ஜாதித் திமிரோடு பேசிய நடிகை, தலித் ஊழியரை காலில் விழ வைத்த ஜாதி வெறியர்கள் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகைக்கு எதிராக மதுரையில் கழகத் தோழர்கள் புகார் மனு அளித்தனர்.

அன்னூர் ஒன்றியத்திலுள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணி செய்து வருபவர் முத்துசாமி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.

அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்று அழைக்கப்படும் கோபாலசாமி என்பவர் தன்னுடைய சொத்து விவரங்களை சரிபார்ப்பதற்காக ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச் செல்வி, “ஆவணங்கள் முறையாக இல்லை. எனவே, முறையான ஆவணங்களை கொண்டு வாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதில் ஆத்திரமடைந்த கோபிநாத், கலைச்செல்வியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது உதவியாளர் முத்துசாமி கோபிநாத்தைத் தடுக்க முயன்றிருக்கிறார்.

இதில் மேலும் ஆத்திரமடைந்த கோபிநாத், ஜாதிப் பெயரைச் சொல்லி, முத்துசாமியைத் தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். “நான் நினைத்தால் நீ இந்த ஊரிலேயே இருக்க முடியாது. நீ இந்தப் பணியில் தொடர வேண்டுமென்றால், என் காலில் விழுந்து மன்னிப்புக் கேள்” என்று மிரட்டியுள்ளார்.

தற்போது, முத்துசாமி கோபிநாத்தின் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. கோபிநாத் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, கலைச்செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேவேளையில், கோபி நாத்தும், கலைச் செல்வி, முத்துசாமி ஆகியோர் மீது காவல் நிலையத்தில், “தன்னைத் தகாத வார்த்தை களால் திட்டியதாக” புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், கோபிநாத் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவெடுத்தது. அரசு ஊழியரைப் பணி செய்ய விடால் தடுத்து, ஜாதியைச் சொல்லித் திட்டியது என வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜாதி வெறி நடிகை

மீராமிதுன் என்ற நடிகை, பட்டியலின மக்களை ஜாதி ரீதியாக கேவலமான சொற்களால் ஜாதித் திமிரோடு பேசிய ‘வீடியோ’ வைரலாகி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பட்டியலின திரைப்பட இயக்குநர்கள், திரைப்படத் துறையிலிருந்தே வெளியேற வேண்டும் என திமிரோடு பேசி இருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

maniamuthan dvkபட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ள நடிகை மீரா மிதுனை தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 07.08.2021 அன்று மதுரை மாநகர காவல் துறை இணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் திவிகவின் மதுரை மாவட்ட செயலாளர் மணியமுதன் மா.பா., மாவட்ட செயலாளர் திலீபன் செந்தில், மாநகர தலைவர் காமாட்சி பாண்டியன், திருமங்கலம் பொறுப்பாளர் மாளவிகா, கல்மேடு பொறுப்பாளர் பிரபாகரன், ஆதித்தமிழர் பேரவையின் தலித்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pin It