ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள், தாயகத்தின் விடுதலைக்காக இராணுவத்தை எதிர்த்துப் போராடி களப்பலியான மாவீரர்கள் நினைவாக தஞ்சையில் கடுமையான உழைப்பினால் கட்டி எழுப்பப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றம் - தமிழினத்தின் வரலாற்றுச் சின்னம்! இழிவையும், மடமையையும், மக்கள் பொதுப் புத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கிற கோயில்கள் அல்ல இவை. இந்த முற்றம், தமிழர்களின் உள்ளத்தில் விடுதலை வேட்கையை கனலாக மூட்டி நிற்கிறது.

தமிழ்நாட்டில் இத்தகைய எழுச்சியூட்டும் முற்றங்கள் தான் கோயில்களுக்கு மாற்று என்று நாம் கருதுகிறோம். இந்த முற்றத்தைக் கட்டி எழுப்ப எத்தனையோ தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து உழைத்திருக்கிறார்கள். தங்கள் ஆற்றல்களை பங்களிப்புகளாக வழங்கியிருக்கிறார்கள். அது செங்கல்லும் சிமெண்டும் கலந்த கட்டிடம் மட்டுமல்ல; உணர்வுகளைச் சுமந்து நிற்கும் பாசறையும்கூட!

அத்தகைய முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை நெஞ்சில் ஈரமின்றி அதன் சுற்றுச் சுவரையும் அழகு மிளிர உருவாக்கப்பட்டிருந்த நீரூற்றுப் பூங்காவையும் உடைத்து சிதைத்திருப்பது ஆணவத்தின் உச்சமான வெளிப்பாடு. அதிகார பலத்தை மட்டுமே நம்பிக் கொண்டு தமிழக அரசு எடுத்த இந்த நடவடிக்கை வன்மையான கண்டனத்துக்குரியது; வரலாற்றுக் களங்கம்!

அரசின் உரிய அனுமதியோடு தான் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்று உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவர்

பழ. நெடுமாறன் கூறியிருக்கிறார்.

அரசு நிலத்தின் மீதான ஆக்கிரமிப்பு என்று அரசு கூறுவது உண்மை என்றே வாதத்துக்கு ஏற்றுப் பேசுவோம். அப்படியானால், தடுப்புச் சுவர் எழுப்பும்போதே ஏன் தடுக்கவில்லை? குறைந்தது அதை இடிப்பதற்கு முன் உரிய தாக்கீது அனுப்பி விளக்கம் கேட்க வேண்டிய நடைமுறைகளை ஏன் பின்பற்றவில்லை? இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.

பொது இடங்களையும் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு நெருக்கடிகளை உருவாக்கும் எத்தனையோ கோயில்கள் வீதிக்கு வீதி ஆக்கிரமித்துக் கொண்டு விபத்துகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனவே; அவைகளை நோக்கி இந்த இடிப்பு எந்திரங்கள் ஏன் திரும்பவில்லை என்று கேட்கிறோம்.

காவல்துறையின் இடிப்புகளைத் தொடர்ந்து மக்களே கொதித் தெழுந்து கம்பி வேலி அமைத்து அரணமைத்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதைப் புரிந்து கொள்ளாமல், அவர்கள் மீது தடியடி நடத்தியிருப்பதையும் பழ. நெடுமாறன் போன்ற மூத்த தலைவர்களையும் தமிழின உணர்வாளர்களையும் கிஞ்சித்தும் மனிதநேயம்கூட இல்லாமல் கைது செய்து சிறையிலடைத்திருப்பதையும் - இனத்தின் எதிரிகளால் கூட நியாயப்படுத்த முடியாது. தமிழின உணர்வை காலில் போட்டு நசுக்கும் நடவடிக்கைகள் ஆகும்! அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு நாளும் இந்த அரசு அவமதிப்பை சந்திக்கும் நாட்களே ஆகும்.

தமிழக முதல்வர் ஜெயலிதா, ஈழத் தமிழர் பிரச்சினைக்காகவும் தமிழக உரிமைகளுக்காகவும் மேற்கொண்டுவரும் ஒவ்வொரு நடவடிக்கையை யும் உறுதியாக தமிழின உணர்வாளர்கள் அரசியல் காழ்ப்பு இன்றி ஆதரித்தே வந்துள்ளார்கள்.

ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நின்ற துரோக சக்திகளுக்கு வேண்டுமானால் இந்த ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’, ‘கருவேல் முள்ளாக’ குத்தியிருக்கலாம்.; ஆனால், தமிழக அரசு முற்றத்தின் சுற்றுச் சுவர்களை இடித்துத் தள்ளிய தவறான செயல்களால் அதன் ஈழத் தமிழர் ஆதரவு நிலைப்பாடு களிலேயே பலத்த சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த பெரியார் படமும், தமிழர் கல்விக் கண் திறந்த காமராசர் படமும் முற்றத்தில் இடம் பெறவில்லை என்பதில் நமக்கு அழுத்தமான முரண்பாடு உண்டு.

அந்த துரோகங்களை வேறு களங்களில் நாம் சந்திப்போம். ஆனாலும், இந்தப் பிரச்சினைகளோடு மட்டும் தொடர்புபடுத்தி முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவிடத்தை நாம் பார்க்கத் தயாராக இல்லை. கருத்து மாறுபாடுகளுக்கும் அப்பால் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முக்கியத்துவத்தை நாம் மதிக்கிறோம்.

இந்திரா கொலையில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டவர் களுக்கு பொற்கோயில் வளாகத்தில் சிலை அமைக்கிறது சீக்கியர் இனம்; அவர்களின் குடும்பத்தினர் பொற்கோயிலுக்குள் கவுரவிக்கப்படு கிறார்கள். இது சீக்கியர் வெளிப்படுத்தும் உணர்வு. ஆனால், சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் சித்திரவதைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் பலியான தமிழர்களின் நினைவுச் சின்னங்களைக்கூட அவமதிக்கப்படும் நிலையில் தமிழினம் நிற்கிறது! தமிழின ஓர்மை சாதியமைப்பால் வலிமையற்றுப் போய் கிடக்கிறது!

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதையும், பழ. நெடுமாறன் உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டதையும் திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்களை விடுதலை செய்து, இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரை திருப்பிக் கட்டித் தருவது ஒன்றே தமிழக அரசு தனது களங்கத்தைத் துடைத்துக் கொள்ளும் நடவடிக்கையாக இருக்க முடியும்!

Pin It