இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் தொடர்ச்சியாக, மக்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். சரக்கு லாரிகளின் கட்டணம் கி.மீ.க்கு ரூ. 2 ஏற்கெனவே உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டாயம் உயரும். ஒரு வேளை சோற்றுக்குத் திண்டாடும் ஏழைகளின் நிலைமை, எழுந்து வெளியே வர முடியாத அளவுக்கு படுபாதாளத்தில் விழுந்துவிடும்.

Petrolகச்சா எண்ணெய் விலை உயர்வு நெருக்கடியை, பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு விளக்க முடியாது, தீர்வும் காண முடியாது. ஏனென்றால் உலகில் கொழுந்துவிட்டு எரியும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கும் சர்வதேச போலீஸ்காரரான அமெரிக்காதான், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் காரணம். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் விபரீத விளையாட்டு இந்த முறை எண்ணெய் வர்த்தகத்தில் அரங்கேறி இருக்கிறது.

அதிபர் பதவிக் காலம் முடியப் போகும் நேரத்தில் ஜார்ஜ் புஷ் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டார். அதில் மிகப் பெரியது, அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி. அமெரிக்க பொருளாதார கட்டமைப்பில் உள்ள பலவீனத்தால் டாலரின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ந்து வந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பைத் தக்க வைக்க வட்டிவிகிதங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாமல் அமெரிக்க அரசு விழித்தது. அந்நாட்டை நம்பியிருக்கும் வளரும் நாடுகளின் பங்குச்சந்தைகளும் திணறிப் போயின.

இப்படி நெருக்கடியில் சிக்கி விழி பிதுங்கியிருந்த அமெரிக்க அரசு, கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குப் பிறகு வன்மத்துடன் சிரிக்கிறது. இந்த வன்மத்துக்குப் பின்னணியில் காரணம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க முதலீட்டுத் துறை ரொக்கப் பணம் மற்றும் பங்குச்சந்தையில் கவனம் செலுத்தாமல் வணிகப் பொருள் சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. 2003ம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் தற்போது 20 மடங்கு அதிகமாக வணிகப் பொருள் சந்தையில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் 26000 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. இந்த முதலீடுகளில் பெரும்பாலானவை, இழப்பு ஏற்படாத மற்றும் ஓய்வூதிய நிதியை அடிப்படையாகக் கொண்டவை. இந்த முதலீடுகள் ஆபத்தானவைதான் என்றாலும், பெரும் லாபம் ஈட்டித்தரக் கூடியவையும்கூட.

எதிர்கால சந்தையில் இந்த முதலீடுகள் 50000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடியவை. இந்த முதலீடுகளில் பாதிக்கு மேற்பட்டவை கச்சா எண்ணெயில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் என்பதுதான், கொள்ளை லாபம் கிடைப்பதற்குக் காரணம். ஓர் இடத்தில் ஒரு பொருளின் தேவை அதிரித்து, அதற்கேற்றவாறு கையிருப்பும் இருந்தால் பொருளின் விலை நிலையாக இருக்கும். ஒரு பொருளின் தேவை அதிகமாக இருந்து, கையிருப்பு குறைவாக இருந்தால் விலை அதிகரிக்கும். அதேநேரம் ஒரு பொருளின் தேவையைவிட, கையிருப்பு அதிகமாக இருந்தால் பொருளின் விலை குறையும். இதை கையிருப்பும் தேவையும் சமன்பாடு என்கிறார்கள். இது ஓர் அடிப்படை பொருளாதார விதி.

ஆனால் கச்சா எண்ணெய் விலையில் கையிருப்பும் தேவையும் சமன்பாட்டுக்கு எந்த வேலையும் இல்லை. ஏனென்றால் இங்கு கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயிப்பவர்கள் உற்பத்தியாளர்கள் அல்ல என்பதுதான் விஷயமே. கச்சா எண்ணெயை பெருமளவு துரப்பணம் (உற்பத்தி) செய்யும் எண்ணெய் வள நாடுகளில் கச்சா எண்ணெய் சந்தை அமையவில்லை, அந்நாட்டு ரொக்கப் பண மதிப்பிலும் அவை குறிக்கப்படுவதில்லை. கச்சா எண்ணெய் விலை பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் (OPEC)கால் முதல்கட்டமாக நிர்ணயிக்கப்பட்டாலும், அதன் இயக்குவிசை வேறு இடத்தில் இருக்கிறது.

