மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ‘வைகோ’ சென்னையில் அளித்த பேட்டியில் தி.மு.க. தலைவர் கலைஞர் பற்றி, அவர் பிறந்த ‘ஜாதி’யை மறைமுகமாக சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் வெளியிட்ட கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளித்தன.

‘வாழ்நாளில் செய்த பெரிய குற்றம், மன்னிப்புக் கோருகிறேன்’ என்று வைகோ உடனடியாக வருத்தம் தெரிவித்ததை ஒரு நல்ல முன் மாதிரியாகக் கருதி வரவேற்றாலும், அடிமனதில் ஆழமாக ஊறிருக்கும் உணர்வுகள்தான் ஆவேசம் கொள்ளும்போது, இயல்பாகவே வெளிவரும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். மனித குலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ‘பாலியல் தொழில்’ செய்வோரை சுட்டி, வைகோ இழிவாகப் பேசியதற்காக கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டதைப்போல், பெண்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என்பதே நமது கருத்து.

1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்திய பெரியார், மாநாட்டுக்கு மக்களை அழைத்தபோது, “தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டவர்களும் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று ‘குடிஅரசு’ ஏடு வழியாக அழைத்தார். அத்தகைய தலைவரின் இலட்சியங்களை ஏற்று செயல்பட்டு வரும் இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம், பெண்களையும் - ஜாதியை சுட்டியும் இழிவுபடுத்தும் இதுபோன்ற கருத்துகளை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.

- திராவிடர் விடுதலைக் கழகம்