1976ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அவசர நிலையைப் பிரகடனம் செய்து, அடிப்படை உரிமைகளை முடக்கியதோடு, ‘மிசா’ எனும் ஆள் தூக்கி சட்டத்தின் கீழ் விசாரணையின்றி ஓராண்டு காலம் தனது ஆட்சியை எதிர்த்தவர்களை சிறையில் போட்டார். அந்த கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்த வீராதி வீரர்களாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இப்போது மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் சிறை செல்ல அஞ்சி, இந்திராகாந்தியிடம் மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் குவித்தவர்கள் என்பதே உண்மையான வரலாறு. ஆனாலும், இப்போது பா.ஜ.க.வின் முன்னணி தளபதியாக வலம்வரும் பார்ப்பனர் சுப்ரமணியசாமியே எழுதிய கட்டுரை ஒன்று கிடைத்திருக்கிறது. ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் 2000ஆம் ஆண்டில் ஜூன் 13ஆம் தேதி, சுப்ரமணியசாமி இக்கட்டுரையை எழுதினார். அப்போது இவர் பா.ஜ.க.வில் இல்லை.

       “பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் பெரும்பாலோர், அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் துரோகிகளாகவே மாறிவிட்டார்கள். இதற்கான ஆதாரங்கள், மகாராஷ்டிரா சட்டமன்ற நிகழ்வுகளின் ஆவணங்களிலேயே பதிவாகியுள்ளன. அப்போது புனேயில் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாலாசாகேப் தேவரஸ். இந்திரா காந்திக்கு பல மன்னிப்பு கடிதங்களை எழுதினார். ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்துடன் (அப்போது இந்திரா ஆட்சிக்கு எதிராக முழுப் புரட்சி இயக்கம் நடத்தியவர் ஜெயப்பிரகாஷ் நாராயண்) ஆர்.எஸ்.எஸ். உறவை துண்டித்துக் கொண்டுவிட்டது என்றும், இந்திரா காந்தி கொண்டு வந்துள்ள அரசுத் திட்டங்களுக்கு ஆதரவாக (20 அம்ச திட்டம் என்று அதற்குப் பெயர்) மக்களிடையே பணியாற்ற ஆர்.எஸ்.எஸ். தயாராக இருக்கிறது என்றும் தொடர்ந்து கடிதங்களை எழுதினார்.

       ஆனால், இந்திரா காந்தி எந்த கடிதத்துக்கும் பதில் எழுதவில்லை. வாஜ்பாய், இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் அரசுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் தான் பங்கேற்க மாட்டேன் என்று உறுதி தந்து, 20 மாதம் நீடித்த அவசர நிலை காலத்தில் கைதாகியும், ‘பரோல்’ விடுதலையிலேயே இருந்தார். அரசுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கமுடன் செயல்படுவேன் என்று ஏராளமான முன்னாள் ஜனசங்கத் தலைவர்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, சிறையிலிருந்து வெளிவரத் துடித்ததை அகாலிதளத் தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா, தனது நூலில் விரிவாக எழுதியுள்ளார். இத்தகைய பா.ஜ.க.வினரும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் அவசர நிலையின் 25ஆவது நினைவுநாளை அறிவித்திருப்பது கேலிக்குரியது” என்று சுப்ரமணியசாமி, அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

       இப்போது அதே சுப்ரமணியசாமி, அதே பா.ஜ.க., ஆர்.எஸ்ஸோடு சேர்ந்து கொண்டு, ‘அவசர நிலை’ எதிர்ப்புகளையும் தங்களின் ‘வீர தீர சாகசங்களையும்’ மக்களிடையே பேசுகிறார். பார்ப்பனர்களின் ‘பொய்’களுக்கு இந்த நாட்டில் “வேதங்கள்” என்ற பெருமையும் புனிதமும் உண்டு தானே! (சு. சாமியின் இந்தக் கட்டுரையை தேடிப் பிடித்து, ‘தி ரேடிக்கல் ஹீயமனிஸ்ட்’ மாத இதழ் இப்போது வெளியிட்டுள்ளது)

Pin It