குஜராத் சட்டப் பேரவைத் தலைவரின் திமிர் பேச்சு
குஜராத் சட்டப் பேரவைத் தலைவரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான இராஜேந்திர திரிவேதி எனும் பார்ப்பனர், ‘பிராமணர்களின் மரபணு, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது” என்று பேசியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கும் உரிமை ‘பிராமணருக்கு’ மட்டுமே உண்டு என்றும், அது பிராமணர்களின் பிறப்புரிமை என்றும் பேசி இருக்கிறார். குஜராத் காந்தி நகரில் ‘பிராமண வணிக சம்மேளனம்’ நடத்திய மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற ஒன்பது பேரில் 8 பேர் ‘பிராமணர்கள்’ என்றும் பெருமையுடன் பேசினார்.
தலித் மக்களின் அடையாளமாகவும், அரசியல் சட்ட வரைவுக் குழு தலைவராகவும் இருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு அத்தகைய வாய்ப்புகளை வழங்கியதே ஒரு ‘பிராமணர்’ தான். அவர்தான் அம்பேத்கருக்குப் பின்புலமாக நின்று, அவரை உயர்த்தி விட்டவர் என்றும், ‘பிராமணர்கள்’ எப்போதுமே அடுத்தவர்களை வளர்த்து விடுபவர்கள் என்றும் திரிவேதி கூறினார். பி.என். ராவ் தான் சட்டங்களை எழுதியவர் என்றும், இந்தப் பெருமை அவருக்கே உரியது என்றும் அம்பேத்கரே ஒப்புக் கொண்டதாக அவர் மேலும் பேசி இருக்கிறார்.
புரட்சியாளர் அம்பேத்கரை அரசியல் சட்ட வரைவுக் குழு தலைவராக்கியது ராவ் அல்ல; அரசியல் நிர்ணய சபை தான் அம்பேத்கரை தலைவராகத் தேர்வு செய்தது. ஏதோ அரசியல் வரைவுக் குழு தலைவராக அம்பேத்கரை உருவாக்கியதே பி.என். ராவ் என்பதுபோல திரிவேதி பேசியிருக்கிறார். பி.என். ராவ் அரசியல் நிர்ணய சபையின் சட்ட ஆலோசகராக செயல்பட்டவர். உலக நாடுகளின் சட்டங்களைத் தொகுத்து அரசியல் வரைவுக் குழுவுக்கு அளித்தவர். அந்த வகையில் பி.என். ராவுக்கு அம்பேத்கர் பெருந்தன்மையுடன் நன்றியைத் தெரிவித்தார் என்பதே வரலாறு.
அண்மைக் காலமாக பார்ப்பனர்கள் வெளிப்படையாகவே தங்கள் இனப் பெருமையை பேசி வருகிறார்கள். கேரளாவில் நடந்த பார்ப்பன மாநாட்டில் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றுப் பேசினர். ஒரு நீதிபதி, ‘அக்கிரகாரங்கள்’ என்ற பார்ப்பன குடியிருப்பில் மற்றவர்கள் வாழக் கூடாது; அக்கிரகாரங்கள் புனிதமானவை என்று பேசினார்.
அதேபோல, மகாராஷ்டிராவில் பா.ஜ.க. முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ், “நான் ஒரு பிராமணன் தான். அதற்கு என்ன இப்போது?" என்று தன்னை கட்சிக்குள் எதிர்த்து வரும் பிற்படுத்தப்பட்ட பா.ஜ.க., எம்.பி.களுக்கு பதில் தரும் வகையில் திமிரோடு பேசியிருக்கிறார்.