"தீராநதி"யில் "இருபதாம் நூற்றாண்டில் கம்யூனிஸமும் தமிழும்" என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார் தமிழவன். சில கம்யூனிஸ்ட்டுகள் மீது சில பிரியமான வார்த்தைகளை ஆங்காங்கே உதிர்த்துக் கொண்டு மிக மோசமான குற்றச்சாட்டுகளை கம்யூனிஸ்டு இயக்கத்தின் மீது வைத்துள்ளார்.

"தமிழ்க் கம்யூனிஸத்தில் தமிழ்வேர் இல்லாததால் தான் தமிழக கம்யூனிஸ்ட்டுகள் அன்று ஆங்கிலத்தை நம்ப வேண்டியிருந்தது. அதனால் தான் பாரதிதாசனை அன்றைய கம்யூனிஸ்ட்கள் ஒதுக்கி வைத்திருந்தனர், பிரிவினை வாதி என்று" என்பது அதில் ஒன்று.

இதே கட்டுரையில் பெனடிக்ட் ஆண்டர்சன், ஹோமி பாபா, போர்ஹெஸ், டி.எஸ். எலியட் பற்றியெல்லாம் சொல்லிச் செல்கிறார் தமிழவன். இவர்களைப் புரிந்த கொள்ள ஆங்கிலத்தை நம்பினாரா இல்லையா என்பதை அவர் ஏனோ விளக்கமில்லை. "எல்லோரும் எல்லா ப் பெருஞ்செல்வமும் எய்தலாலே இங்கே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை" என்று கம்பனும் பொதுவுடைமை பேசியிருக்கிறான். தனியுடமைக் கொடுமைகள் வெளிப்பட்ட உடனேயே பொதுவான பொதுவுடைமைச் சிந்தனைகளும் பிறந்துவிட்டன. தமிழும் அதற்கு விலக்கு அல்ல; தமிழிலும் அந்த வேர் உண்டு. ஆனால், மார்க்சியம் தான் அதையொரு விஞ்ஞான பூர்வக் கோட்பாடாக வடித்துத் தந்தது. அது பிறந்தது மேற்கு ஐரோப்பாவில் அதைப் புரிந்து கொள்ள ஆங்கிலத்தைத் தான் நம்ப வேண்டிருந்தது. அது உலக வரலாற்று நிகழ்வு. அதையும் ஒரு குற்றமாகச் சொல்வது என்றால் "எல்லாப் பழியும் சமணருக்கே" என்று அந்தக் காலத்தில் பிராமணியவாதிகள் சகல பொல்லாப்பையும் அவர்கள் மீது தூக்கிப் போட்ட கதைதான்.

முதல் குற்றச்சாட்டே அபத்தமானது என்றால் அதிலிருந்து பிறந்த இரண்டாவது அதைவிட அபத்தமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆங்கிலத்தை நம்பியதால் தான் பாரதிதாசனை ஒதுக்கி வைத்தார்களாம் கம்யூனிஸ்டுகள்! பாரதிதாசனைக் கம்யூனிஸ்ட்டுகள் ஒதுக்கி வைத்ததில்லை, கம்யூனிஸ்ட்டுகளைப் பாரதிதாசனும் ஒதுக்கி வைத்ததில்லை என்பதுதான் வரலாறு. பொதுவுடைமை கோட்பாட்டை புகழ்ந்தும், தமிழகத்தில் அதன் முன்னோடியாகிய சிங்காரவேலரை ஏற்றிப் போற்றியும். பாவேந்தர் பாடியவை மிகப் பிரபலமானவை.

கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரின் "திராவிட நாடு" கோரிக்கையை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. அந்தக் கவைக்குதவாத கோரிக்கையை பின்னர் பெரியாரே கைவிட்டார் என்பதும் சரித்திரம். ஆனால், அவரது சிந்தனைக்கு ஆட்பட்ட பாவேந்தர் அதை ஆதரித்தும் பாடினார். அதைத்தான் கம்யூனிஸ்ட்டுகள் விமர்சித்தார்கள். அதே நேரத்தில் அவரின் தமிழ் உரிமை, வருணாசிரம எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்புக் கவிதைகள் உளமாரப் பாராட்டினார்கள், உச்சி முகர்ந்து கொண்டாடினார்கள்.

