சுவர்களில் அப்படியெல்லாம் நெத்தியடி வாசகங்களை (பிள்ளை பெற அரச மரத்தைச் சுற்றினால், அபார்ஷனுக்கு எந்த மரத்தைச் சுற்றுவாய்!) எழுதுகிற ஆள் யாருன்னு அப்போது எனக்குத் தெரியாது. நானும் விசாரித்தது கிடையாது. சமீபத்தில் - அதுவும் கடந்த ஒரு மாதம் முன்புதான் தெரிந்தது... அவர் பேர் சுவர் எழுத்து சுப்பையா’.

கோயம்புத்தூரில் இருந்து ஒரு விழாவில் கலந்து கொள்ள என்னை அழைக்க வந்திருந்தார்கள். “சுவர் எழுத்து சுப்பையா அவர்களின் சுவர் எழுத்துகளை எல்லாம் சேர்த்து ஒரு புத்தகமாக வெளியிடுகிறோம்” என்றார்கள். “யாருங்க அந்த சுவர் எழுத்து சுப்பையா?” என்று அவர்களிடம் விசாரித்தபோது, உண்மை தெரிந்தது.“ஒரு பெரியார் தொண்டர். அவர் எப்படின்னா.. கோயம்புத்தூர், திருச்சி, திருப்பூர் என்று ஊர் ஊரா போவார். கையிலே கறுப்பு பெயின்ட், பிரஷ் வைத்திருப்பார். நாள் முழுக்க பெரிய, பெரிய சுவர்களில் எல்லாம் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை எழுதிக்கிட்டே போவாரு.

அங்கே இருக்கிற ஏதாவது பெரியார் தொண் டரின் வீட்டில் சாப்பாடு. திண்ணையிலே படுத்துக் கொள்வார். இரண்டு நாள் கழித்து பார்த்தால், அங்கு இருக்க மாட்டார். அப்படியே நடந்து அடுத்த ஊருக்கு போயிருப்பார். இப்படியே கன்னியாகுமரி வரை போவாரு.

அப்படி பெரியாரின் பகுத்தறிவு கொள்கை உலகிற்கு தெரிய உழைத்த அந்த மானமிகு மனிதரைக் கவுரவிக்கும் விதமாக அவருடைய சுவர் எழுத்துகளை எல்லாம் திரட்டிப் புத்தகமாக்கப் போகிறோம். நீங்க கலந்துக்கணும்” என்றார்கள். நான் இப்ப நினைத்துப் பார்க்கிறேன். நாற்பது ஆண்டுக்கு முன்பு நான் படித்த அந்தச் சுவர் எழுத்துகள் மறுபடியும் என் மனக்கண் முன் வந்து பளிச்சிட்டது. என் விடலைப் பருவத்தில் கவன ஈர்ப்பு செய்த எழுத்துகள் அவை. பெட்டிக் கடையில் கணக்கு வைத்து புகைப் பிடித்து, சினிமா பார்த்துக் கொண்டு ஊர் சுற்றிய பதினெட்டு வயது பையனுடைய கவனத்தைத் திரும்ப வைத்திருக்கிறார். பெரியாருடைய தொண்டரான அந்தச் சுவர் எழுத்து சுப்பையா எவ்வளவு பெரிய ஆள் என்பது இப்ப என்னுடைய 56 வயதில் புரிகிறது!

- இனமான நடிகர் சத்தியராஜ் ‘ராணி’ இதழில் (12.6.2011) எழுதியதிலிருந்து.

கழகப் போராட்டம் எதிரொலி: குறுக்கிளையான்பாளையம் நோக்கி படையெடுக்கும் தலைவர்கள்


அன்னூர் ஒன்றியம் குறுக்கிளையான்பாளையம் கிராமத்தில் தலித் மக்கள் பொதுக் குழாயில் தண்ணீர் எடுக்க சாதி வெறியர்கள் மறுத்ததை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் போராடி தண்ணீர் பிடிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் கடந்த ஜூலை 3 ஆம் தேதி அக்கிராமத்துக்கு தனித்தனியாக சென்று நடந்த சம்பவங்களை கேட்டார்களாம்!

Pin It