எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 19.7.2015 காலை 11 மணியளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்தது. கழகத் தோழர் கிணத்துக்கடவு நிர்மல் குமார், கடவுள், ஆன்மா மறுப்பு கூற, மாவட்டக் கழக சார்பில் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்த பரமசிவம் வரவேற்புரையாற்றினார்.

சென்னை மாவட்டக் கழகத் தோழர் சரவணன், நெல்லை மாவட்டத் தலைவர் குறும்பலபேரி சு. வடிவேலு (3.11.2014), தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் க.மதன் (16.4.2015), மதுரை கைவண்டி கருப்பு, கழக ஓவியர் மேட்டூர் சாதகப் பறவை சேகர், கரூர் இராஜா ஆகியோர் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், செயலவை முன் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள், கழக செயல் பாடுகளை விளக்கி தொடக்க உரையாற்றினார். பின்னர், மாவட்ட வாரியாக தோழர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஈரோடு வடக்கு - நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு - சண்முகபிரியன், சேலம் கிழக்கு - பரமசிவன், சேலம் மேற்கு - கோவிந்தராஜன், விழுப்புரம் - நாவாப்பிள்ளை, பொள்ளாச்சி - நிர்மல்குமார், மதுரை - பாண்டியன், தென் சென்னை - வேழவேந்தன், தஞ்சை - பாரி, காஞ்சிபுரம் - தெள்ளமுது, திருப்பூர் - முகில்ராசு, தூத்துக்குடி - பொறிஞர் சி.அம்புரோசு, கிருட்டிணகிரி - குமார், கோவை - நேருதாஸ், நாகை - மகேஷ், நாமக்கல் - சக்திவேல், கரூர் - முகமது அலி (எ) பாபு, திருவாரூர் - காளிதாசு, கடலூர் - பாரதிதாசன், விருதுநகர் - கணேசமூர்த்தி, சிவகங்கை - பெரியார் முத்து, தர்மபுரி - வையாபுரி, வடசென்னை - யேசு.

மாவட்ட பொறுப்பாளர்களைத் தவிர கருத்துகளை முன் வைத்த தோழர்கள்: நிவாஸ்-கோபி செட்டிபாளையம், முகில்ராசுதிருப்பூர், பரிமளராசன்-முகநூல் குறித்து விளக்கினார். விஜயக்குமார்-இளையதளம் குறித்து விளக்கினார்.

மதியம் அனைவருக்கும் மாவட்டக் கழகம் சிறப்பாக உணவு ஏற்பாடு செய்திருந்தது. 3.30 மணியளவில் மீண்டும் செயலவை தொடங்கியது.

மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழு கோவிந்த ராஜ், பாடல்கள் பாடினார். தொடர்ந்து, தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஈரோடு வெங்கட், தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ஆசிரியர் சிவகாமி, சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் சார்பில் கொளத்தூர் குமார் உரையாற்றினர். அதைத் தொடாந்து கருத்துகளை முன் வைத்து தலைமைக் குழு உறுப்பினர்கள் பேசினர்.

பேசியோர்: அய்யனார், சக்திவேல், இளையராசா, அன்பு தனசேகரன், கோபி இளங்கோ, துரைசாமி, தபசி குமரன், இரத்தினசாமி, பால். பிரபாகரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன் மொழிந்து, தீர்மானங்களை விளக்கியும் பரப்புரைத்திட்டம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டை மேலும் பரப்புதல், அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விரிவாகப் பேசி, மாநிலப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நாகராஜ் நன்றி கூற, 7 மணியளவில் செயலவைக் கூட்டம் நிறைவடைந்தது.

காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள்

தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, ஜாதிவெறி சங்கங்கள் இதைத் தூண்டிவிட்டு, நியாயப்படுத்தியும் வருகின்றன. நடுவண் ஆட்சி, இந்த ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் ஒன்றை இயற்றிட - மாநில அரசுகளிடம் கருத்துகள் கேட்டுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இது குறித்து ஏதும் கருத்து கூறாது அலட்சியம் காட்டுகிறது. தமிழ்நாடு அரசே, ஒரு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை.

