கீற்றில் தேட...

கடந்த வாரம் வெளி வந்த சில முக்கிய செய்திகள் குறித்து ஒரு பார்வை

அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும் இந்து பார்ப்பனியத்தின் ஜாதியப் பாகுபாடு நுழைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து பாகுபாடு எதிர்ப்புக்கான பல்கலைக்கழகக் கொள்கையில் ஜாதியையும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் சட்டப்பூர்வமாக அண்மையில் சேர்த்திருக்கிறது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அமைப்பு, ஜாதி - ஒரு பாகுபாடு என்றும், பல்கலை வளாகத்துக்குள் இது தடை செய்யப்பட வேண்டும் என்றும் தனது கொள்கையாக ஏற்கனவே அறிவித்திருந்தது. பேராசிரியர்கள் கோரிக்கையை இப்போது கலிபோர்னியா பல்கலைக்கழகமும் ஏற்று தனது சட்டப்பூர்வ விதியாக்கியுள்ளது. பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கன் இந்து சம்மேளனம் என்ற மதவாத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு ஜாதி என்று தனியாக பெயர் குறிப்பிட்டு சட்டத்தில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருக்கிறது. தலித் மற்றும் மைனாரிட்டி மக்களுக்கான உரிமைகளுக்குப் போராடும் அமைப்பு, அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி பாகுபாட்டுக்கான தடைகளில் ஜாதியையும் இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்தது.

சமத்துவத்துக்கான கூடம் (Equality labs) எனும் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தேன்மொழி சவுந்தர்ராஜன், அமெரிக்காவின் 23 பல்கலை வளாகங்களில் ஜாதிப் பாகுபாடுக்கெதிரான சிவில் உரிமை அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவை ஜாதி பாகுபாடுகளுக்கு எதிராகத் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். உயர்தொழில்நுட்ப சர்வதேச மய்யமான கலிபோர்னியாவில் உள்ள ‘சிலிக்கான் வேலி’யில் தலித் பொறியாளர்களுக்கு எதிரான ஜாதியப் பாகுபாடுகளை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்குப் பிறகு ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு உள்ளானவர்கள் விவரங்களைத் தெரிவிக்க முன் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் தேன்மொழி. கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களில் ஜாதி அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவது குறித்து அமெரிக்க ஏடுகளில் செய்தி வெளி வந்து கொண்டிருக்கின்றன.

பார்ப்பனர்கள் தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் இயக்கக் கொள்கைகளால் அமெரிக்காவுக்கு துரத்தப்பட்டார்கள் என்று சில பார்ப்பன அறிவுஜீவிகள் எழுதுகிறார்கள். அமெரிக்கா வந்த பார்ப்பனர்கள் ‘இந்து’ சனாதனத்தை இங்கேயும் தூக்கிக் கொண்டு வந்து பாகுபாடுகளை உருவாக்கும் அதிகாரச் செல்வாக்கோடு செயல்படுகிறார்கள். கல்வி நிலையங்கள் மட்டுமின்றி சமூகத்திலும் ஜாதியப் பாகுபாடுகள் மோசமாகி விட்டது என்பதை சுட்டிக் காட்டும் சமத்துவத்துக்கான அமைப்புகள் அமெரிக்காவில் மாநிலங்களுக்கான கூட்டாட்சி சட்டங்களிலேயே ‘பாகுபடுத்தும்’ அமைப்பாக ஜாதியையும் இணைத்து ஜாதி என்பதையே குற்றமாக்க வேண்டும். அப்போதுதான் தெற்காசிய சமூகம் முன்னேறவே முடியும் என்று வலியுறுத்தி வருகின்றது.

(ஆதாரம்: ‘இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்ட ஆய்வு (ஜன.30, 2022))

உ.பி. - பீகாரில் ‘இந்துத்துவா’ மாயை விலகுகிறது

உ.பி., பீகார் மாநிலங்களிலிருந்து இதுவரை போராட்டம், கலவரம் தொடர்பான செய்திகள், மதவெறி, ஜாதி வெறி குறித்தவைகளாகவே இருப்பது வழக்கம். மாட்டுக்கறி வைத்திருந்தால் அடித்துக் கொள்வார்கள். ‘தலித்’துகள் செருப்பு போட்டால் - அடிமை வேலை செய்ய மறுத்தால் கட்டி வைத்து சித்திரவதை செய்வார்கள். பெண்களை உயிருடன் எரிப்பார்கள். இப்படி மதம் - ஜாதி - பெண்ணடிமை என்று ஊறிக் கிடந்த உ.பி. - பீகார் மாநிலங்களி லிருந்து வேலை வாய்ப்பு உரிமை கேட்டு இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் வீதிக்கு வந்து போராடும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளி பரப்பி வருகின்றன. இந்திய இரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத 35,281 வேலைகளுக்கு 125 இலட்சம் இளைஞர்கள் மனு செய்திருந்தனர். இதற்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் மோசடிகள் நடந்ததைத் தொடர்ந்து இளைஞர்கள் வேலை கேட்டுப் போராடுகிறார்கள். வடநாட்டுக் கலாச்சாரத்துக்கேற்ப தொடர்வண்டியையே தீ வைத்து எரித்துள்ளனர்.

