திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:
காவல்துறையில் தனிப் பிரிவு : தீர்மானம் : 1
ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.
தேச பக்தி : தீர்மானம் : 2
தேசபக்தி என்பது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருளாக கருதுவது, தேசபக்தி என்ற உணர்வை சிறுமைப்படுத்துவதேயாகும்; தேசிய கீதமான
ஜன கண மன பாடலை, பொழுது போக்கு இடமான திரையரங்குகளில் – ஒலிபரப்பி அதற்கு திரைப்படம் பார்க்க வரும் பார்வையாளர்களைக் கட்டாயப் படுத்தி எழுந்த நிற்கச் சொல்கிறது உச்ச நீதிமன்றம். அதே போன்று தேசபக்தி பாடல் என்ற ஒன்று அரசியல் சட்டத்திலேயே இல்லாத நிலையில் பள்ளிகளில் – தனியார் நிறுவனங்களில் “வந்தே மாதரம்” பாடலை பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கிற்கே தொடர்பில்லாத ஒரு கருத்தை அண்மையில் தெரிவித்திருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு, இந்து இளைஞர்களை வெறியூட்டி தயார் செய்யும் ‘ஆனந்த மடம்’ நாவலில் அதன் கதைப் பின்னணியில் எழுதப்பட்ட பாடலை தேசிய பாடலாக்கி மத சார்பற்ற நாட்டில் குடி மக்களை அனைவரையும் பாடச் செய்வது, மதச் சார்பின்மை கொள்கைக்கு எதிரான- மத வெறிக்கு உயிரூட்டும் செயலாகிவிடும் என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. அரசியல் சட்டத்தில் தேசியக் கொடி, தேசிய கீதம் பற்றி கூறப்பட்டுள்ளதே தவிர, தேசியப் பாடல் என்று ஒன்று கூறப்படாத நிலையில் இந்த வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கு கட்டாயப் படுத்துவது, சட்டத்திற்கு புறம்பானது என்பதால் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.
வெளியுறவு கொள்கை : தீர்மானம்: 3
இந்திய அரசியல் சட்டத்தின் 253ஆவது பிரிவு வெளிவிவகாரத் துறை தொடர்பான முழு அதிகாரங்களை யும் நடுவண் அரசுக்கே வழங்கியிருக் கிறது; அதே நேரத்தில் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநிலங் களுக்கு அரசியல் சட்டம் வழங்கி யிருக்கும் உரிமைகளையும், வெளி விவகாரத்தோடு தொடர்பு படுத்தி, நடுவண் அரசு பறித்துக் கொள் கிறது. வெளிவிவகாரத் துறையில் மாநில அரசுகளின் உரிமைகள் முற்றாக விலக்கி வைக்கப்பட் டுள்ளதால் ஈழத் தமிழர் பிரச்சனை உள்ளிட்ட, தமிழர் களின் பல உரிமை பிரச்சனைகளில் நடுவண் அரசே தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருகிறது.
ஆஸ்திரேலியா போன்ற பல நாடு களில் வெளிநாட்டுக் கொள்கைகள் – சர்வதேச உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் தொடர்புடைய மாநில அரசுகளின் ஒப்புதலுக்குப் பிறகே முடிவெடுக்க முடியும் என்ற நிலை இப்போதும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றோம். இந்த நிலையில் இந்திய வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுக்கும் முன்பு, குறைந்தபட்சம் தொடர்புடைய மாநிலங்களோடு கலந்து ஆலோசித்து அதன் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற வகையில் நடுவண் அரசு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தமிழர் உரிமைக்காக போராடும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இக்கருத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.
இந்தி திணிப்பு : தீர்மானம் : 4
1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இராஜகோபாலாச்சாரி கட்டாயமாக இந்தி மொழிப் பாடத்தைத் திணித்தபோது, ‘பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும் இணைந்துப் போராடி, இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது தமிழ்நாடு ஆகும். 1965ஆம் ஆண்டி லிருந்து அலுவல் மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறிய நிலையிலும் தமிழ் நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1968இல் இருமொழித் திட்டத்தை அறிவித்த நாடு தமிழ்நாடு. 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் இந்தியை அலுவல் மொழி என்று அறிவித்த நிலையிலும் அந்த சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று 1976ஆம் ஆண்டு நடுவண் அரசின் அலுவல் மொழி விதிகளே ஏற்றுக் கொண்டது என்பது வரலாறு. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திக்கு இடமே இல்லாத நிலையில் நடுவண் பா.ஜ.க. ஆட்சி இப்போது இந்தித் திணிப்பு வழியாக சமஸ்கிருத பார்ப்பனப் பண்பாட்டைத் திணிக்க முயல்கிறது.
