கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்ட விரோதமான செயல். தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொளத்தூர் மணி சகோதரர் டி.எஸ்.பழனிச்சாமி பெயரில் வழக்கறிஞர் துரைசாமி, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
எந்த ஆவணமும், சான்றாதாரமும் இல்லாமல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சட்ட விரோதமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிராக கொளத்தூர்மணி செயல்பட்டதாகவும், தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதாகவும் 10.3.2009 அன்று அவர் பிறப்பித்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் ஆணை கூறுகிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் 3(2)வது பிரிவு - ஒரு நபர், அரசின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டாலோ, பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டாலோ, சமூகத்துக்கு அடிப்படைத் தேவையான பொருள் வழங்குதல் மற்றும் சேவைகளை நிர்வகிப்பதற்கு எதிராக செயல்பட்டாலோ, பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்றுதான் கூறுகிறது. ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவரோ சட்டத்திலே குறிப்பிடப்படாத ஒரு காரணத்தைக் கூறி (ஒருமைப்பாடு - இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக) சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார். எனவே தனது சுய சிந்தனையை சரியாகப் பயன்படுத்தியே சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று சட்டம் கூறுவதற்கு எதிராக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்பட்டிருக்கிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் இந்த ஆணை - 10.3.2009 அன்று மதுரை மத்திய சிறையில் கொளத்தூர் மணியிடம் வழங்கப்பட்டது. அடுத்த நாளே அதாவது 11.3.2009 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றொரு ஆணையை கொளத்தூர் மணிக்கு வழங்கினார். இது ஏற்கனவே வழங்கப்பட்ட ஆணைக்கான திருத்தம். முதலில் வழங்கப்பட்ட ஆணையில் நாட்டின் இறையாண்மை ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது தவறு என்றும், எனவே அதற்கு பதிலாக பொது ஒழுங்குக்கு எதிராக செயல்பட்டதாக திருத்திப் படிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவரின் இரண்டாவது ஆணை கூறியது.
தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் இப்படி திருத்தத்துக்கான ஆணை வழங்குவதற்கு எந்தப் பிரிவும் கிடையாது. மார்ச் 10 ஆம் தேதி ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு எதிராக கொளத்தூர் மணி செயல்பட்டார் என்று தனது விருப்பத்துக்கேற்ப, ஒரு முடிவை செய்த மாவட்ட ஆட்சித் தலைவர், அடுத்த நாள் பொது ஒழுங்குக்காக செயல்பட்டதாக, தனது முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார். என்றாலும் தனது முடிவை மாற்றிக் கொண்டதற்கான சான்று ஆவணம் ஆதாரம் எதையும் காட்டவில்லை. பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டார் என்பதற்கும் அந்த சான்று ஆதாரத்தையும் அவர்முன் வைக்கவில்லை. எனவே தனது சுய சிந்தனையைப் பயன்படுத்தாமலே திருத்த ஆணையை வெளியிட்டுள்ளார். அதுவும்கூட எழுத்துப் பிழை போன்ற சிறு தவறுகளுக்கு திருத்தங்கள் வெளியிடலாமே தவிர, கைது செய்யப்பட்டதற்கான உளப் பூர்வமான காரணத்துக்கே திருத்தங்களை வெளியிட முடியாது. இப்படி ஒரு திருத்தத்தை, தானாகவே முடிவுசெய்து வெளியிட்டாரா அல்லது அதற்கான புதிய சான்று ஆவணங்கள் கிடைத்துதான் வெளியிட்டாரா என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன், சமூக விரோத செயல்களில் ஈடுபடாமல் (கொளத்தூர் மணியை) தடுக்கவே இந்த ஆணை பிறப்பிக்கப் பட்டது என்கிறார், மாவட்ட ஆட்சித் தலைவர். அவர் சமூக விரோதச் செயல் என்று எதைக் குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை. அதற்கான ஆதாரங்களை முன் வைக்காமலே அவ்வாறு குறிப்பிடுகிறார். வழக்கைப் பதிவு செய்த திண்டுக்கல் காவல் நிலைய ஆய்வாளரே தனது வழக்குப் பதிவில் (கொளத்தூர் மணி) சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறவில்லை. ஆனால், கைது ஆணை பிறப்பித்த அதிகாரி (மாவட்ட ஆட்சித் தலைவர்) - வழக்கில் கூறப்படாதவற்றையும் மீறி அதீதமாக செயல்பட்டுள்ளார்.
இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு எதிராக (கொளத்தூர் மணி) செயல்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளது, அவரது வரம்பு மீறிய நடவடிக்கையாகும். இந்த அடிப்படையில், கைதாணை பிறப்பிக்க, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டப் பிரிவுகள் எதுவும், அதிகாரம் வழங்கவில்லை. கைது பற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பற்றி கொளத்தூர் மணிக்கு சட்டப்படி தெரிவிக்கப்பட வேண்டிய தகவல் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை.
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி தாக்கல் செய்த பிணை மனு நிலுவையில் உள்ளது. அதன் மீதான தீர்ப்பு வரவில்லை. பிணை மனு நிலுவையில் இருக்கும் போதே - மாவட்ட ஆட்சித் தலைவர் ஓராண்டு வெளியே வர இயலாத தடுப்புக் காவல் சட்டத்தைப் பிறப்பிப்பது நீதிமன்ற நடவடிக்கையில் குறுக்கிடுவதாகும்.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் தேசியப் பாதுகாப்பு சட்டத்துக்கான இந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணையை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் மனுவைத் தாக்கல்செய்தனர். நீதிபதிகள் தர்மராவ், ஆர். சுப்பையா முன் 25.3.2009 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் பதில் தருமாறு மத்திய மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கொளத்தூர் மணி கைது சட்ட விரோதம்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
- விவரங்கள்
- பெரியார் முழக்கம் செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009