சர்வதேச அளவில் நியூயார்க்கிலும், லண்டனிலும்தான் கச்சா எண்ணெய் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெயின் மதிப்பு எப்பொழுதுமே அமெரிக்க டாலர் மதிப்பில்தான் குறிப்பிடப்படுகிறது. (கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், உலகெங்கும் கச்சா எண்ணெய் வாங்குபவர்கள் பதிலுக்கு அமெரிக்க டாலர்களையே கொடுக்கிறார்கள். இதனால் டாலரின் மதிப்பு உயர்கிறது. விலை எவ்வளவு உயருகிறதோ அவ்வளவு அமெரிக்க டாலர்கள் கைமாறும்).

சுருக்கமாகச் சொல்வதென்றால் கச்சா எண்ணெய் விலை நியூயார்க்கில் உள்ள வால் ஸ்டிரீட்டில் நிர்ணயிக்கப்படுகிறது. யூக வணிகம் செய்யும் நிறுவனங்கள்தான் விலையை நிர்ணயிக்கின்றன. தற்போதைய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு எண்ணெய் வணிக நிறுவனங்களாக மாறிய நான்கு ஐரோப்பிய அமெரிக்க நிதி நிறுவனங்களே காரணம். கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டிகுரூப், ஜே.பி. மார்கன் சேஸ், மார்கன் ஸ்டேன்லி ஆகியவையே அந்த நிறுவனங்கள்.

இந்த யூக வணிக நிறுவனங்களிடம் எண்ணெய் வயல்கள் எதுவும் இல்லை. அவர்கள் கச்சா எண்ணெயைî சுத்திகரிக்கவும் இல்லை. எதிர்காலச் சந்தையில் விற்கப்படவுள்ள ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய் மீதும் அவர்கள் முதலீடு செய்கிறார்கள், பிறகு ஒப்பந்த காலம் முடிவதற்குள் வேறு யாருக்காவது விற்றுவிடுகிறார்கள். எதிர்கால கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை அதிக எண்ணிக்கையில் வாங்குவதால், கச்சா எண்ணெய்க்கு போலியாக அதிக தேவை உருவாக்கப்படுகிறது. இதனால் நடப்புச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயருகிறது. யூக வணிக நிறுவனங்களது ரொக்கக் கிடங்கின் அளவு அதிகரிக்கிறது. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர் என்றால், அதில் 100 டாலர் விலை உயர்வுக்கு இந்த யூக வணிக நிறுவனங்களே காÃணம்.

எதிர்கால கச்சா எண்ணெய் விலை மீது யூக வணிக நிறுவனங்கள் செய்யும் முதலீடு, எப்படி தற்போதைய எண்ணெய் விலையை நிர்ணயிக்க முடியும், இது சாத்தியமான ஒன்றா என்று பார்த்தால் கச்சா எண்ணெய் சந்தை பெருமளவு நெகிழ்வுத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதாவது கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தால்கூட, அதன் நுகர்வு கிஞ்சித்தும் குறையப் போவதில்லை என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.

உலக அளவில் ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெய்த் தேவை 8.5 கோடி பேரல்களில் இருந்து பெருமளவு மாற்றம் ஏற்படவில்லை. உலக அளவில் ஆண்டுக்கு 34 சதவிகிதம்தான் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கிறது. ஆனால் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. (தற்போதைய அதிகரிப்பு இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை). கடந்த மூன்று ஆண்டுகளில் கச்சா எண்ணெயை வாங்குவதற்காக உலக நாடுகள் 30000 கோடி அமெரிக்க டாலர்களை கூடுதலாகச் செலவழித்துள்ளன. இந்த விலை உயர்வால் லாபமடைந்தது யூக வணிக நிறுவனங்கள் மட்டுமே.

நியூயார்க்கில் உட்கார்ந்திருக்கும் இந்த பசையுள்ள நிறுவனங்கள் உலக கையிருப்புதேவை இடைவெளியை கைசொடுக்கும் நேரத்துக்குள் மாற்றுவதால், கச்சா எண்ணெய் விலை கடுமையான நெருக்கடியைச் சந்திக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை விரைவில் 200 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் மூலதன நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் யூக வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனம் என்பதை சொல்லத் தேவையில்லை.

