சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டில் மோடி அரசு நெருப்பை வைத்திருக்கின்றது. பொருளாதார ரீதியாக அதுவும் வருடத்திற்கு 8 லட்சத்திற்குக் குறைவாக, அதாவது மாதம் 66000 ரூபாய் மட்டுமே சம்பாதித்து சோற்றுக்குப் போதாமல், பகுதி நேரமாக பிச்சை எடுக்கும் வேலையை செய்து வந்த உயர்சாதி ஏழைகளுக்கு அவர்களைப் போலவே கஷ்ட ஜீவனம் செய்து வாழ்க்கை நடத்தி வரும் ஏழைத்தாயின் மகனான மோடி 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களை வறுமையில் சாகாமல் காப்பாற்றி உள்ளார். இதன் மூலம் கிராமப்புறத்தில் நாள் ஒன்றுக்கு 32 ரூபாயும், நகர்ப்புறத்தில் 47 ரூபாயும் சம்பாதித்து வயிறு புடைக்கத் தின்றுவிட்டு, தொந்தி தள்ளி, கொழுகொழுவென்று வாழும் 36.3 கோடி பேரின் கொட்டத்தை மோடி அரசு அடக்கி இருக்கின்றது. மோடி கொடுத்திருக்கும் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை கண்ணீர் மல்க வரவேற்றிருக்கும் வெறும் 66000 மட்டுமே சம்பாதிக்கும் பரம ஏழைகள், வீதிகளில் வந்து உரத்து கோஷமிடுகின்றார்கள், 'எங்களைக் காக்க வந்த நவீன புஷ்யமித்ர சுங்கனான மோடி வாழ்க வாழ்க' என்று.

brahmins 670மனுதர்மத்தின் படி ஆட்சி செலுத்துபவர்களுக்கு மக்களாட்சி என்பது எல்லாம் மயிருக்குச் சமம் என்பதை மீண்டுமொரு முறை மோடி நிரூபித்து இருக்கின்றார். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இட்ட முதல் கட்டளை இனி பிஜேபி ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கண்டிப்பாக திசு பேப்பர்களைப் பயன்படுத்தக் கூடாது, அதற்குப் பதிலாக அரசியல் அமைப்புச் சட்டத்தை பயன்படுத்தி அதற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான். அதனால் மோடி ஆட்சி செய்த இந்த ஐந்தாண்டுகளில் அவரது சகாக்கள் நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்ற ஒன்று எங்கேயும் நடந்துவிடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்கள். இப்போது தன்னுடைய ஆட்சி முடிவடையும் தருவாயில் இருப்பதால் மோடி இறுதியாக ஒரு முறை சட்டத்தை அசிங்கப்படுத்தி சுய இன்பம் காண முயன்றுள்ளார்.

‘உயர்சாதி ஏழைகள்’ இந்த சொல்லே பெரும் முரண்பாட்டின் குவியலாக இருக்கின்றது. சாதியில் தன்னை உயர்வாகக் கருதி அடுத்தவர்கள் மீது ஆதிக்கம் செய்யும் கும்பல் பொறுக்கித் தின்பதற்காக மட்டும் தன்னை ஏழைகள் என்று சொன்னால், அதற்குப் பெயர் தான் ‘உயர்சாதி ஏழைகள்’ போலும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகள் என்று சொன்னால், அதில் முன்பே குறிப்பிட்ட நகர்ப் புறத்தில் 47 ரூபாயும், கிராமப் புறத்தில் 32 ரூபாயும் சம்பாதிக்கும் அனைத்து சாதியையும் சேர்ந்த 36.3 கோடி பணக்காரர்களும் வந்து விடுவார்கள் என்று யோசித்த மோடி, மாதம் 66000 மட்டுமே சம்பாதிக்கும் ஏழைகளை வெறும் ஏழைகள் என்று மட்டும் குறிப்பிட மனமில்லாமல், அவர்களை ‘உயர்சாதி ஏழைகள்’ என்று கெளரவமாக தனியே பிரித்து அடையாளப்படுத்துகின்றார். பிச்சையே எடுத்தாலும் அவன் சாதியை விட்டுக்கொடுக்காத உயர்சாதி பிச்சைக்காரன் என்பதுதான் இதன் பொருள்.

