தலித் மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஜாதிவெறித் தாக்குதல் அதிகரித்து வருவது தமிழ்நாட்டுக்கே அவமானம்! ஆடி மாதம் வந்து விட்டால் போதும்; கிராமத் திருவிழாக்களில் ஜாதி வெறியாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது. சங்கராபுரம் வட்டத்தில் சேஷ சமுத்திரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் அம்மன் தேர் ஊர்வலம், ஊர் பொதுச் சாலையில் வரக்கூடாது என்று ஜாதிவெறியோடு தேர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, தலித் மக்கள் குடியிருப்புகளையும் எரித்ததோடு, பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினரையும் தாக்கியுள்ளனர்.

 இந்தியாவின் ‘சுதந்திர’ நாளை தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை நாட்டின் ‘குடிமக்களாகவே’ ஏற்க முடியாது என்று ஜாதி வெறியர்கள் ஆணவத்தோடு கொக்கரிக்கிறார்கள். இதில் மிகப் பெரிய கொடுமை, பா.ம.க. நிறுவனர், மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கைதான். தாழ்த்தப்பட்ட மக்களின் அம்மன் தேர், பொது வீதியில் வரக் கூடாது என்று தடுக்கும் ‘தீண்டாமை-ஜாதி’ வெறியையோ, தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்ததையோ, முற்றிலுமாக புறந்தள்ளி விட்டு, ஜாதிவெறியர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக மட்டும் கூறி மனித உரிமை மீறல் என்று கண்டித்துள்ளார். ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டாமையும் ஜாதி வெறியையும் பாதுகாப்பதுதான் ‘பாட்டாளி’களுக்கான அடையாளமா என்று கேட்கிறோம். இவர்கள்தான் தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தங்களிடம் தரவேண்டும் என்று மக்களிடம் மனு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 இதேபோல், மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் கிராமத்தில், தலித் மக்களின் ‘சாமி’ ஊர்வலம் பொது வீதிகளில் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜாதி வெறியர்கள் தலித் மக்களை வெட்டியிருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் கள்ளர்கள் என்ற ஜாதிப் பிரிவினர் மட்டுமே தேர்வடம் பிடிக்க வேண்டும். தலித் மக்கள் தேர் நின்று போகும்போது, பின்னால் இருந்து தள்ளிவிட வேண்டுமே தவிர, ‘தேர் வடம்’ பிடிக்க முடியாது என்று தடை போட்டு வருகிறார்கள். 1934ஆம் ஆண்டிலேயே காந்தியார் தேவ கோட்டைக்கு வந்து இரு பிரிவினருக்கும் ‘சமாதானம்’ செய்ய முயன்றார். 1875ஆம் ஆண்டு இந்தத் தேரை இழுப்பதில் கலவரம் ஏற்பட்டு, 8 பேர் கொல்லப்பட்டார்கள். 1998ஆம் ஆண்டு தலித் மக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டு வரும் ‘தீண்டாமை’ அவமானத்துக்கு எதிராக தங்களுக்கும் தேர்வடம் பிடிக்கும் உரிமை கோரினார்கள். பழுதாகிக் கிடக்கும் தேரை சரி செய்வதற்காக கடந்த சில ஆண்டுகளாக தேரோட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து அற நிலையத் துறைப் பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ள ‘தேரை’ சரி செய்யாமல் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 ‘கிராமக் கடவுள்கள்’ பார்ப்பனிய சடங்குகளுக்கு எதிரானவை என்றும், அதில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் இருப்பதாகவும் தமிழின உணர்வாளர்களிலேயே சிலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள். கிராமக் கடவுள்கள் ஜாதிவாரியாகப் பிரிந்து கிடப்பதும், அதன் விழாக்களில் ஜாதி வெறி வெளிப்படுவதும்தான் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களா என்று நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

 ஜாதி எதிர்ப்பைப் பேசிய பெரியார், அதில் பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றையும் இணைத்துக் கொண்டு, இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாமல் பிணைந்திருப்பதை சுட்டிக்காட்டினார். இப்போது நடக்கும் கலவரங்களில் இந்த மூன்றும் இணைந்தே நிற்கின்றன. சொல்லப் போனால் கடவுள் பக்தியைவிட ஜாதி வெறிதான் முந்திக் கொண்டு நிற்கிறது. அதனால்தான் அம்மன் தேர் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசுகிறார்கள். கண்டதேவி தேர் ஓடாவிட்டாலும் பரவாயில்லை; ‘தலித்’ மக்கள் வடம் பிடிக்கக் கூடாது என்கிறார்கள்.

 கடவுள் மறுப்பை கொள்கையாக ஏற்றுக் கொண்ட பெரியார் இயக்கம், அனைத்துப் பிரிவினருக்குமான கோயில் நுழைவையும் அர்ச்சகர் ஆகும் உரிமையையும் வலியுறுத்தி வருவதுபோல இந்த ‘திருவிழா’க்களில் திணிக்கப்படும் ‘தீண்டாமை’ப் பிரச்சினைகளையும் சுயமரியாதைக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது. தமிழ்நாட்டை ஜாதி வெறிக்களமாக மாற்றிடும் சமுதாய ஆபத்துகளை எந்த அரசியல் கட்சியும் கண்டு கொள்வதே இல்லை. ஓட்டு அரசியல் அவர்களைத் தடுக்கிறது. இந்தப் பின்னணியில் தான் திராவிடர் விடுதலைக் கழகம் - “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்ற முழக்கத்தோடு மக்கள் சந்திப்பு பரப்புரை இயக்கங்களை நடத்த திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் சமூக ஒற்றுமைக்கும் சமத்துவ உணர்வுக்கும் ஜாதிய அமைப்புகள் சவால்விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வெறியூட்டல்களை எதிர்கொள்வதில் அலட்சியம் காட்டினால் தமிழகம் ஜாதி வெறிக் களமாகிவிடும் ஆபத்தினை சமுதாயக் கவலை கொண்ட இயக்கங்கள் உணர வேண்டும்.

 ஜாதிவெறியை உசுப்பிவிட்டு, தீண்டாமையை நியாயப்படுத்தும் ஜாதிவெறி சக்திகள் மீது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தமிழக காவல்துறை முன் வரவேண்டும்.

Pin It