நாடாளுமன்றத்தில் இந்தி பேசும் மாநில அமைச்சர்கள் இந்தியிலேயே பேசுவார்கள் என்றும், தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பாடத் திட்டத்தின்கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் – விமான நிலைய அறிவிப்புகளில் -மைல் கற்களில் இந்தித் திணிக்கப்படு வதோடு, ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல மொழி, இன, பண்பாடுகளைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை, இந்தி சமஸ்கிருத – இந்து – இந்தியா என்ற ஒற்றைத் தேசமாகக் கட்டமைக்க முயல்கிறது. இந்த ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று நடுவண் அரசிற்கு இம்மாநாடு எச்சரிக்க விரும்புகிறது.
தமிழர்களின் தனித்துவமான சுய மரியாதை – சமூக நீதிப் பண்பாட்டை சீர்குலைக்கும் இந்தப் பார்ப்பனியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்திட தமிழர்கள் கட்சி, இயக்க வேறுபாடு களைக் கடந்து அணி திரளவேண்டும் என்று இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
தடுப்புக் காவல் சட்டங்கள்: தீர்மானம் : 5
குற்றமிழைத்தவர் களைத் தண்டிக்க ஏற்கனவே இந்தியத் தண்டனைச் சட்டம் இருக்கும்போது கூடுதலாக, அரசுகள் தடுப்புக் காவல் சட்டங்களை இயற்றிக் கொள்கின்றன. பிணையில் வெளியே வருவதைத் தடுப்பதும், குறைந்தது ஓராண்டு காலமாவது சிறையில் முடக்கி வைப்பதுமே இதன் நோக்கம். இந்த சட்டங்கள் அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கும், சமூக, அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்கு வதற்குமே பயன்படுத்தப் படுகின்றன. பிரிட்டிஷ் ஆட்சியில் ரவுலட் சட்டத்தை எதிர்த்தவர்கள் “சுதந்திர” இந்தியாவில் அதைவிடக் கொடூரமான ஒடுக்குமுறை சட்டங் களைக் கொண்டு வந்தும், ஆங்கிலேயர்கள் நம்மை ஒடுக்கு வதற்குப் பயன்படுத்திய அதே “தேச துரோக” சட்டங்களை இப்போதும் மக்களுக்கு எதிராக ஏவி மக்களை ஒடுக்குவதும் ஜனநாயகத்திற்கே தலைகுனிவாகும்.
காஷ்மீரிலும், பல வடகிழக்கு மாநிலங்களிலும் இராணுவச் சட்டங்களே கோலோச்சி வருகின்றன. இத்தகைய தடுப்பு காவல் சட்டங் களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மரண தண்டனை வழங்கு வதற்கும், பிணையில் வெளிவராமல் சிறைக் காவலில் தடுத்து வைப்பதற்கும் பயன்படுத்துவது சட்ட விரோத மானது என்பதுடன் தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதாகும் என்று அண்மையில் கூட உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் குண்டர் சட்டம் கண்மூடித்தனமாக சமூக செயல்பாட்டாளர்கள் மீதும் ஏவி விடப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது. முள்ளிவாய்க் கால் இனப் படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர் களுக்காக அஞ்சலி தெரிவிக்க சென்னை மெரீனா கடற் கரையில் கூட முயன்ற திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார், வெறும் துண்டறிக்கை வழங்கிய மாணவி வளர்மதி ஆகிய தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை தமிழக அரசு ஏவி விட்டிருப்பது சட்டம் மிக மோசமாக முறையற்றுப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஈழத்தில் இறுதிப் போரில் நடந்தது இனப்படுகொலையே என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த அதே குரலை – அதே உணர்வை வெளிப்படுத்த முயன்றவர்கள் மீது “அம்மாவின்” ஆட்சி என்று கூறிக் கொள்கின்றவர்கள் குண்டர் சட்டத்தை ஏவி விட்டிருப்பது - அவர் களின் தலைவர் அறிவித்த கொள்கை களுக்கு இழைக்கும் துரோகம் என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டுவதோடு, கைது செய்யப் பட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்து கிறது.