கச்சா எண்ணெயின் விண்ணை முட்டும் விலை உயர்வுக்கு யூக வணிகமும், அதைச் சார்ந்து இயங்கும் அமெரிக்க அரசியல் ஆதிக்கமும்தான் காரணம். முதலில் உயிரி எரிபொருளை பெருமளவு பயன்படுத்தத் தொடங்கி, உலகளவில் உணவுத் தட்டுப்பாட்டை உருவாக்கியது அமெரிக்கா. தற்போது டாலர் விலை வீழ்ச்சியையும், சரிந்துவிட்ட பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்த கச்சா எண்ணெய் விலையை திட்டமிட்டு உயர்த்தி வருகிறது. யூக வணிக நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலையை உயர்த்துவதற்கு பின்னணியில் இருந்து அமெரிக்க அரசு செயல்படுகிறது.

இந்த கச்சா எண்ணை விலை உயர்வு இந்தியாவில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. நாகரிக வாழ்க்கை எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. இந்தியாவைப் பொருத்தவரை சமையல், போக்குவரத்துக்கு எல்லா குடும்பங்களும் மண்ணெண்ணெய், எரிவாயு, டீசல், பெட்ரோல் ஆகியவற்றையே பெரும்பாலும் நம்பியுள்ளன.

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, இந்தியாவில் டீசலின் விலை பெட்ரோலின் விலையைவிட 25 சதவிகிதம் குறைவாக இருக்கிறது. ஆனால் சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலையைவிட டீசலின் விலை 20 சதவிகிதம் அதிகம். இது பெரும் முறைகேடு. மீனவர்கள், பொதுப் போக்குவரத்து வசதிகளில் டீசல் பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் டீசலை பெருமளவு பயன்படுத்துவது யார்? கார்கள், சரக்கு லாரிகள், தனியார் பேருந்துகள், தனியார் தொழிற்சாலைகள்தான். எவ்வளவு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்ந்தாலும், டீசலின் விலை உயர்வு மட்டும் குறைவாகவே இருக்கிறது. இந்திய அரசு கச்சா எண்ணெய் பொருட்களுக்கு ரூ. 225,000 கோடி மானியம் வழங்குவதாக குறிப்பிடுகிறது. ஏழைகளின் எரிபொருளான மண்ணெண்ணெய்க்கு பெரும் மானியம் வழங்குவதாகவும், எரிபொருள் விலையேற்றத்தின்போது மண்ணெண்ணெயில் கைவைக்கப்படுவதில்லை என்றும் பிரகடனப்படுத்திக் கொள்கிறது.

ஆனால் உண்மை என்ன? மண்ணெண்ணெய்க்கு தற்போது வரை 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்துள்ளது. மண்ணெண்ணெய்க்கு மானியம் வழங்கப்படுவதாக பொதுப்புத்தியில் பதிந்து போயுள்ள கருத்து ஓர் அப்பட்டமான பொய்.

கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 80 அமெரிக்க டாலர்களுக்கு விற்றபோது இந்திய அரசுக்கு வரி மூலம் ஆண்டுக்கு ரூ. 91,000 கோடி வருவாய் கிடைத்தது. இந்தப் பணத்தை நம்பித்தான் இந்திய அரசின் பட்ஜெட்டே உள்ளது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 130 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும்போது, அரசு வழங்கும் மானியம் ரூ. 25,000 கோடிதான் (இரண்டையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்). சுருக்கமாகச் சொல்வதென்றால், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 1 அமெரிக்க டாலர் விலை உயர்ந்தால், இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் ஆண்டுக்கு ரூ. 3000 கோடி செலவு அதிகரிக்கும்.)

இதை இப்படி எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 100 என வைத்துக் கொள்வோம். இதில் ரூ. 50 வரி (கச்சா எண்ணெய் மீது 4 சதவிகிதம் இறக்குமதி வரி, பெட்ரோலியப் பொருட்கள் மீது 33 சதவிகிதம் ஆயத்தீர்வை ஆகிய இரண்டும் மத்திய அரசு விதிப்பது, 17 சதவிகிதம் விற்பனை வரி மாநில அரசால் விதிக்கப்படுவது), பிறகு ரூ. 25 மானியம் வழங்கப்படுகிறது. இந்த ரூ. 25 மானியத்தைப் பற்றி மட்டுமே இந்திய அரசு மீண்டும் மீண்டும் பேசுகிறது. அதைவிட அதிகமாக விதிக்கப்படும் வரியைப் பற்றி வாயே திறப்பதில்லை.

