்க மாட்டார்களா,

அன்றைக்கு மனிதாபிமான அடிப்படையில் மனிதஉரிமைகளைக் காப்பாற்றப் போகிறோம் என்றுசொல்லி இந்திரா காந்தி அவர்கள் அறிவித்தார். நாங்களும் வரவேற்றோம். இன்றும் வரவேற்கிறேன். பூபேஷ்குப்தா ராஜ்யசபாவில் சொன்னார் இது சர்வதேச மனிதஉரிமை பிரச்சனை. இந்திய இராணுவம் செல்லட்டும் என்றார். அப்படியானால், இன்னொரு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நீ இராணுவத்தை அனுப்புவாயா?

அப்படியானால் கிழக்கு ஆசியாவில் எந்த தேசத்தில் ஒருமைப்பாடு உடையும் என்றாலும் இராணுவத்தை நீ அனுப்புவாயா? பக்கத்தில், தூரத்தில் இருக்கின்ற எந்த நாடுகளிலும் பிரச்சனை என்றால் நீ அங்கு ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற இராணுவத்தை அனுப்புவாயா? அந்த ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து இந்திய ஒருமைப்பாட்டை புதைகுழிக்கு அனுப்பி விடாதே.

உனக்கும் எனக்கும் என்ன உறவு? பெரியார் கேட்டார். அவர் கடைசிக் கூட்டத்தில் கேட்டார். பெரியார் வழிவந்த பேரப்பிள்ளைகள் கேட்கிறோம். உனக்கும் எனக்கும் என்ன உறவு என்று கேட்க மாட்டோமா? உனக்கும் எனக்கும் எங்களுக்கும் ஏற்பட்ட உறவு 200 ஆண்டுகளுக்குள். யூனியன் ஜாக் கொடி உயர்த்தப்பட்டதற்குபின்னே. பிரிட்டிஷ் காரன் வந்ததற்குப்பின்னே. அவன் லத்திக் கம்பும் துப்பாக்கியும், பல்வேறு நாடுகளாக சிதறிக்கிடந்த பூபாகத்தை ஒன்றாக இணைத்ததற்குப்பின்னே வந்த உறவு. இன்றைக்கு ஏற்றுக் கொள்கிறோம் இந்திய ஒருமைப்பாட்டை.

இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்திருக் கிறோம். இறையாண்மையில் நம்பிக்கை வைத்து இருக்கிறோம். உறுதிமொழி எடுத்து இருக்கிறோம் நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இந்த உறவு நூறு ஆண்டுகளுக்குள் வந்த உறவு ஆனால், ஈழத்தில் இருக்கிற எங்கள் தமிழ் ஈழ உறவு தொப்பூள்கொடி உறவு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய உறவு. கரிகாலனுக்கு முந்தைய உறவு. தொல்காப்பியனுக்கு முந்தைய உறவு. அந்த உறவை நாங்கள் இழந்துவிட முடியாது.

ஆயுதங்கள் அனுப்பினாய் - பணம் கொடுத்தாய் - வட்டியில்லாக் கடன் கொடுத்தாய் - இந்திய இலங்கை கடற்படை தகவல் கூட்டு ஒப்பந்தம் போட்டாய் - விடுதலைப் புலிகளுக்கு வந்த கப்பல்களை கடலில் மூழ்கடித்தாய் - இவ்வளவும் செய்துவிட்டு ஆயுதங்கள் கொடுத்தாயே - ராடார்கள் கொடுக்கவில்லை என்று இப்பொழுது சொல் கிறார்கள். இங்கே வாசித்தாரே ஜெயசூர்யா என்பவனின் கட்டுரையை, இலங்கை இராணுவ இணையதளத்தில் வந்த கட்டுரையை,

நீ கொடுத்த ராடர்களை, இயக்குவதற்கு சிந்தாமணி ரவுத், ஏ.கே.தாகூர் என்று இரண்டு இந்தியர்கள் அவர்கள் போரின்போது காயப்பட்டார்கள். அப்ப நீ இங்கே இருந்து ஆயுதம் அனுப்புவாய் - நிபுணர்களை அனுப்புவாய் - துப்பு கொடுப்பாய் - சாட்டிலைட் காமிராவில் அவர்களது நடமாட்டங்களைத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டுவாய் - இந்த யுத்தத்தை இந்திய அரசுதான் நடத்தியது.