உணவு உரிமை : தீர்மானம் : 6 - பசு, எருது, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கக் கூடாது என்று பா.ஜ.க பிறப்பித்துள்ள உத்தரவு மக்களின் உணவுக் கலாச்சார உரிமைகளையும், மாநில உரிமை களையும் பறிப்பதாகும். உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தையும், விவசாயி களின் வாழ்வுரிமையையும் கடுமையாக பாதிக்கும் இந்த ஆணையை நடுவண் அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
உழைக்கும் மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் மாட்டிறைச்சியை மதத்தைக் காட்டி தடுக்கவும், அதன் விற்பனைகளுக்கு நெருக்கடிகளை கொண்டு வரவும் முயற்சிப்பது இந்தியாவைப் பார்ப்பன தேசமாக்கும் சூழ்ச்சியே ஆகும். அரசின் இந்த கலாச்சார உரிமைப் பறிப்பு களுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்கள் வீறு கொண்டு எழுந்து நிற்கின்றன.
இந்நிலை தொடருமானால் வட நாட்டிலிருந்து தென்னாட்டை பிரித்து விடுங்கள் என்ற போராட்ட முழக்கங்கள் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் ஒலிக்க தொடங்கியிருப்பது, தென்னகத்தின் கொதி நிலையை உணர்த்துகின்றது என்பதோடு வட நாட்டுப் பார்ப்பன பண்பாட்டுக்கு எதிராக உருவாகி வரும் இந்த எழுச்சியை வளர்த்தெடுத்து, தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று இந்த மாநாடு உறுதியேற்கிறது.
தனி அரசியல் சட்டம் : தீர்மானம் : 7 - இந்திய அரசியலமைப்பு – இந்தி யாவை ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அறிவிக்கிறது. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற நாடு இல்லை; ஆனால் மாநிலங்களின் ‘இறையாண்மை’யை ஒடுக்கி, இந்தியாவை ஒற்றை தேசமாக்கி ஒற்றைப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனிய – வேத மதப் பண்பாட்டை – நடுவண் பா.ஜ.க. ஆட்சி கல்வி, மொழி, உணவு, பண்பாட்டுத் துறை களில் திணித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மாநிலப் பட்டி யலிலிருந்த கல்வி உரிமை பறிக்கப் பட்டு, ஆள் தூக்கி அடக்குமுறை சட்டங்களும் மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் இந்த உரிமை பறிப்புகளைத் தடுத்திடவும், தமிழ்நாட்டுக்கே உரிய சமூக நீதி – சுயமரியாதைப் பண்பாடுகளைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கவும் தமிழ்நாட்டுக்கு தனியான அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் உரிமைப் போராட்டத்தை தொடங்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது. அண்டை நாடான மியான்மார் நாட்டில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ள நிலையில் அந்நாட்டில் அடங்கியுள்ள 7 மாநிலங்கள் –7 மண்டலப் பிரதேசங்கள் தனித்தனியாக அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்று மியான்மார் அரசே முடிவெடுத்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆயுதம் தாங்கிப் போரிட்ட போராளிக் குழுக்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வரு கிறது. மாறி வரும் சர்வதேச சூழல்களைக் கருத்தில் கொண்டு ஒற்றை ஆட்சி – ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை எதிர்க்க தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங் களுக்கும் தனித்தனியாக அரசியல் சட்டத்தை உருவாக்கிட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அய்.நா. பொது அவையின் உரிமை சாசனத்தில் 1514 (15)வது பிரிவு 1960ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பு வழங்கியுள்ள தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இந்தியாவின் பன்முகத் தன்மை பன்முகக் கலாச்சாரத்தைக் காப்பாற்றிட விரும்பும் தேசிய இனங்கள் விரும்பினால் பிரிந்து போகும் உரிமையுள்ள சுய நிர்ணய உரிமை கொண்ட தன்னாட்சி என்ற இலட்சியத்தை நோக்கிய விவாதங் களைத் தொடர வேண்டிய அவசியத்தையும் இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.