அண்மையில் கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரி, தலை துண்டிக்கப்பட்டு ஜாதி ஆணவக் கொலைக்கு பலியாகியுள்ளார். இந்தக் கொலையில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான யுவராஜ் என்பவர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், அவர் தலைமறைவாக இருந்துகொண்டு, தனது குற்றச் செயலை நியாயப்படுத்தி காவல்துறைக்கு சவால்விட்டு பேசியது, ‘வாட்ஸ் அப்’ வழியாக பரப்பப்பட்டு வருகிறது. ஜாதி ஆணவக் கொலைகளில் காவல்துறையின் இந்த அலட்சியத்துக்குக் காரணம், அதில் ஊடுருவி நிற்கும் ஜாதிய மனநிலைதான் என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறோம். எனவேதான் ஒரு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியாக அந்த மாவட்டத்தில் ஆதிக்கஜாதியாக உள்ள பிரிவைச் சார்ந்தவர்களையே நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் சமூக ஒற்றுமைக்கும் - சமத்துவத்துக்கும் பெரும் சவாலாக உருவாகிவரும் - இந்த ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், தமிழகம் ஜாதி வெறிக் களமாக மாறிடும் ஆபத்தை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

இந்தப் படுகொலைகள் குறித்து, தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் கண்டனங்களைத் தெரிவிக்காமல் ‘பாராமுகம்’ காட்டுவது கவலை அளிக்கிறது. இந்தக் கட்சிகள் தங்கள் மவுனத்தைக் கலைத்து, ஜாதி வெறிக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வற்புறுத்துகிறது.

- செயலவைத் தீர்மானம்

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்! மீண்டும் தொடங்குகிறது, பரப்புரை இயக்கம்!

தர்மபுரி செயலவையில் ஜாதி எதிர்ப்பு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை வலியுறுத்தி பரப்புரை இயக்கத்தைத் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. தீர்மான விவரம்:

தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. அவர்களின் வேலை வாய்ப்புகள், அரசுத்துறைகளில் வெகுவாகக் குறைந்து விட்டன. தாராளமயக் கொள்கையால் பெருகிவரும் பெரும் தொழில் நிறுவனங்களில் இவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் சட்டங்கள் வர வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த கால அய்க்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சி, அதன் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் ஏற்றுக் கொண்டிருந்தாலும் செயல்படுத்தாமல் புறந்தள்ளிவிட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுதான் நிலம் வழங்குகிறது. தண்ணீர், மின்சாரம் இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த விலையிலோ வழங்கப்படுகின்றன.

பங்கு மூலதனங்கள் வழியாக மக்கள் பணம் மூலதனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்றுவதற்கு முழுமையான அதிகாரமும் நியாயமும் இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அந்நாட்டில் கருப்பர் உள்ளிட்ட மைனாரிட்டி மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்கு சட்டம் இயற்றப்பட்டு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழ்நாட்டில், ஜாதி சங்கங்களை நடத்தும் ஜாதித் தலைவர்கள், ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, கலவரத்தை நடத்தவும், ஜாதி ஆணவக் கொலைகளை நடத்தி, தங்களுக்குக் கீழே ஜாதிக்காரர்களை அணிதிரட்டி, தங்களின்அரசியல் சுயநலன்களுக்குப் பயன்படுத்தவும் துடிக்கிறார்களே தவிர, இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளுக்கோ, எதிர்கால சமுதாய நலனுக்கோ குரல் கொடுப்பது இல்லை.

இந்த நிலையில் சமுதாயத்தில் சமத்துவத்தை சீர்குலைத்து, மோதல்களை உருவாக்கிடும் ஜாதியத்துக்கு துணை போகாமல், அதிலிருந்து வெளியேறி, தங்களின் எதிர்கால வாழ்வுரிமைக்கும், ஜாதி எதிர்ப்புக்கும் போராட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று திராவிடர் விடுதலைக்கழகம் அறைகூவி அழைக்கிறது. இந்த நோக்கத்தை முன் வைத்து,

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்;

எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்!

முழக்கத்தை முன் வைத்து, ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் தமிழகம் முழுதும் பரப்புரை இயக்கங்களை நடத்துவது என்று இந்த செயலவை முடிவு செய்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டு, இந்தப் பரப்புரை இயக்கத்தை நடத்துவது என்றும் செயலவை தீர்மானிக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக!

மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ள நடுவண் அரசு- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது. இந்த உண்மைகள் வெளியே வந்தால் பார்ப்பன உயர்ஜாதி - ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி நிற்கும் உண்மை அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைகள் வெளிவரும் போதுதான் அவர்களுக்கு சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வற்புறுத்துகிறது.