மோடி கொடுத்திருக்கும் இந்தச் சலுகையின் காரணமாக பார்ப்பன‌ர், ராஜபுத்திரர், ஜாட், மாரத்தா, பூமிஹர் போன்ற சாதிகளைச் சேர்ந்த பரம ஏழைகள் பயனடைவார்கள். அரசுத் துறைகளில் மட்டுமல்லாமல் தனியார் துறைகளிகளிலும் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தி இருப்பதன் மூலம் ஏற்கெனவே அரசுத் துறைகளிலும் தனியார் துறையின் உயர் பதவிகளிலும் தங்களின் விழுக்காட்டுக்கு மேல் பதவிகளை அனுபவித்து வரும் வயிறு சரிந்த வஞ்சிக்கப்பட்ட உயர்சாதி ஏழைகளுக்கு கூடுதலாக இடம் கிடைக்க வழி ஏற்படுத்தி கொடுத்து இருக்கின்றார்.

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவுதான் பொருளாதார ரீதியாக பரம ஏழைகளாக வாழும் உயர்சாதி இந்துக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கும் முடிவிற்கு மோடியைத் தள்ளியது என்கின்றார்கள் அரசியல் வல்லுநர்கள். ஆனால் அது தவறாக கணிக்கப்பட்ட முடிவாகும். ஐந்து மாநிலத் தேர்தலில் பிஜேபி அமோகமாக வெற்றி பெற்றிருந்தாலும் நிச்சயம் இதைச் செய்திருக்கும். காரணம் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது ஆதிக்க சாதிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆர்.எஸ்.எஸ் பிஜேபி போன்றவற்றை இன்று கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கும் பார்ப்பன- பனியா சக்திகள் அதை இத்தனை நாள் செய்யாமல் இருந்ததே ஆச்சரியமாகும். இப்போது செய்ததற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட காரணமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம் ஒட்டுமொத்தமாக 10 சதவீத மக்கள் தொகைகூட இல்லாத ஆதிக்கசாதிகளை திருப்திபடுத்துவதன் மூலம் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் பட்டியல்சாதி மக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிர்ப்பை அவர்கள் சம்பாதிக்க வேண்டி வரும். அதனால் மோடி அரசின் இந்த நடவடிக்கையை தங்களது கட்சியின் அடித்தளமாக விளங்கும் ஆதிக்க சாதிகளை திருப்திபடுத்தும் நடவடிக்கை என்றுதான் பார்க்க வேண்டும்.

ஆனால் நியாயமான எதிர்ப்பு என்பது இதற்கு எதிரான சக்திகளிடம் இருந்துதான் வந்திருக்கவேண்டும். ஆனால் நடந்தது என்ன?. இதை பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி போன்றவையும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்றவையும் வரவேற்றுள்ளன. தமிழ்நாட்டில் பிஜேபியுடன் கள்ள உறவை வைத்திருக்கின்றது என்று சொல்லப்பட்ட அதிமுக எதிர்த்து இருக்கின்றது. திமுக எதிர்த்து இருக்கின்றது. தம்பிதுரை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து இருக்கின்றார். மொத்தம் 323 எம்பிக்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறி உள்ளதால், அதிமுகவைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எதிராக வாக்களித்து இருந்தாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்க முடியாது.

எப்படியோ மோடி பார்ப்பன- பனியா சாதிகளின் நீண்ட நாள் கோரிக்கையை தன் ஆட்சி முடியும் தருவாயில் நிறைவேற்றி இருக்கின்றார். எந்த இட ஒதுக்கீட்டின் மூலம் தகுதியற்றவர்கள் பதவிகளை பிடித்துக் கொள்கின்றார்கள் என்று இத்தனை ஆண்டுகளாக ஆதிக்க சாதிகள் கூச்சல் போட்டதோ இன்று அதே இட ஒதுக்கீட்டை எந்தவித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டு தங்களது சாதிய பிழைப்புவாதத்தை காட்டியிருக்கின்றன.

பொருளாதார அளவுகோல் என்பது நிலையில்லாதது என்பது சின்ன குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால் சாதிய அடையாளம் என்பது செத்து சுடுகாடு போகும் வரை ஒருவரைவிட்டு மறையாதது. அது நின்று நிலைத்து தினம் தினம் நம் சுயமரியாதையும், தன்மானத்தையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டே இருப்பது. நீ பறையன், நீ சக்கிலி, நீ வண்ணான், நீ நாவிதன் என்று சாகும்வரை இன இழிவு செய்துகொண்டே இருப்பது.