செம்மலரின் கே.முத்தையா பற்றி போகிற போக்கில் கூறிக் செல்கிறார் தமிழவன். அவர் அறிவாரோ மாட்டாரோ கே.முத்தையா தலைமையில் உருவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி-பாரதிதாசன்-பட்டுக்கோட்டை ஆகிய முப்பெருங்கவிஞர்களைத் தனது இலக்கிய முன்னோடிகளாகக் கொண்டிருந்தது, இப்போதும் கொண்டிருக்கிறது என்பதை.

கம்யூனிச இயக்க வரலாறை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு இஷ்டம் போல எழுதுவது தான் தமிழவன் போன்ற அதி நவீன வாதிகளின் போக்கை உள்ளது. ஏதோ இன்றுதான் பிறந்தவர் போல பாவேந்தரைப் புகழ்ந்து எழுதும் இவர் அவரின் அந்நாளைய திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை சரி என்று சொல்கிறாரா என்பது தெரியவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் இவரைப் போல நாளுக்கொரு வேஷம் கட்டுகிறவர்கள் அல்ல. ஒரு படைப்பாளி வெளிப்படுத்தும் சிந்தனைகளைப் படைப்பின் அழகில் மயங்கி அப்படியே ஏற்பது இல்லை. அந்தச் சிந்தனைகளின் தராதரம் பற்றிய மதிப்பீட்டையும் செய்கிறார்கள். சகல படைப்புகளையும் வைத்து படைப்பாளி பற்றிய ஒரு ஒட்டுமொத்தமான கணிப்பையும் வெளியிடுகிறார்கள். இப்படிப்பட்ட போக்கு பல அதி நவீனவாதிகளுக்கு இல்லை. அவர்கள் திடீரென்று ஒரு படைப்பாளியை புகழ்வார்கள். பிறகு திடீரென்று அவரையே குளத்தங்கரைக் கல்போலத் தூக்கிப்போட்டு சாத்துவார்கள். இதே தமிழவன் நாளை பாவேந்ததைக் கவிஞரே இல்லை என்று தீர்ப்புச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்போது வட அவர் பாவேந்தரைப் புகழ்வதன் காரணம் கம்யூனிஸ்ட்டுகளைச் சாட வேண்டும் என்பது. "(பாரதிதாசனிடம் இருந்த) இந்தத் தமிழ்ப்பற்று கம்யூனிஸ்டுகள் யாரிடமும் தீவிரமாக ஏற்படவே இல்லை. தமிழ்ப் பற்றை பாசிசம் என்றே குறிப்பிட்டு வந்தார்கள்' என்கிறார். இவரைப் போன்றவர்கள் தங்களது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எந்த மேற்கோளையும் பொதுவாகத் தருவதில்லை. அவர்கள் சொன்னாலே அது ஆதாரப்பூர்வமானதுதான் என்று நாம் நம்ப வேண்டும்!

உலகில் நாசிசமும் பாசிசமும் தலைவெறித்தாடிய போது அவற்றை எதிர்த்து உலக அளவிலும் உள்ளூர் அளவிலும் போராடியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். எழுத்தால் கலையால் அதைச் செய்தவர்கள் இடதுசாரிப் படைப்பாளிகள் விமர்சகர்கள். பாசிசம் பற்றி அவர்களுக்கு ஒரு திட்டவட்டமான கருத்தியல் இருந்தது. அந்தச் சொல்லாட்சியை அவர்கள் மனம்போன போக்கில் ஒருவர் மீது வீசுவதில்லை.

திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை முதலில் பெரியாரின் தி.க.வும், பின்னர் அண்ணாவின் திமுகவும் முன்வைத்த போது அதை திக மட்டுமல்ல, திமுகவும் பின்னர் அதைக் கைவிட வேண்டி வந்ததிலிருந்தே அந்த எதிர்ப்பின் சரித்திர நியாயத்தை எவரும்புரிந்து கொள்ளலாம்.