கடந்த ஜனவரி-மார்ச் 2020இல் மட்டும் இம்மாநிலங்களில் மாத ஊதியம் பெறும் வேலைகள் 2.4 சதவீதம் குறைந்துவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உ.பி., பீகார் மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் தேசிய சராசரியைவிட குறைவாக இருப்பதாகவும் குறிப்பாக பீகாரில் மேலும் மோசமாக நான்கில் ஒருவர் வேலை இழந்து விட்டதாகவும் இதே காலகட்டத்தில் தமிழ்நாடு குஜராத்தில் வேலைச் சந்தையில் 44 சதவீதம் பேர் பயன் பெற்று வருவதாகவும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. முஸ்லிம் எதிர்ப்பு, மதவெறி என்ற ‘இந்துத்துவா’ கொள்கையிலிருந்து இளைஞர்கள் விழித்துக் கொண்டு தங்களுக்கான வேலை வாய்ப்பு, வாழ்வுரிமையை நோக்கி சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என்றும் தமிழ்நாட்டில் நடக்கும் ‘திராவிடன் மாடல்’ ஆட்சி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்தியா முழுமைக்கும் 27 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு முதல்வர் சட்டப் போராட்டம் நடத்திப் பெற்றுத் தந்த உரிமைகள் அவர்களை சிந்திக்கச் செய்துள்ளது என்றும், கிராமங்களில்கூட சமூக வலைதளங்கள் வழியாக பெரியார், அம்பேத்கர், பூலே போன்ற தலைவர்கள் வேகமாக அறிமுகமாகி வருவதாகவும் அம்மாநிலங்கள் குறித்து ஆங்கில ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. இதை உறுதிப்படுத்துவதாக இளைஞர்கள் வேலை கேட்டு நடத்தும் போராட்டம் அமைந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

ஆக்கிரமிப்பு கோயில்கள்: உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

“கடவுள் அங்கு இங்கு என்பதில்லாமல் எங்கும் நிறைந்திருப்பவர். கடவுள் தனது சக்தியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்ற அவசியம் இல்லை. சில கடும்போக்காளர்கள்தான் மதத்தைப் பயன்படுத்தி மக்களிடையே மோதலை உருவாக்கி வருகிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் டி. பரதசக்ரவர்த்தி இத்தீர்ப்பை வழங்கி யுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்துக்கு எதிராகக் கட்டப்பட்டிருந்த கோயிலை அகற்றக்கோரி கோயில் அறக்கட்டளையினருக்கு நெடுஞ்சாலைத் துறை தாக்கீது அனுப்பியது. கோயிலை அகற்றக் கூடாது என்றும், நீண்ட காலமாக கோயில் இருந்து வருகிறது என்றும் பக்தர்கள் உணர்வைப் புண்படுத்தும் என்றும் நீதிமன்றத்தில் பெரியசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலைத்துறை அனைத்து சாதி, மதம், இனத்துக்கும் சொந்தமானது. அதில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்குரிய கோயிலைக் கட்டி சொந்தம் கொண்டாட முடியாது. மனுதாரர் விரும்பினால் அவருக்கு உரிமையுள்ள சொந்த இடத்தில் கோயிலைக் கட்டிக் கொள்ளட்டும். எங்கும் நிறைந்திருக்கிற சர்வசக்தியுள்ள ஒரு கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்தால் மட்டுமே சக்தியை வெளிப்படுத்த முடியும் என்ற அவசியமே இல்லை” என்று உயர்நீதிமன்றம் மிகச் சிறப்பான தீர்ப்பை பகுத்தறிவு மற்றும் பொது மக்கள் நலன் சார்ந்த பார்வையில் வழங்கியிருக்கிறது.

சமூக நீதிக் கூட்டமைப்பு’க் காலத்தின் கட்டாயம்

தமிழ்நாடு முதலமைச்சர் அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இது உண்மையிலேயே பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் தலைவர்களை உள்ளடக்கி இந்த அமைப்பு உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு, சட்டப் போராட்டம் நடத்தி இந்திய ஒன்றிய அளவில் 4000 இடங்கள் கிடைப்பதற்கு கதவுகளை திறந்து விட்டது தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் தான்.

இதை ஆந்திரா, மகராஷ்டிரா, பீகார், உ.பி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த சமூக நீதித் தலைவர்கள் காணொலி வழியாக கடந்த 26.01.2022 அன்று நடந்த, மு.க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா மற்றும் சமூக நீதி இயக்கத்துக்கான ஒருங்கிணைந்த தேசிய திட்டம் கருத்தரங்கில் பாராட்டி வரவேற்று இருக்கிறார்கள்.

இந்தியா என்பது தற்போது ஒற்றை ஆட்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்துக்களின் நாடாக மாற்றவும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. குடியரசு நாள் அணிவகுப்பில் வந்த ஊர்திகளை பார்த்தாலே இந்தியா என்பது இந்துக்களின் நாடு தான் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மோடி ஆட்சி பிரகடனப்படுத்தி இருக்கிறது. இதற்கு மாற்று சமூக நீதிக்கான களம் ஒன்று மட்டும் தான். சமூக நீதியும், மாநில உரிமையும் இணைத்து மக்கள் கருத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்க வேண்டியதன் அடிப்படையில் ஒற்றை ஆட்சியை நோக்கி பயணிக்கின்ற மதவாத ஆட்சிகளின் சக்திகளை நிச்சயமாக நாம் முறியடிக்க முடியும். அந்த சரியான திசையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் இறங்கியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஏற்கெனவே மாநில கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் அதிகாரங்களில் இருந்தாலும் கூட அவர்களுக்கு இப்படி ஒரு சிந்தனை உருவாகவில்லை. காரணம், தமிழ்நாடு மட்டும் தான் சமூகநீதி மண்ணாக இருந்திருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்