ஆங்கில ‘இந்து’ ஏட்டின் ஞாயிறு மலரில் (ஜூலை 28, 2019) ருச்சின் ஜோஷி என்ற எழுத்தாளர், ‘ஜெர்மன் காட்டிய வழியில் இந்தியும் பயணிக்கிறதா’ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் ஜெர்மன் மொழி 1925லிருந்து 1945 வரை இனவெறி - இனப்படுகொலைகளோடு பிரிக்க முடியாத தொடர்புடைய மொழியாகவே உலக அளவில் கருதப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார்.

“இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பிறகு ஜெர்மன் மொழி உலக அளவில் சிலகாலம் வெறுக்கப் பட்ட மொழியாகவே இருந்தது. தலைசிறந்த யூத எழுத்தாளர்கள், ஜெர்மானிய மொழியில் உயர்ந்த இலக்கியங்களைப் படைத்திருந்தாலும்கூட 1925 லிருந்து 1945ஆம் ஆண்டு வரை கொடூரமான மக்கள் விரோத கருத்துகளான இனவெறி - இனப் படுகொலைகளை சுமந்து செல்லும் வாகனமாக ஜெர்மன் மொழி மாற்றப்பட்டதே, இந்த புறக் கணிப்புக்குக் காரணம். ஜெர்மன் கொடூரமான ஆபத்தான மனித வதை மொழியாகவே கருதப்பட்டது. அப்பாவி மக்களை இனப்படுகொலைக்குள்ளாக்கும் இராணுவ உத்தரவுகளுக்கான மொழியாக அது பார்க்கப்பட்டது.

இந்தி மொழியும் அவ்வாறு பார்க்கப்படும் ஆபத்துகள், அடுத்த சில ஆண்டுகளில் உருவாகிடக் கூடும். மனிதர்களை அடித்துக் கொல்லுவதற்கும் மதவெறியைத் திணிப்பதற்கும் குடியரசு அமைப்பை ஒழிப்பதற்குமான மொழியாக ஜெர்மனியைப்போல் இந்தியையும் வெறுக்கும் நிலை வரக்கூடும். இந்தி மொழி இதற்கான வாகனமாகவே மாற்றப்பட்டு அரசு அதிகாரம் வழியாக திணிக்கப்படுகிறது. சமூகத்தில் கொடிய நஞ்சைப் பரப்பும் கருத்துகளின் வடிவமாகி வரும் இந்தியின் திணிப்பை கட்டுப்படுத்தியாக வேண்டும்; இல்லையேல் அதுவும் வெறுப்பு மொழியாகி விடும்” என்று அந்தக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதே கருத்தை பெரியார் 1929ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறார். “தமிழர்கள் மீது இந்தியைத் திணிக்கும் ஆரியர்களின் கலாச்சாரத்தையும் சமஸ்கிருதத்தையும் தமிழர்கள் மீது திணிக்கும் நோக்கத்துடன்தான் இந்தி திணிக்கப்படுகிறது” என்று பெரியார் கூறினார்.

“இந்தி மொழி என்பது தமிழ் மக்களுக்கு விரோதியான ஆரிய மொழியாகும். அதிலுள்ள வாசகங்கள் முழுதும் ஆரியப் புராணங்களும், மூடப்பழக்க வழக்கங்களும் கொண்டனவும் பார்ப்பனர்களின் உயர்வுக்கு ஏற்பட்டனவும் ஆகும். இந்த நாட்டில் இப்போது சமஸ்கிருதம் இருப்பது போலவும் அது உபயோகப்படுவது போலவும் இந்தி ஒரு சிறிதும் தேவையில்லாததாகும்.” - பெரியார் - 20.1.1929 ‘குடிஅரசு’

Pin It