ஆகவேதான், சோனியா காந்தி அம்மையார் என்ன திட்டம் போட்டார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கருணாநிதியின் மதுரத் தமிழால் தமிழ்மக்களை வசப்படுத்திக் கொள்வார் அவர் பேச்சில் வல்லவர். இனியதமிழில் - திகட்டாத தமிழில் - தித்திக்கும் தமிழில் பேசுவதில் வல்லவர் எழுதுவதில் வல்லவர் பக்கம் பக்கமாக வர்ணிப்பதில் வல்லவர் அப்படிப்பட்ட மயக்குமொழியில் முரசொலியில் மட்டுமல்ல அனைத்துப் பத்திரிகை களிலும் எட்டுகாலங்கள் அவருடைய கடிதங்கள், முக்கியத் தொலைக் காட்சிகள் எல்லாம் அவர் குடும்ப ஊடகங்கள் அது கோடிக்கணக்கான மக்களைப் போய்ச் சேர்கின்றன.

தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படுகிறது 14 பேர் தீக்குளித்தைச் சொன்னேனே ஒருவருக்குக்கூட இன்றைய முதலமைச்சர் இரங்கல் தெரிவிக்கவில்லை. ஆனால், இவ்வளவு செய்துவிட்டு ஈழத்தமிழர் களுக்கான ஆதரவு உணர்ச்சி இங்கே எழுந்து விடக் கூடாது என்று அந்த உணர்வை தனக்கு அரசியல் ரீதியாக சாதகமாக்கப் பார்த்தார். உண்ணாவிரதம் இருந்தார் - சட்டமன்றத்தில் தீர்மானம் என்றார் - ராஜினாமா என்றார் - 1956 ஆம் ஆண்டில் இருந்து அவருடைய போராட்டங்களை வர்ணித்தார் - அங்கு மக்கள்படுகிற துன்பத்தை துயரத்தை அவருக்கே உரிய ஆற்றலோடு எழுதினார். ஆக கலைஞரே கவலைப்படுகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி னார்.

ஒருபக்கத்தில் ஆயுதங்களைத் தந்து கொண்டே இருந்தது தில்லி அரசு. தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். தமிழகத்தில் எதிர்ப்பு உணர்வு வேகமாக வந்துவிடக்கூடாது என்று தடுக்கின்ற வேலையில் கருணாநிதி அவர்கள் ஈடுபட்டார்கள். மத்திய அரசின் கொள்கைதான் என்னுடைய கொள்கை என்றார். இன்னொரு நாட்டில் இதற்குமேலே தலையிட முடியாது என்றார்.

ஆனால், இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்களே, 1,45,000 மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். எங்கே நடக்கும் இந்த இனக் கொலை? இன்றைக்கு உலகில் பலதேசங்கள் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த துயரத்தைத் தடுப்பதற்கு குரல் கொடுக்கிறபோது இந்தியா இலங்கையோடு சேர்ந்து ஓட்டுப் போட்டது. இன்றுமட்டுமல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுவிட்சர்லாந்து நாடும், நியூசிலாந்தும் ஐ.நா. பொதுமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அந்தத் தீர் மானத்தை இந்தியா தோற்கடித்தது. தோற்கடிப் பதற்கு முழுமூச்சாக வேலை செய்தது.

ஆகவே, உலக அரங்கத்தில் நியாயமாக எழுகின்ற உணர்வுகளைப் பார்க்கிறோம். யார் அந்த பாரக் ஒபாமா? அவருக்கும் தமிழருக்கும் என்ன தொப்பூள் கொடி உறவு? யார் அந்த கார்டன் பிரௌன் இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் அவருக்கும் தமிழனுக்கும் என்ன உறவு? யுத்தத்தை நிறுத்து என்று அவர்கள் சொன்னார்கள். நெல்சன் மண்டேலா அவருக்கும் தமிழருக்கும் என்ன உறவு? யுத்தத்தை நிறுத்து என்றார். ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் சொன்னது. தென்னாப்பிரிக்கா சொன்னது. ஆனால், ஏன் மன்மோகன் சிங் கடைசிவரை யுத்தத்தை நிறுத்தச் சொல்லவில்லை?

கடைசி நிமிடம் வரை சோனியா காந்தி இந்தியாவில் எந்தக் கூட்டத்திலாவது ஈழத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என்று ஒருவார்த்தை உச்சரித்தாரா? தமிழர்களே இதை நீங்கள் யோசிக்கவேண்டும். இன்றைக்கு இந்திய அரசை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிற சோனியாகாந்தி ஈழத் தமிழர்களைப் பற்றி எங்காவது ஒரு இடத்தில் ஒரு கூட்டத்தில் பேசினாரா? பச்சிளம் குழந்தைகளும், தாய்மார்களும் கொல்லப்பட்டார்களே, உணவும் மருந்தும் இன்றி செத்தார்களே, அதுபற்றி எங்காவது சொன்னாரா? எங்கே நடந்தது இந்தக் கொடுமை?