- செயலவைத் தீர்மானம்

தலைவர்-பொதுச்செயலாளர் பங்கேற்கும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

மாவட்டந்தோறும் கீழ்க்கண்ட திட்டப்படி கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர் பங்கேற்கும், கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த கழக செயலவை தீர்மானித்தது.

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை மாவட்ட வாரியாக கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், மாவட்டக் கழகக் கூட்டங்கள் வழியாக நேரில் சந்தித்து கழக அமைப்புகளை மேலும் முனைப்பாக நடத்திடவும் அமைப்புகளை மாற்றி அமைக்கவும், கீழ்க்கண்ட சுற்றுப்பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு இரண்டு மாவட்டக் கூட்டங்கள் நடக்கும். முதல் கூட்டம் முற்பகல் 10 மணிக்கும், இரண்டாவது கூட்டம் பிற்பகல் 4 மணிக்கும் கீழ்க்கண்ட வரிசையில் தொடங்கும்.

ஜூலை 29 - ஈரோடு (தெற்கு ) - ஈரோடு ( வடக்கு ); ஜூலை 30 - திருப்பூர் - கோவை; ஜூலை 31 - பொள்ளாச்சி - திண்டுக்கல்;

ஆகஸ்டு 5 - சேலம் ( மேற்கு ) - சேலம் ( கிழக்கு ); ஆகஸ்டு 6 - நாமக்கல் - கரூர்; ஆகஸ்டு 7 - பெரம்பலூர் - திருச்சி; ஆகஸ்டு 12 - திருவாரூர் - தஞ்சாவூர்; ஆகஸ்டு 13 - நாகை - கடலூர்; ஆகஸ்டு 14 - விழுப்புரம்- திருவண்ணாமலை; ஆகஸ்டு 18 - புதுக்கோட்டை - சிவகங்கை; ஆகஸ்டு 19 - மதுரை - தேனி; ஆகஸ்டு 20 – விருதுநகர் - தூத்துக்குடி; ஆகஸ்டு 21 - திருநெல்வேலி - கன்னியாகுமரி; ஆகஸ்டு 29 – தருமபுரி - கிருட்டிணகிரி; ஆகஸ்டு 30 - வேலூர் - காஞ்சிபுரம்; ஆகஸ்டு 31 - சென்னை.

பெருகி வரும் குடி நோயாளிகளைக் கட்டுப்படுத்த...

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில், ‘மதுக்குடி’ தனிப்பட்ட சிலரின் பழக்கமாக இருந்த நிலை மாறி, இன்று சமூகத்தையே சீர்குலைத்து வருகிறது. மாணவர்களையும் இளைஞர்களையும் போதை அடிமைகளாகவும் குடிநோயாளிகளாகவும் மாற்றி வருவது ஆபத்தான அறிகுறியாகும். மதுக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், விற்பனைக்கு கூடுதலாக இலக்கை நிர்ணயிப்பதும் ஒரு மக்கள் நலன் பேணும் ஆட்சிக்கான செயல் திட்டமாக இருக்க முடியாது.

அதே நேரத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதிலும் பல ஆபத்துகள் இருக்கவே செய்கின்றன. கள்ளச் சாராயம் வர்த்தமாகி, காவல்துறைகள்ளச் சாராய வியாபாரிகள் இரகசிய கூட்டு உருவாகி, மேலும் பல சமூக-சட்ட ஒழுங்கு நெருக்கடிகளை உருவாக்கிவிடும். போதைக்காக ஆபத்தான இரசாயனங்களைக் குடிப்பது, மனநிலையைப் பாதிப்படையச் செய்யும் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற ஆபத்தான பழக்கங்களுக்கு வழிவகுத்து விடும். எனவே, குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய செயல் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மது விற்பனைக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் விற்பனை நேரத்தை பாதியளவுக்கு குறைப்பது, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் மதுக் கடைகளை திறக்காமல் இருப்பது; சிறுவர்களுக்கு மது விற்காமல், கண்டிப்புடன் கண்காணிப்பது போன்ற கட்டுப்பாடுகளை தமிழகஅரசு கொண்டு வரவேண்டும். மதுவின் ஆபத்துகளை விளக்கி, புகை எதிர்ப்புப் பிரச்சாரம்போல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

