கடந்த 08.7.23 அன்று சாதி மறுப்பு இணையர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் கீழ்ப்பாக்கம் டான் போஸ்கோ கலைக் கல்லூரி வளாகத்தில் சாதி ஆணவக்கொலை- குற்றங்களைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்றக்கோரியும், சாதி மறுப்பு இணையர்களுக்கான வாழ்வாதார கோரிக்கையாக 11 அம்ச கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவும் அரசாணை பிறப்பிக்கவும் வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு, திராவிடர் விடுதலைக்கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் வரவேற்புரையாற்றினார். சாதி ஆணவத்தால் கொல்லப்பட்ட காதலர்கள், இணையர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கருத்தரங்கத்திற்கு மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த பேரா.சரசுவதி தலைமை வகித்தார். சாதி ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் வ.ரமணி, கோரிக்கையின் முக்கியத்துவதை விளக்கி நோக்கவுரையாற்றினார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி உரையாற்றுகையில் சாதி ஆணவக்கொலைகள் தடுக்கப்படவேண்டும். அதற்காக திராவிட ஆட்சியில் முயற்சிகள் நடக்கிறது. மகளிர் ஆணையம் இதில் தீவிரமாக பங்கெடுக்கும் என்றார். அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், “சாதி மறுப்பு இணையர் வாழ்வுரிமைக் கருத்தரங்கத்தில் நான் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அதேசமயம் சாதி ஆணவக்கொலைகளை பார்க்கும் போது வேதனையாகவும் இருக்கிறது. சாதி ஆணவக்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். “சாதி என்பதே ஒரு பொய். நமது முன்னோர்கள் சாதியில்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். இடையில் வந்தது தான் சாதி. இதைத்தான் நாம் இன்றைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும். முந்தைய தலைமுறை அவ்வாறு இல்லை ஆனால் இன்றை தலைமுறை இளைஞர்கள் மத்தியில் சாதி அடையாளப்படுத்தப்படுகிறது. அதனை சரி என்று பேசும் நிலை உருவாகியிருப்பது வேதனைக்குரியது. சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும். இதனை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நடந்து கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 50,000 ஊக்கத் தொகையும், 5 கிராமம் தங்கக் காசும் அறிவித்தார். சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரித்திட வேண்டும். நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு நான் உறுதுணையாக இருப்பேன். அதனை வலியுறுத்துவேன்“ என்றார்.
வழக்கறிஞர் ப.பா.மோகன், பேசுகையில் கோகுல்ராஜ் ஆணவக்கொலைக் குற்றம் குறித்த வழக்கின் பின்புலத்தை மார்க்சிய அரசியல் பார்வையோடு முன்வைத்தார். அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் ஆலோசகர் ஆர்.கீதா, பேராசிரியர் அரங்க மல்லிகா, வழக்கறிஞர் அஜிதா, எழுத்தாளர் ரகுபதி சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் சாதி மறுப்பு இணையர்கள் திரளாக கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களையும் திருமணப் பதிவின் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் சந்தித்த நெருக்கடிகளையும் பகிர்ந்துகொண்டனர். சாதி மறுப்பு இணையர்களுக்கு ஏ.எஸ். குமரி அவர்கள் நினைவுப்பரிசாக நூல்களை வழங்கினார். அறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமண நிலையத்தின் அமைப்பாளர் ரமேஷ் பெரியார் நன்றியுரையாற்றினார்.
கருத்தரங்கத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்ட சாதி மறுப்பு இணையர் வாழ்வுரிமைக்கான கோரிக்கைகள்
1. 2019ல் இராஜஸ்தான் மாநில காங்கிரசு அரசு ஆணவக்கொலையை தடுத்திட சட்டம் இயற்றியதுபோல், தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவக்கொலை – குற்றங்களைத் தடுத்திட தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
2. சாதி மறுப்பு இணையர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யும்போது ”பெற்றோர்கள் வர வேண்டும்” எனக் கட்டாயப்படுத்தவோ நிபந்தனையோ விதிக்கக் கூடாது” இந்த விதிமுறையை கடைபிடிக்காமல் சாதி ரீதியாக அணுகும் பதிவுத்துறை அதிகாரிகள் மீது SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திட வேண்டும்.
3. பதிவுத்திருமணச் சட்டம் பிரிவு 7ல் சுட்டிக்காட்டியுள்ள “சார்பதிவாளரின் மனம் திருப்தியடைந்தால்” மட்டுமே திருமணப் பதிவிற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்.
4. மாவட்டந்தோறும் திருமணங்கள் பதிவு செய்திட மட்டுமே தனி திருமணப் பதிவாளரை நியமிக்க வேண்டும்.
5. காதல் திருமண இணையர்கள் திருமணத்தைப் பதிவு செய்வதற்கு மணமகன்/மணமகள் எல்லையில் இருப்பிட முகவரிக்கு உட்பட்டு உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற விதிமுறையை நீக்க வேண்டும். “தமிழகம் முழுவதும் இணையர்கள் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துகொள்ள அரசாணை/ சுற்றறிக்கைவிட வேண்டும்“
6. டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நினைவு ‘கலப்புத்திருமண’ உதவித்திட்டம் என்ற பெயரை – டாக்டர் முத்துலட்சுமி நினைவு ‘சாதி மறுப்புத்’ திருமண உதவித்திட்டம் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.
7. சாதி மத மறுப்பு இணையர்களுக்கு தனி கவனம் செலுத்தி மாவட்டந்தோறும் பாதுகாப்பு இல்லங்கள், குடியிருப்பு, அரசு வேலை, வீடுமனைப் பட்டா வழங்கிட அரசாணை பிறப்பிக்க வேண்டும். சாதி, மத மறுப்பு இணையர்களுக்கு தமிழக அரசு 5% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
8. 2016ல் உசிலம்பட்டி விமலாதேவி ஆணவக் கொலை வழக்கில் நீதிபதி ராமசுப்ரமணியன் அவர்கள் வழங்கிய தீர்ப்பை மாவட்டந்தோறும் செயலாக்க வேண்டும்.
9. சாதி மறுப்பு, காதல் மணம் செய்துகொள்ளும் மணமகன்மீது மணமகளின் வயதைக் குறைத்துக்காட்டி, வழக்குகள் பதியப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறைப்படுத்தப்படுவதும் நெடுநாள் சிறையில் இருப்பதுமான சம்பவங்கள் பரவலாக நடக்கின்றன. அவ்வாறு பிழையாக வயதைக் குறைத்து புகார் கொடுத்ததாக பின் நாட்களில் தெரியவந்தால் புகார் கொடுத்தவர், மணமக்களின் பெற்றோர்கள்மீது வழக்குப்பதிவு செய்யவும் சிறைப்படுத்தவும் உரிய சட்ட விதிகள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.
10. சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இணையர்களுக்கு எதிராக போக்சோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வழக்கு பதிவு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
11. சாதி ஒழிப்புக் கருத்தியலை வளர்க்கும் விதமாக தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளில், தொலைக்காட்சிகளில், செய்தித்தாள்களில் சமத்துவ சுயமரியாதை பகுத்தறிவு சிந்தனையை பரப்பிட வேண்டும். அத்தோடு தொலைபேசி, இணையவழியாக குறுஞ்செய்திகள், விளம்பரங்களை அறிவிப்பு செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சாதி மறுப்பு இணையர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம், சாதி ஒழிப்பு முன்னணி, மக்கள் சிவில் உரிமைக் கழகம் உள்ளிட்ட 23 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
- வ.ரமணி, ஒருங்கிணைப்பாளர், சாதி மறுப்பு இணையர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு