அயோத்தி ‘இராமனு’க்கு அடிக்குது ‘லாட்டரி’; சர்வதேச சுற்றுலா கதாநாயகனாக மாறப் போகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, உ.பி. காவிச் சட்டை ஆதித்யநாத் என்பவருக்கு முதலமைச்சர் என்ற பெயரும் உண்டு. இராமன் தரிசனத்துக்கு கோயிலைச் சுற்றி அமையப் போகும் சாலைக்கு அவரது இராமராஜ்ய உ.பி. ஆட்சி ஒதுக்கியுள்ள தொகை 2000 கோடி ரூபாய்.

மக்கள் வரிப் பணத்தில் மக்களுக்கான திட்டங்களுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, 2000 கோடியை கோயிலுக்கு சாலை போட கொட்டி அழும் ஆட்சியை உலகில் எங்கேயாவது பார்த்திருக்க முடியுமா? இது அந்த இராமனுக்கே அடுக்காது” என்று எதிர்க் கேள்வி கேட்கக் கூடிய மக்கள் அங்கே இல்லை. ‘இந்துத்துவ மாடல்’ இப்படித் தான் சேறு வாரி பூசிக் கொண்டு ஆட்டம் காட்டும்!

உ.பி. மாநிலமே ‘இராமனுக்கு’ பட்டா போட்டாகி விட்டது. இனி அடுத்தடுத்து கீழ்க்கண்ட திட்டங்களும் வரலாம்.

  • சர்வதேசப் பயணிகளை கோயிலுக்கு வரவேற்க அனுமார் படை உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் தரப்படும். திறமையுள்ள அமைச்சர்கள் பயிற்சி யாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
  • நீட் தேர்வு இரத்து செய்யப்படும்; அதற்கு மாற்றாக ‘ஸ்ரீ ராம ஜெயம்’ அதிக எண்ணிக்கையில் எழுதினாலே போதும்.
  • இராமனின் ‘டாடி’ மிஸ்டர் தசரத மகாராஜா, இராமன் பிறப்புக்காக நடத்திய அசுவமேத யாகம் (குதிரைகளோடு உறவு கொள்வது) காட்சிப்படுத்தப்பட்டு செக்ஸ் திரில்லர் படமாக மெய் சிலிர்க்க திரையிடப்படும்.
  • சீதை தனது சத்தியமான ‘கற்பை’ நிரூபிக்க, இராமனுக்காக தீக்குளித்து உயிர் மீண்ட காட்சிகளும் சூத்திரன் ‘சம்பூகன்’ இராமனால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட திகைப்பூட்டும் காட்சிகளையும் காணத் தவறாதீர்கள் என்று விளம்பரமும் அரசு செய்தித் துறை சார்பில் வெளியிடப்படலாம்.
  • சட்டமன்றத்தில் இராமனுக்கு தனி நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்படும். இராம பக்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய இலவச திட்டங்கள் அறிவிக்கப்படும். இதற்காக உழைக்கும் மக்கள் தலை மீது சிறப்பு வரிகள் போடப்படும்.
  • ‘ஸ்ரீராம பஜனைக் குழு’ உருவாக் கப்பட்டு அதில் மோடி, ஆதித்யநாத் கீர்த்தனைகளும் உரிய தாளக்கட்டு, பக்க வாத்தியங்களுடன் இசைக் கப்படும். மக்கள் வாழும் ‘பள்ளம் படு குழி’ சாலைகளிலும் இந்த பஜனைக் குழு பயணித்து கடைசியாக, இராமன் கோயில் நோக்கி 2000 கோடி சிறப்பு சாலையை வந்தடையும்.
  • 4 ஆண்டுகள் இராமன் செருப்பு ‘அரசனாக’ ஆட்சி செய்த வரலாற்றுப் பெருமையை விளக்கும் வகையில் செருப்பு - மாநில அரசின் தேசிய சின்னமாக்கப்படும்.

- இப்படி ஆதித்ய நாத்தின் அடுத்தடுத்த அதிரடியாக அறிவிக்கக் கூடும். நம்புங்கள்!

இந்துத்துவ மாடலில் இதெல்லாம் சாதாரணமப்பா!

- கோடங்குடி மாரிமுத்து