அமெரிக்க ஜனாதிபதி ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய சித்ரவதைக் கூடத்தைப் பார்த்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றுகிறார். அதுமட்டுமல்ல, அதற்கு முதல்நாள் கெய்ரோவில் பேசுகிறார். நைல் நதிக்கரையில் - பிரமிடுகள் உயர்ந்து இருக்கிற எகிப்து நாட்டுத் தலைநகரில் அங்கே உள்ள பல்கலைக் கழகத்தில் பேசுகிறார். பேசுகிறபோது என்ன சொல்கிறார்? இதைக்கவனிக்க வேண்டும் தமிழர்கள்.

அமெரிக்க நாட்டில் இருக்கிற யூதச் செல்வந்தர்களின் தயவு இருந்தால்தான் அங்கே அரசியலை ஜாக்கிரதையாக நடத்தமுடியும். ஆனால், அங்கே சென்று பேசுகிறார். யூதர்களுக்கும் ஒரு தனிநாடு பாலஸ்தீனியர்களுக்கும் ஒரு தனி நாடு இந்த இரண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று பேசினார். அதோடு நிறுத்தவில்லை.

பாலஸ்தீனியர்களின் பகுதி என்று கருதப்படுகிற இடத்தில் யூதக்குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். யூதக்குடியேற்றங்கள் பாலஸ்தீன மண்ணில் இடம்பெறக் கூடாது என்று பாரக் ஒபாமா சொல்கிறார். பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். இரண்டு தேசங்கள். இரண்டு நாடுகள். அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் தமிழ் ஈழத்துக்கு உண்டே; படித்தவர்களே யோசியுங்கள். தொலைவில் இருந்து கேட்டுக் கொண்டு இருப்பவர்களே யோசியுங்கள்.

பாலஸ்தீனியர்களுக்கும் யூதர்களுக்கும் இருக்கிற பிரச்சனை 4000 ஆண்டுகளாக சிக்கலில் இருக்கிற பிரச்சனை. நான் பாலஸ்தீனியர்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பவன். அராபாத் நடத்திய போராட்டங்களை அன்றுமுதல் ஆதரிப்பவர்கள் நாங்கள். இன்றும் பாலஸ்தீனியர்களுக்கு தனிதேசம் வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிப்பவர்கள். ஆனால், பிரச்சனையின் சிக்கல் முடிச்சு எங்கே அவிழ்க்கபட வேண்டும் என்று சொன்னால் 4000 ஆண்டுகளாக அந்தப் பிரச்சனை இருக்கிறது.

யாருக்குச் சொந்த பூமி? யாருடைய பூர்வீக பூமி என்று. அந்தச் சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்ப வில்லை. ஆனால், இங்கே சர்ச்சைக்கே இடம் இல்லையே? வல்வெட்டித்துறையும் - யாழ்ப்பாண மும் தமிழர்களின் பூர்வீக பூமி. வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பூர்வீகப் பூமி. 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி அன்றைய இந்தியப் பிரதமர் ஈழத்தமிழர்களுக்கு வாழ்வுகொடுக்க வேண்டும் என்று துடித்த இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் சொன்னார்கள் ‘வடக்கிலும் கிழக்கிலும் வாழுகிற தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள். சிங்களவர்கள் அல்ல. தமிழர்கள் பூர்வீகக்குடிமக்கள்’, என்றார்.

அந்த பூர்வீகக் குடிமக்கள் அவர்களுக்கு என்று தனிதேசம் அமைத்து வாழ்ந்தவர்கள். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அரசு அமைத்து வாழ்ந்த வர்கள். பாலஸ்தீனிய யூத பிரச்சனையில் இந்த உண்மை களை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால், தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரசு அமைந்து வாழ்ந்தவர்கள். ஒல்லந்தர் வருவதற்கு முன்பு - போர்ச்சுகீசியர் வருவதற்கு முன்பு - பிரித்தானியர் வருவதற்கு முன்பு - அரசு அமைத்து கொற்றம் நடத்தி வாழ்ந்தவர்கள்.

(தொடரும்)

Pin It