- தர்மபுரி செயலவை தீர்மானம்

20 தமிழர் படுகொலை வழக்கு - தமிழக அரசுக்கு கோரிக்கை

தர்மபுரி செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

செம்மரக் கடத்தல் தொடர்பாக - ஆந்திர காவல்துறை 20 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து சுட்டுக் கொன்ற வழக்கை, மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.அய்.) விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் செய்த பரிந்துரைக்கு ஆந்திர காவல்துறை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டது. வழக்கு விசாரணை முடங்கிப்போய் நிற்கும் நிலையில், தடையை நீக்குவதற்கும், படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2000 அப்பாவித் தமிழர்களுக்கும் நீதி கிடைப்பதற்கும் தமிழக அரசு, அலட்சியம் காட்டாமல், இந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு கடமையாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

கையெழுத்து இயக்கம் தீவிரமாகட்டும்

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு இழைத்த இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் உள்ளிட்டு உலகம் முழுதும் வாழும் தமிழர்களால், மனித உரிமை அமைப்புகளால் வலியுறுத்தப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம், அய்.நா. மனித உரிமை அவையில் இது குறித்த விவாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் நீண்ட நெடுங்காலமாக போர்க்குற்றத்துக்கு உள்ளாகி வரம் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் அய்.நா. தீர்மானத்தின்போது இந்தியா வாக்கெடுப்பைப் புறக்கணித்து, பாலஸ்தீனர் களுக்கு துரோகம் செய்துள்ளது. அதே துரோகத்தை ஈழத் தமிழர் பிரச்சினையில் மேற்கொள்ளக் கூடாது என்று இந்திய அரசை வற்புறுத்துகிறோம்.

அய்.நா. சர்வதேச விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகத்தில் நடக்கும் கையெழுத்து இயக்கங்களை கழகத் தோழர்கள் தீவிரப்படுத்திட இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

மாநில கழகப் பொறுப்பாளர்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு கீழ்க்கண்ட மாநிலப் பொறுப்பாளர்களை தர்மபுரியில் நடந்த செயலவைக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களின் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

ஈரோடு இரத்தினசாமி - அமைப்புச் செயலாளர்

திருப்பூர் துரைசாமி – பொருளாளர்

பால். பிரபாகரன் - பரப்புரை செயலாளர்

கோபி. இராம. இளங்கோவன் - வெளியீட்டுச் செயலாளர்

தபசி. குமரன் - தலைமைக் கழகச் செயலாளர்

பெரியார் பெரும் தொண்டர் சாதசிவம் நெகிழ்ச்சி உரை

தர்மபுரியில் கழக செயலவையில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சதாசிவம், தடியூன்றிய நிலையிலும் தளரா கொள்கை உறுதியோடு பேசியது அனைவரையும் நெகிழச் செய்தது. ஏற்கெனவே பரப்புரைக்கான அனைத்துச் சாதனங்களையும் கொண்ட வாகனம் ஒன்றை கழகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். அந்த வாகனம் மேட்டூர் கழகத்தால் பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் கொள்கைகளை பரப்புவதில் உண்மையாகவும் உறுதியாகவும் செயல்படுகிறது என்று உளம்திறந்து பாராட்டிய அவர், தனது சொத்துக்களை பொதுச் சொத்தாக்க தாம் முடிவு செய்து விட்டதாகவும் திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு அது பயன்படவேண்டும் என்ற நோக்கத்தோடு அதற்கான ஆவணங்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கியுள்ளதாகவும், அவர் அறிவித்த போது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. கழகத்தின் பரப்புரைக்காக மற்றொரு வாகனத்தையும் வழங்கத் தயாராக இருப்பதாக கூறிய அவர், பெரியார் கொள்கைகள் ஆண்டு முழுதும் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று கூறிய போது, இந்த வயதிலும் ஒரு பெரியார் தொண்டரின் கொள்கை உறுதியைக் கண்டு தோழர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

சதாசிவம் அவர்கள் அறிவிப்பு குறித்து, பின்னர் பேசிய கழகச் செயலவை உறுப்பினர் இரத்தினசாமி, பெரியார் பெருந்தொண்டர் தனது மரணத்துக்குப் பிறகு தனது உடைமைகளை கழகத்துக்கு வழங்குவதாக அறிவித்தாலும் அவர் நீண்ட காலம் வாழ்வார். இளைஞரைப் போன்ற அவரது கொள்கைத் துடிப்பும் ஆர்வமும் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கும் என்று குறிப்பிட்டார்.

Pin It