குஜராத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41,632 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.பி.கள் தனுஷ் எம்.குமார், ஜி.செல்வம் ஆகியோர் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4.25 லட்சம் பேர், கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் குஜராத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 41,632 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் 9,606 குழந்தைகளும், 2021-22 நிதியாண்டில் 13,048 குழந்தைகளும், 2022-23 நிதியாண்டில் 18,978 குழந்தைகள் என ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு குஜராத்தில் இரட்டிப்பாகி வருகிறது. குஜராத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 லட்சம் குழந்தைகள் பிறப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி அதில் 30,000 குழந்தைகள் இறக்கும் அவலம் தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளது. குஜராத்தில் உள்ள 39% குழந்தைகள் வயதிற்குரிய ஏற்ற எடையில் இல்லை என்று தேசிய குடும்ப நல ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ட்ரெண்டிங்கில் பெரியார்

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்றி உருவம் போல பெரியாரை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரப்பப்பட்டது. அந்த படத்தைப் பார்த்தால் பெரியாரியவாதிகளின் மனம் புண்படும், அதில் ஆனந்தமடையலாம் என்று கருதி எவரோ பரப்பியிருக்கிறார். ஆனால் நடந்ததோ வேறு. “இந்த படம் அழகாக இருக்கிறது, படத்தை வரைந்தவருக்கு பாராட்டுக்கள், பெரியார் இருந்திருந்தால் அவரும் நிச்சயம் பாராட்டியிருப்பார். ஆடு, மாடு, கோழி, சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளைப் போல பன்றியும் ஒரு விலங்கு. அந்த விலங்கைப் போல பெரியாரை சித்தரித்தால் அதில் என்ன அவமானம் இருக்கிறது? அப்படியானால் விஷ்ணுவின் வராக அவதாரமும் இழிவானது தானா?” என பெரியாரியவாதிகள் எழுப்பிய கேள்விகள் சமூக வலைத்தளங்களை 2 நாட்கள் ஆக்கிரமித்து விட்டன. வாய்ப்பை ஏற்படுத்தியாவது பெரியாரை அவ்வப்போது டிரெண்டிங்கில் வைத்துவிடுகிறார்கள் கொள்கை எதிரிகள். “எனக்கு விளம்பரமே எனது எதிரிகள்தான்” என பெரியார் சொன்னது அவர் மறைந்து அரைநூற்றாண்டுகள் ஆகியும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.

Pin It