இட ஒதுக்கீடு என்பது சோறு தின்பதற்காக கேட்கப்பட்ட ஒன்றல்ல. அது அதிகாரத்தை அடைய கேட்கப்பட்டது. சோறு தின்பதற்காக என்றால் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடே போதும். ஆனால் சாதியைக் காரணம் காட்டி இத்தனை நூற்றாண்டுகளாக கல்வி மற்றும் அதிகாரம் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரல் தான் இட ஒதுக்கீடு என்பது. இன்று அதை கேலிக்கூத்தாகி இருக்கின்றார் மோடி.

பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு எப்படி பெரிய அயோக்கியத்தனமானதோ அதே போல சமூகத்தில் தன்னை ஆதிக்க சாதியாக, ஆண்ட பரம்பரையாக காட்டிக்கொள்ளும் சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதும் பெரிய அயோக்கியத்தனமாகும். இட ஒதுக்கீடு உண்மையில் சரியான மக்களைச் சென்றடைய வேண்டும். இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் சாதிய தளத்தில் என்ன மாதிரியான மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதை நம் ஆட்சியாளர்கள் பரிசீலினை செய்யாமலேயே அல்லது செய்ய மனமில்லாமலேயே இருக்கின்றார்கள். சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காண்பதை திட்டமிட்டே இந்த அரசு தவிர்த்து வருகின்றது. தன்னுடைய சாதி உயர்ந்த சாதி, தன் வீட்டுப் பெண்ணை காதலித்தால், திருமணம் செய்துகொண்டால் வெட்டுவேன், குத்துவேன், கருவறுப்பேன் என்று இறுமாப்புடன் இன்றும் இருக்கும் சாதிகள் எல்லாம் இட ஒதுக்கீட்டின் பலன்களை கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் அனுபவிப்பதும், அதற்கு சில முற்போக்குவாதிகள் சொம்பு தூக்குவதும் கடைந்தெடுத்த பிழைப்புவாதமே ஒழிய வேறென்ன?

ஆண்ட பரம்பரை என்று அவனே சொல்லும்போது அவன் எப்படி சமூக ரீதியாக பின்தங்கி இருக்க முடியும், வேண்டுமென்றால் கல்வி ரீதியாக பின்தங்கி இருக்கலாம். ஆனால் இட ஒதுக்கீட்டின் நோக்கம் Socially and Educationally என்று தெளிவாக அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதில் எது ஒன்று இல்லை என்றாலும் அவர்கள் இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் கிடையாது.

எனவே சமூகத்தில் தன்னை யாரெல்லாம் ஆண்ட பரம்பரை என்று சொல்கின்றார்களோ, அவர்கள் அனைவரும் இட ஒதுக்கீடு பெறத் தகுதியற்றவர்கள் ஆவார்கள். இட ஒதுக்கீடு பெறுவதற்காக தன்னை சூத்திரன் என்பதும், சமூகத்தில் தன்னுடைய சக மனிதனை அடக்கி ஒடுக்க தன்னை ஆண்ட பரம்பரை என்பதும் வேசித்தனமான நடவடிக்கைகள் ஆகும். முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும் இது போன்று ஆண்ட பரம்பரை கதை பேசும் சாதிகளின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய உரத்து குரல் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் சமூகத்தில் இது போன்ற சாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றும் சாதியக் கொலைகளுக்கும், சாதி ஆணவக் கொலைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைக்கும் நாம் உடந்தையாக இருந்தவர்கள் ஆகிவிடுவோம்.

நூற்றுக்கணக்கான சாதிகள் இதுவரை எந்தவித அதிகாரத்தையும் பெறாமல் சமூகத்தில் அழுத்தப்பட்டு கிடக்கின்றன. அதற்கெல்லாம் இன்னும் அதிகமான இட ஒதுக்கீடு கிடைக்க நாம் போராட வேண்டும். ஆண்ட பரம்பரைகளின் இட ஒதுக்கீட்டைப் பறித்து இவர்களுக்கு வழங்குவதன் மூலம் இதனைச் செய்ய முடியும். மேலும் நம்முடைய நோக்கம் என்பது ஒடுக்கப்பட்ட சாதிகளை சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் முன்னேற்றுவது என்பதைத் தாண்டி சாதி ஒழிப்புக்கு இட ஒதுக்கீட்டை ஓர் ஆயுதமாக மாற்ற வேண்டும். சாதி இருக்கும் வரை இட ஒதுக்கீடு இருக்கும் என்று சொன்னால் ஒருபோதும் சாதி ஒழியாது. இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகளை நாம் கண்டறியும் போதுதான் நம்மால் உண்மையில் சாதியை ஒழிக்க முடியும்.

- செ.கார்கி