தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவருமான தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் 05.07.24 அன்று இரவு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்கின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது.
தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இட ஒதுக்கீட்டு உரிமை குறித்து தெளிவான பார்வைக் கொண்டவர். அவரிடம் நெருங்கி பழகும் பொழுது தான் அவருடைய ஆழ்ந்த சிந்தனைகளை அறிய முடிந்தது.
சமூகம் குறித்தான பெரிய அக்கறையையும் இந்த சமூகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த தெளிவும் சமூக சிக்கல்களை தீர்க்கும் பேரார்வம் கொண்டவராகவும் அவர் இருந்தார்.
தோழரின் இழப்பு அவரது கட்சிக்கான இழப்பாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கான ஒரு இழப்பாகவே நாம் பார்க்கிறோம்.
கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக தன்னை ஜாதி ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிய தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்கள், நண்பர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
***
‘அறிவுஜீவி ஆம்ஸ்ட்ராங்’
பெரும் மதிப்பிற்குரிய பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அவர் வளர்ந்து வரும் இளம் தலைவர் ஆவார். நம்முடைய பார்வையில் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஒரு ‘அறிவு ஜீவி’ அவர் பவுத்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், அம்பேத்கரியத்தை முழுமையாக கற்றறிந்து அதில் கரைதேர்ந்தவர் ஆவார். அம்பேத்கர் எந்த அத்தியாயத்தில் என்ன பேசியிருக்கிறார் என்பதை நினைவில் வைத்து பேசக்கூடிய அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர் தோழர் ஆம்ஸ்ட்ராங்.
அவர் ஒரு அரசியல் கட்சியில் இருந்தாலும், ஒரு போதும் அரசியல் முரண்களில் சிக்கிக்கொள்ளவில்லை. தன்னுடைய கட்சித் தோழர்களை அம்பேத்கரிய சிந்தனையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் முழு ஈடுபாடுக் கொண்டு பணியாற்றியவர் தோழர் ஆம்ஸ்ட்ராங். அவர் பொதுக்கூட்டங்களை விட அதிகளவில் பயிற்சி வகுப்புகளைத் தான் நடத்துவார்.
மேலும் தோழர் ஆம்ஸ்ட்ராங், திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு மிகவும் நெருக்கமானவராகத்தான் இருந்து வந்தார். குறிப்பாக திராவிடர் விடுதலைக் கழக கருத்தரங்குகளை நடத்துவதற்கு பெரம்பூரில் தனது கட்சி அலுவலகத்தில் உள்ள ஒரு அரங்கை கட்டணம் ஏதும் பெறாமல் வழங்கினார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் உண்டு. உங்கள் இயக்கம் ஜாதி ஒழிப்புப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது என்பதை நான் அறிவேன். எனவே எங்களது அலுவலகத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சுதந்தரமான உரிமையை நமக்கு வழங்கினார்.
இளம் வயதில் பல வழக்கறிஞர்களை அம்பேத்கரிய, பௌத்த வழியில் உருவாக்கியவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள். இயக்கத் தோழர்களை கருத்தியல்ரீதியாக உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயல்பட்டுவந்த இளம் தலித் தலைவர் ஒருவரை தமிழ்நாடு இன்றைக்கு இழந்து நிற்கிறது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.
தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்துவாடும் அவரது குடும்பம் மற்றும் கட்சித் தோழர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்
***
நேரில் மரியாதை
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலுக்கு கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..
இதில் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.