வேடிக்கை என்னவென்றால் நியாயமான தமிழ்ப் பற்றுக்கும் திராவிட நாடு கோரிக்கைக்கும் சம்பந்தம் இல்லாமலிருந்தது. இங்கே எழுந்தது மொழிவாரி தேசிய உணர்வுதானே அன்றி, எப்போதோ தோன்றி இப்போது கலந்து போயிருந்த திராவிட மரபின உணர்வு அல்ல. இறுக்கிப் பிடித்துக் கேட்டால் பிராமணரல்லாதாரைத் தான் திராவிடர்கள் என்கிறோம் என்றார்கள். அப்படியென்றால் அவர்கள் தாமே இந்தியா முழுக்கப் பெருவாரியாக இருக்கிறார்கள், பிறகு எதற்கு தென்னிந்தியாவை மட்டும் தனிமையாகப் பிரித்துக் கேட்கிறீர்கள் என்கிற கேள்விக்கு அவர்களிடம் விடை இல்லை.

இந்த உள் முரண்களை வைத்துக் கொண்டு ஒரு புறம் தமிழ்ப்பற்றும், மறுபுரம் நாட்டுப் பிரிவினையும் பேசினார்கள். திராவிட இயக்கத்தவர். நியாயமான தமிழ்ப்பற்றைத் தங்களது அநியாயமான பிரிவினைக் கோரிக்கைக்குப் பயன்படுத்த முனைந்து போதுதான் அதை வன்மையாக விமர்த்தார்கள் கம்யூனிஸ்ட்டுகள். அதற்காக திராவிட இயக்கத்தை பாசிச இயக்கம் என்று முத்திரை குத்தி ஒதுக்கித் தள்ளியதில்லை. பிரிவினையைக் கைவிட்ட திமுகவோடு 1967 தேர்தலில் மார்க்சிஸ்டு கட்சி தொகுதி உடன்பாடு கண்டதிலிருந்து இதைத் தெளிவாக உணரலாம். இதற்கும் முன்னதாக 1952 தேர்தலில் பெரியாரின் தி.க. ஆதரவைக் கம்யூனிஸ்ட்டுகள் பெற்றதிலிருந்தும் உணரலாம். தமிழவனுக்கு இப்போதுதான் திராவிட இயக்கத்தின் மீது திடீர்ப் பாசம் பிறந்திருக்கிறது! இதுவும் எத்தனை நாளைக்கோ?

இத்தகைய சரித்திர அறியாமையோடே கம்யூனிஸ்ட்டுகள் மீது ஒஐ பெரும் பழியை சிறிதும் கூச்சமின்றி வீசுகிறார் புண்ணியவாளர். அது-" இடதுசாரிக் கருத்துடைய தமிழர்கள் இன்றும் ஈழத்திலும் உலகம் முழுவதும் தமிழ்ப்பற்றும் கம்யூனிஸச் சிந்தனையும் இணைய முடியாதென்றே உள் மனதில் பெருவாரியாய் கருதுகிறார்கள்". பெருவாரியானவர் உள் மனதில் புகுந்து தடவித் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார் இந்த "உண்மையை" இந்த அதி மேதாவி!

தமிழகத்தில் தமிழே கட்சி மொழியாக, கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் 1955-56 லேயே வாதாடியவர்கள் கம்யூனிஸ்டுகள். அப்போது திமுக அங்கே இல்லை. காங்கிரஸ் ஆட்சியாளர்களை தமிழ் வளர்ச்சியில் அக்கறை காட்டுமாறு வற்புறுத்தியதே கம்யூனிஸ்ட்டுகள் தாம். தமிழக சட்டமன்றத்தில் வரவு-செலவு அறிக்கை மீது தமிழில் பேசி, பொருளாதார விஷயத்தையும் நம் தாய்மொழியில் விவாதிக்க முடியும் என்று நிரூபித்தவரே கம்யூனிஸ்ட்டு பி.ராமமூர்த்தி தான். மெய்யான கம்யூனி1ட் என்றால் மெய்யான தாய்மொழியில் பற்றாளன். பாட்டாளிகளின் வழிகாட்டி தாய்மொழியில் பற்றில்லாமல் எப்படி இருப்பான்? இதற்கு கச்சிதமான உதாரணங்கள் ஜீவா, முத்தையா.

தற்காலத்து உதாரணம் வேண்டுமென்றால் தமிழைச் செம்மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று புலவி வரை சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய அமைப்பு முத்தையா உருவாக்கிய தமுஎகச. இப்போதும் தமிழைச் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்க வேண்டும், மத்தியிலும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பி வருகிற அமைப்பு ஐ.நா.அறிக்கை அடிப்படையில் ராஜபக்சேயைப் போர்க்குற்றவாளியாக நடத்துகிற அமைப்பு. இந்த நிலையில் தமிழ்ப்பற்றையும் இடது சாரிகளையும் பிரிக்க முனைவது மலிவான அரசியல் தந்திரம். இந்த வேலை இந்த இலக்கிய விமர்சகர்களுக்கு எதற்கு?