இந்திய அரசின் கச்சா எண்ணெய் கொள்கையை சுருக்கமாக இப்படிக் கூறலாம். 1. கச்சா எண்ணெய்க்கு முதலில் பெரும் வரி விதிப்பது. 2. பிறகு அதற்கு ஓரளவு மானியம் வழங்கி குறைந்த விலையில் விற்கப்படுவது போல ஒரு மாயையை உருவாக்குவது. 3. இது போதாது என்று, இரண்டுக்கும் இடையே வரும் வேறுபாட்டுத் தொகையை ஈடுகட்ட எண்ணெய் பத்திரங்களை வெளியிடுவது. இதுவே அரசு தற்போது கடைப்பிடிக்கும் நடைமுறை. இப்படியாக இந்திய அரசின் எண்ணெய் கொள்கை வெளிப்படைத்தன்மையின்றி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது, எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வது கடினம். கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படும் என்பதையும் புரிந்து கொள்ள முடியாது. இதனால் பாதிக்கப்படப்போவது பெட்ரோல், டீசலையே பயன்படுத்தாத ஏழைகள்தான். இவ்வாறு அரேபிய எண்ணைக் கிணறுகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு எங்கோ தொலை தூரத்தில் உள்ள அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் அதனால் பொருளாதார கணக்குகள் மாறுகின்றன.

முன்பு கிராமப்புறங்களில் ஒரு பாடல் இருந்தது.

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்

என்று இருந்தது. தற்பொழுது 21ம் நூற்றாண்டல்லவா. பாடல் மாறிவிட்டது. வெள்ளைக்காரனுக்கு பதில் அமெரிக்காகாரன் வந்துவிட்டான். வெள்ளரிக்காய்க்கு பதில் கச்சா எண்ணெய் வந்துவிட்டது. ஆனால் கொள்ளை விலை.

உள்நாட்டு பகாசுரர்கள்

கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி நியூயார்க் வால் ஸ்டிரீட்டில் உள்ள யூக வணிக நிறுவனங்கள் பெரும் லாபமடைவது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவிலும் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபத்தை குவித்து வருகின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணம் செய்யும் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார், கெய்ர்ன்ஸ் ஆகியவை அறிவுக்கூர்மையாலோ, போட்டியிடும் திறன் மிகுந்த வியாபார அணுகுமுறையையோ பயன்படுத்தாமல் கொள்ளை லாபத்தை அள்ளி வருகின்றன. கச்சா எண்ணெய் விலைஉயர்வின்போது ஒரு துரும்பைக்கூட இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் நகர்த்தாமல் லாபம் அடைந்து வருகின்றன. இப்படி குருட்டு அதிர்ஷ்டத்தால் அந்நிறுவனங்களுக்கு கோடிகள் கிடைப்பதற்கு ஏதுவாக, அரசின் கொள்கையில் திட்டமிட்டு ஓட்டை விடப்பட்டுள்ளது.

‘புதிய எண்ணெய் துரப்பண உரிமக் கொள்கை’ நடைமுறைப்படுத்தப்பட்டு தனியார் நிறுவனங்கள் எண்ணெய் துரப்பணம் செய்ய அனுமதிக்கப்பட்டபோது, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை வெறும் 30 அமெரிக்க டாலர்கள்தான். தற்போது அந்நிறுவனங்கள் எந்த கூடுதல் வேலையும் செய்யாமல், ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை லாபம் பெற்று வருகின்றனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு முறை உயரும்போதும் இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திக்கின்றன. திவாலாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இந்த நிறுவனங்கள்தான் இந்தியாவின் எரிசக்தி தேவையை ஈடுகட்ட வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, விநியோகம் செய்து வருகின்றன.

ஆனால் தனியார் நிறுவனங்கள் ஒரு பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிக்க அரசு 15 டாலர் மானியம் வழங்குகிறது. எடுத்துக்காட்டுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் 2007 கடைசி காலாண்டில் லாப விகிதம் 26 சதவிகிதம் அதிகரித்தது. தற்போதைய விலையேற்றம் நடைமுறைக்கு வரும் முன்னரே, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதன் லாப விகிதம் 35 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இப்படி இந்திய அரசின் கச்சா எண்ணெய் கொள்கை பொதுத் துறை நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாகவும், தனியார் நிறுவனங்கள் லாபத்தை குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. கச்சா எண்ணெய்க்கு மானியம் வழங்குவதில் எந்த வகையிலும் பங்காற்றாத தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்நிறுவனங்களது ஒப்பந்தங்களைப் புதுப்பித்து கூடுதல் பணத்தைô பறிமுதல் செய்தால், அரசுக்குô பெருமளவு பணம் கிடைக்கும்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் ‘விலை உயர்வைச் சமாளிக்க’ என்ற சாக்குடன், மக்களின் தலையில் இடியை இறக்கும் அரசு, தனியார் நிறுவனங்களின் குருட்டு அதிர்ஷ்ட லாபத்தில் கைவைக்க இன்று வரை தயங்கி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக பொருளாதார பேராசிரியர் வி.பி. ஆத்ரேயாவின் நேர்காணல்
நேர்காணல்: சரவணவேல்


