ஒன்றிய அரசு கூச்சமின்றி ‘பொய் பேசும்’ என்பதற்கு சான்றாக ஒரு செய்தி வெளி வந்துள்ளது.

கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ஆக்சிஜன்’ சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படுகிறதா? எவ்வளவு சிலிண்டர் - எந்தெந்த மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது? இவை முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒன்றிய அரசு 2020இல் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழுவிடம் தகவல்  பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தகவல் அளிக்க ஒன்றிய அரசு மறுத்து விட்டது. வணிக இரகசியம் காப்புரிமைச் சட்டம், அமைச்சரவையின் இரகசிய முடிவுகள் என்ற காரணங்களினால் இது குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்று ஒன்றிய அரசு கடந்த வாரம் மறுத்தது.

தகவல் உரிமை பெறுவதற்கான அமைப்பின் தலைமை அதிகாரி மற்றும் அரசும் ஒட்டு மொத்தமாக இப்படி மறுப்பது நேர்மையல்ல. இதனைத் தொடர்ந்து பெட்ரோலியம் மற்றும் இரசாயனத் துறைக்கான செய்தித் தொடர்பு அதிகாரி, ‘ஆக்சிஜன் கண்காணிப்புக் கமிட்டி’ என்ற ஒன்றே அமைக்கப்பட வில்லை. கேள்வியைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதால் கமிட்டியின் செயல்பாடுகளை வெளியிட முடியாது என்று அரசு சார்பில் கூறி விட்டோம்; கமிட்டி என்ற ஒன்றே கிடையாது” என்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார்.

‘இந்து’ ஆங்கில நாளேடு மட்டும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதோடு ஆக்சிஜன் கண்காணிப்பு கமிட்டி ஒன்று, ஏப்.4, 2020இல் அமைக்கப்பட்டது உண்மை என்றும், அதற்கான உத்தரவு நகல், தன்னிடம் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. கமிட்டியின் தலைவராக அப்போது பெட்ரோலியத் துறை செயலாளராக இருந்த குருபிரசாத் மொகாபாத்ரா நியமிக்கப்பட்டார் என்றும் அந்தக் கமிட்டி பல முறை கூடி, ஆக்சிஜன் குறித்த பிரச்சினைகளை விவாதித்தது என்றும் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை குறிப்பேடுகளில் பதிப்பிடப் பட்டிருக்கிறது என்றும் அத்தனையும் ‘இந்து’ ஏட்டிடம் இருக்கிறது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்றிய ஆட்சி எவ்வளவு கேவலமான ஆட்சி என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா? ‘இராமராஜ்யம்’ என்றால் இப்படித்தான் இருக்கும்.

உ.பி. ‘ரவுடிகள்’ பட்டியலில் ‘பிராமணர்களே’ அதிகம்

உ.பி. மாநில முதல்வர் ஆதித்யநாத், தாக்கூர் சமூகத்தைச் சார்ந்தவர். உ.பி.யில் பார்ப்பனர்கள் மக்கள் தொகை அதிகம். 13 சதவீதம் பேர் இருக்கிறார்கள். தாக்கூர் சமுதாயத்துக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையே மோதல்கள் இருந்து கொண்டே இருக்கும். உ.பி. ரவுடிகள் பட்டியலில் பார்ப்பனர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.  ஆதித்தியநாத், கடந்த 2017 ஏப்ரல் முதல் ஜூலை வரை 630 ‘ரவுடிகள்’ மீது வழக்கு தொடர்ந்து, அவர்களின் ரூ.1848 கோடி சொத்துகளை பறிமுதல் செய்துள்ளார். இவர்களில் பெரும்பாலோர் ‘பிராமணர்கள்’!

‘பிராமணர்கள்’ மீது மட்டுமே ஆதித்யநாத்  குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக ‘பூதேவர்கள்’ குற்றம் சாட்டுகிறார்கள். காவல்துறையினரை சுட்டுக் கொண்ட ஒரு ‘பிராமண’ ரவுடியை உ.பி. காவல்துறை என்கவுண்டர் செய்துள்ளது. மாயாவதி, “பிராமணர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தான் பாது காப்பானது” என்று அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார். ஆதித்யநாத் பார்ப்பனிய கருத்தியலை ஏற்றுக் கொண்டவர்தான்; ஆனால் ஜாதி அடிப்படையில் பார்ப்பனர்களை எதிர்க்கிறார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It