இராமானுஜர்’ சிலையும் வேத - புரோகித ஆதீக்கமும்

இராமானுஜர் சிலையை பிரதமர் மோடி தெலுங்கானாவில் திறந்து வைத்திருக்கிறார். ஜீயர் மடம் ஒன்று இந்த சிலையை நிறுவியிருக்கிறது. சிலையின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய். நெற்றியில் வைணவ தென்கலை நாமத்தோடு தோன்றி சிலையைத் திறந்து வைத்துப் பேசியிருக்கிறார் மோடி. இராமானுஜர் தேச ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்தவர் என்று பேசியிருக்கிறார். இராமானுஜர் காலத்தில் இந்தியா என்ற தேசமே உருவாகவில்லை. பிறகு எப்படி அவர் தேச ஒற்றுமைக்காக குரல் கொடுத்திருக்க முடியும்? இராமானுஜர் சமூக ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுத்திருக்கிறார் என்றால் அதில் நியாயம் இருக்க முடியும்.

வேதங்களை பிராமணர்கள் மட்டுமே படிக்க வேண்டும், பிராமணர்கள் மட்டுமே கேட்க முடியும் என்று இருந்த நிலையை கட்டுடைத்து அனைவருக்கும் வேதம் படிக்க, கேட்க உரிமையுண்டு என்று கலகம் செய்தவர் இராமானுஜர். திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தில் ஏறி வேதத்தை ஓதி அனைத்துப் பொதுமக்களும் இதைக் கேளுங்கள் என்று வேதத்தை ஓதியதாக வரலாற்றுப் பதிவுகள் உண்டு. ஆனால் இந்த சிலை திறப்பிற்கு இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கில் வேத புரோகிதர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் “பிராமண”ப் புரோகிதர்கள். உண்மையிலேயே இராமானுஜருக்கு நன்றி செலுத்தியிருக்க வேண்டுமென்றால், அனைத்து ஜாதியைச் சார்ந்த பண்டிதர்களை அழைத்து யாகத்தை நடத்தியிருக்க வேண்டும், வேதத்தை ஓதியிருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போல் வேத பார்ப்பனியம் இராமானுஜரை தனது அடையாளமாக்கிக் கொண்டு ஜீரணித்துக் கொண்டு விட்டது. அவரது கலகக் குரலை சிதைத்து மவுனமாக்கி விட்டது.

ஒரு பக்கம் சிலைகளைத் திறக்கிற போது ஜாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவை இன்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பது ஜாதி என்ற கட்டமைப்பு தான். இதை ஒழிப்பதற்கு இவர்கள் எந்த முயற்சியும் செய்வது கிடையாது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து 6.02.2022 அன்று ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. அங்கே இருக்கிற சிக்மகளூர் மாவட்டத்தில் சஸியபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஷோமா சங்கர் என்ற இளைஞர் தலித் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பங்களின் சம்மதத்தோடு அந்த திருமணம் நடந்திருக்கிறது. பெங்களூரில் இருவரும் வேலை செய்து வந்துள்ளனர். கொரோனா காலத்தில் வேலை பறிபோக இருவரும் மீண்டும் அவர்கள் கிராமத்திற்கு திரும்பி யிருக்கிறார்கள். ஆனால் கிராமத்தில் ஜாதியச் சமூகம் இந்தக் குடும்பத்தை புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இவர்களிடம் தொடர்போ, உறவோ வைத்துக் கொண்டால் 5000 அபராதம் என்று அறிவித்துவிட்டது. உடனே அந்த இளைஞர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறப் போவதாக அறிவித்தார். ஆடிப்போன ஆட்சி நிர்வாகம் கிராமத்திற்கு படையெடுத்து கிராம மக்களை சந்தித்து புறக்கணிப்பை விலக்கிக் கொள்ளுங்கள் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது. இது ஒரு உதாரணம் தான்.

இந்த நிலை இந்தியா முழுவதும் மட்டுமல்ல, இங்கிருந்து அமெரிக்கா சென்றுள்ள ஜாதி வெறியர்கள் பார்ப்பனர்கள், உயர்ஜாதிக்காரர்கள் பல்கலைக் கழகங்களில் ஜாதியை திணித்துக் கொண்டிருக்கிறார்கள். கலிபோர்னியா மாகாணத்தில் இதை எதிர்த்து ‘Equality Lab’ என்ற அமைப்பு கடுமையான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. எப்படி இனத்தின்படி பாகுபாடு காட்டக்கூடாது என்று பல்கலைக் கழக வளாகங்களில் தடை செய்யப்பட்டிருக்கிறதோ இன வகையில் பாகுபாடு காட்டுவதும் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அதே போல ஜாதியும் பாகுபாடு காட்டுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். தற்போது ஜாதியம் ஒரு பாகுபாடு அமைப்பு என்று பல்கலைக்கழகம் சட்ட விதிகளில் இணைத்து விட்டது. அமெரிக்கா முழுவதும் 23ற்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் ஜாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் ஜாதியும் ஒரு பாகுபாடு அமைப்பு என்பதை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அமெரிக்காவில் இருக்கிற ‘Hindu Foundation’ என்று சொல்லப்படுகின்ற இந்து பார்ப்பன உயர்ஜாதி அமைப்பு இதைக் கடுமையாக எதிர்க்கிறது. ஜாதி இருக்க வேண்டும், ஜாதி ஒரு பாகுபாடு அமைப்பு அல்ல என்றெல்லாம் அவர்கள் விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆக இந்தியாவினுடைய கிராமங்களிலிருந்து அமெரிக்கா வரை ஜாதி கொடி கட்டிப் பறக்கிறது, வேத பார்ப்பனியக் கூட்டம் போகின்ற நாடுகளுக்கெல்லாம் ஜாதியை தூக்கிக் கொண்டு போகிறது.

மற்றொரு புறம் இராமானுஜர் சிலையை திறந்து வைத்து சமத்துவத்தைப் பற்றியும், அனைத்து ஜாதியினரும் கோவிலுக்குள் வரலாம் என்று இராமானுஜர் பாடுபட்டார் என்றும் மோடி போன்றவர்கள் சடங்கிற்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜாதி கட்டமைப்பைத் தகர்த்து எரிவதற்கு இங்கே எவரும் தயாராக இல்லை.

- விடுதலை இராசேந்திரன்

Pin It