தற்போதைய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

V.P.Athreyaகடைசியாக 1970களில் 73லும், 78லும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதற்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் ஓபெக் நாடுகளின் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கவில்லை. அது உண்மைதான். இந்த விலை உயர்வுக்கு வளைகுடா நாடுகளை குற்றம் சொல்லக்கூடாது. உற்பத்தி & தேவை இடையிலான சமன்பாட்டில் ஏற்படும் பிரச்சினையால் தற்போதைய கச்சா எண்ணெய் விலைஉயர்வு ஏற்படவில்லை. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பெறும் வகையில் நடைபெறும் யூக வணிகத்தால்தான் தற்போதைய விலைஉயர்வு எற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க, ஆங்கில முதலீட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறுகின்றன.

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும், அமெரிக்காவும் உள்ள தொடர்பின் பின்னணி என்ன?

கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் தான் புழங்குகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த வர்த்தகத்தில் யூரோ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. இதனால் எண்ணெய் வள நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பு யூரோ பவுண்டுகளாக மாறுகிறது. டாலர் விலை வீழ்ச்சி அடைகிறது. இதனால் அச்சமடைந்த அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் கச்சா எண்ணெய் விலை உயர அமெரிக்கா காரணமாக இருக்கிறது.

மூன்றாம் உலக நாடுகள் உற்பத்தி செய்யும் எந்தப் பொருளின் விலை உயர்ந்தாலும், உடனடியாக வளர்ந்த நாடுகள் அதை செயற்கை முறையில் தயாரிக்கத் தொடங்கிவிடுகின்றன. ரப்பர் விலை உயர்ந்தபோது, செயற்கை ரப்பர் தயாரிக்கப்பட்டது. அந்த வகையில்தான் மூன்றாம் உலக நாடுகளின் கையில் உள்ள கச்சா எண்ணெய்க்கு மாற்றாக உயிரி எரிபொருள் தயாரிப்பில் கவனம் திருப்பப்பட்டது. அமெரிக்காவில் 20 சதவிகித மக்காச்சோளம், பிரேசிலில் 50 சதவிகித கரும்பு உற்பத்தி, ஐரோப்பாவில் தாவர எண்ணெய் போன்றவை உயிரி எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. உயிரி எரிபொருளை அமெரிக்கா பெருமளவு பயன்படுத்த ஆரம்பித்ததால், உணவுப் பொருள் விலைஉயர்வு ஏற்பட்டது.

உணவு உற்பத்திக்குô பயன்படும் நிலம் மாற்றுப் பயன்பாட்டுக்குத் திரும்புவதாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். தற்போது இதன் தாக்கம் பெரிதாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் உணவு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உலக எரிசக்தி வளத்தை கட்டுப்படுத்த அமெரிக்க துடிப்பாக இருப்பது ஏன்?

அமெரிக்க அரசு எண்ணெய் வளத்தை கையகப்படுத்த எப்போதுமே குறியாக இருந்து வந்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போதுள்ள நிலையில் அமெரிக்க பெருமுதலாளிகள் கட்டுப்படுத்தும் எண்ணெய், எரிவாயு சார்ந்த பொருளாதாரமே உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது. முதலாளித்துவ வல்லரசு நாடான அமெரிக்க எப்பொழுதும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கு வசதியாக ராணுவ பலம், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவை அந்நாட்டிடம் உள்ளன.

உலகின் போலீஸ்காரராகச் செயல்பட நினைக்கும் அமெரிக்கா அதற்கு நீண்டகாலத் திட்டம் வகுக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் உலகிலுள்ள வளங்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு மூலம் ஏழை நாடுகளை ஒடுக்கி இதை செயல்படுத்துகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

முதலாவதாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்தார்கள். தற்போது இந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்¦½ய் விலை ஏறுவதற்கு ஏற்ப, கலால் வரியை அதிகரிக்காமல், ஓர் குறிப்பிட்ட அளவுக்கு கலால் வரியை நிலையான ஒன்றாக நிர்ணயிக்கலாம். அப்படி நிர்ணயித்தால் சர்வதேச சந்தையில் விலை உயர்வதற்கு ஏற்ப இங்கும் விலையை ஏற்ற வேண்டிய அவசியமில்லை. மதிப்பு சார்ந்த வரிக்கு பதிலாக, நிலையான வரியை நிர்ணயிக்க வேண்டும்.