அதுசரி, இவ்வளவு எழுதுகிற தமிழவன் போன்ற அதி நவீனவாதிகள் தமிழின் வளர்ச்சிக்கு என்ன கோரிக்கையை வளர்த்தெடுத்தார்கள். எத்தனை போராட்டங்களை நடத்தினார்கள்? ஒரு வேளை, தனி ஈழம் என்று பிரிவினை கேட்டால் தான் தமிழ்ப் பற்றாளர் என்று ஒப்புக் கொள்வார்களோ? மாநில சுயாட்சி எனும் காரியார்த்தமான கோரிக்கை வைத்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்களோ? அப்படிப் பார்த்தாலும் இவர்களும் சரி, இவர்களை ஆதரிக்கிற பத்திரிகைகளம் சரி. காலமெல்லாம் ஈழப் போராளிகளைக் கரித்துக் கொட்டியவர்கள் அல்லது கண்டுகொள்ளாதவர்கள் ஆயிற்றே? இப்போது என்ன திடீர்க் கரிசனம்? வேறு ஒன்றும் இல்லை. இலங்கை தமிழர்கள் கிஞ்சித்தும் இறக்கமின்றி கொடூரமாக எடுக்கப்பட்டு விட்டதால் இப்படிக் திடீர்ப் பாசம் காட்டுகிறார்கள். பரிதாபத்திற்குரிய அந்த ஜீவன்களை மேலும் உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளைத் தாக்க எதையும் பயன்படுத்தார்கள், இதையும் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுகள் இதற்கெல்லாம் அசர மாட்டார்கள் என்பதை தமிழவன் போன்றவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். தமிழ்ப் பற்று எங்களுக்கு இயல்பானது. "தமிழர்கள் அகில உலகச் சூழலில் அவமதிக்கப்படும் சூழலில் அவர்கள் தங்கள் பெருமையைக் கூறுவது ஒரு வகையான 'எதிர்ப்புச்' செயலாகம்" என்று அவர் தனது கட்டுரையை முடித்திருக்கிறாரே அப்படி அதுவொரு செயல் தந்திரம் அல்ல எமக்கு. உலகச்சூhல் எப்படி இருந்தாலும் கம்யூனிஸ்டுகளுக்கு தமிழ்ப பற்று இருக்கும். "அவமதிக்கப்படும் போது" மட்டும் பற்று என்றால் அது இல்லாத போது பற்று தேவையில்லை எனும் நிலைபாடு தமிழவனுக்கு இருக்கலாம், கம்யூனிஸ்ட்டுகளுக்கு இல்லை.

தமிழின், தமிழரின் நியாயமான பெருமையை எடுத்துச் சொல்வது என்பது சுய நலச் சுரண்டும் வர்க்கத்திற்கு தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் உத்தியாக இருக்கலாம், பொது நலம் பேணும் பாட்டாளிகளுக்கோ அது இயல்பானது, வர்க்கப் போராட்ட உத்வேகத்திற்குத் தேவையானது. வெள்ளைக்காரர்களைப் போல நுனி நாக்கில் ஆங்கிலம் பேச ஆசைப்படும் அதி நவீன வாதிகள் கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தமிழ்ப்பற்று இல்லை என்பது 2 ஜி அலைக்கற்றை போல ஒரு மகா மோசடி. இதைக் கம்யூனிஸ்டுகள் அறிவார்கள்.

முற்போக்கு கலை-இலக்கியவாதிகள் இன்னும் நான்கு அறிவார்கள். இதே தமிழவனின் "ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்' நாவலைப் படித்துவிட்டு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் தவித்தவர்கள் அவர்கள்! இப்படி எந்தத் தமிழனுக்கும் புரியாமல் தமிழ் எழுதுவது தான் "தமிழ்ப்பற்று" என்றால் அது எங்களிடம் இல்லை தான் என்று முற்போக்காளர்கள் உற்சாகமாகக் கூவுகிறார்கள்!

Pin It