மூன்றாவதாக, இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ், எஸ்ஸார், கெயர்ன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் இங்கேயே சுத்திகரிப்பு செய்தாலும், சர்வதேச சந்தை விலைக்கே கச்சா எண்ணெயை விற்கின்றன. அந்த நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்க வேண்டும்.

இந்த கச்சா எண்ணெய் விலைÔயர்வை ஒட்டி மே மாதம் அமெரிக்க செனட்டில் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஒருவர் ‘நுகர்வோரை முதன்மைப்படுத்தும் எரிசக்தி மசோதா’ ஒன்றை கொண்டு வந்தார். எண்ணெய் வணிகத்தால் லாபம் பெறும் நிறுவனங்கள் திறமையைப் பயன்படுத்தி லாபம் பெறவில்லை. அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும் இந்த லாபத்தைக் கட்டுப்படுத்த ‘அதிர்ஷ்ட லாப வரி’ (Windfall profit tax) விதிக்க வேண்டும் என்று அவர் அந்த மசோதாவைì கொண்டு வந்தார். இங்கு இடதுசாரிகள் முன்வைக்கும் கோரிக்கையை அங்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர் முன் வைத்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு கச்சா எண்ணெய் அவசியத் தேவையா? வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம், அணுசக்தி ஒப்பந்தம் போன்றவற்றால் என்னவிதமான பாதிப்புகள் ஏற்படும்?

இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை ஊசலாட்டமாக இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்தபோது வெளியிட்ட குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சுதந்திரமான, பன்முனை உலகம் உருவாக ஆதரவாக இருப்போம் என்று குறிப்பிட்டதற்கு விரோதமாக, அமெரிக்கா சார்பு வெளியுறவுக் கொள்கையை தற்போது கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவிடம் ராணுவ ரீதியிலான நீண்டகால உறவுக்குத் தயாராகி வருகிறது. முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா ஆட்சியின்போது இதற்கு அடித்தளம் இடப்பட்டது. இந்த சார்புப் போக்கு காரணமாகத்தான், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமெரிக்கா சென்றபோது ஆடையை அவிழ்த்து நடத்திய சோதனையைக்கூட பிரச்சினையாக்காமல், அடக்கி வாசித்தார்கள்.

இந்திய அரசும், பெருமுதலாளி வர்க்க நலன்களை காக்கும் ஒன்றுதான். சோவியத் ரஷ்யா வீழ்ந்த பிறகு, அதற்கு மாற்று சக்திகள் இல்லை என்பதால், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. அமெரிக்காவும் சீனாவுக்கு எதிரான பகடைக்காயாக இந்தியாவை தயார்ப்படுத்தி வருகிறது.

அணுசக்தியால் மின்சாரம் கிடைக்கும் என்றாலும், போக்குவரத்துக்கு கச்சா எண்ணெய், எரிவாயு அவசியம். எடுத்துக்காட்டாக, ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயுக் குழாய்த் திட்டம் விரைவாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மத்திய அரசு இதில் தீவிர ஆர்வம் காட்டவில்லை. அத்திட்டம் மெதுவாகவே செயல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் இடுவதில்தான் மத்திய அரசு குறியாக இருக்கிறது. இந்த வகையில் அரசின் அணுகுமுறையில் கோளாறு உள்ளது.

இந்தியாவில் அணுஉலைகளால் தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி என்பது 2025ம் ஆண்டில்கூட ஒட்டுமொத்த மின்சார தயாரிப்பில் வெறும் 7 சதவிகிதமாகவே இருக்கும். தற்போதுள்ள நிலையில் மின்சார தயாரிப்புக்கு நிலக்கரி, நீர்மின் திட்டங்களை விட்டால் வேறு வழியில்லை. போக்குவரத்துக்கு எண்ணெய், எரிவாயுவே தற்போது அவசியம். நீண்டகாலத்தில் எரிசக்தித் தேவையை சமாளிக்க சூரியசக்தி, காற்றாலைகளைப் பயன்படுத்தலாம். இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

Pin It